For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஜேம்ஸ் கேமரூன்.... இப்போது இயற்கையைப் பாதுகாக்கும் போராளியாக!

  By Chakra
  |

  James Camerone
  சுற்றுச் சூழலின் பெயரில் வெறுமனே திரையில் போதித்து கல்லா கட்டும் ஒரு சினிமா வியாபாரி அல்ல தாம்... நிஜமான சமூக அக்கறை கொண்ட ஒரு இயற்கை ஆர்வலர்', என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ளார் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

  அவதார் படத்தில், பண்டோரா கிரகத்தின் இயற்கைச் சூழலை அரிய கனிமத்துக்காக அமெரிக்கப் படைகள் அழிக்க முற்படுவதையும், அதை அந்த கிரகத்து பழங்குடிகள் எதிர்த்துப் போராடி ஜெயிப்பதாகவும் சித்தரித்திருந்தார் ஜேம்ஸ் கேமரூன்.

  இப்போது நிஜத்துலும் கிட்டத்தட்ட அதே போன்றதொரு ஆபத்தும் போராட்டமும் நடக்கவிருக்கிறது.

  பிரேஸில் நாட்டின் ஜிங்சூ நதியின் குறுக்கே கட்டப்படவிருக்கும் ஒரு அணையால் அமேசான் பகுதியின் இயற்கைக் கொடையான மழைக் காடுகள் முற்றாக அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உலகின் இயற்கை இயங்கு நிலையே மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இந்தத் திட்டத்துக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்தவிருக்கிறார் கேமரூன்.

  வற்றாத ஜீவநதியாக பெரும் நீர்ப்பெருக்கோடு அமேசான் காடுகளைத் தழுவி ஓடிக் கொண்டிருக்கிறது ஜிங்சூ நதி.

  இந்த நதியின் குறுக்கேதான் உலகின் மூன்றாவது பெரிய அணை என்று சொல்லத்தக்க அளவில் பிரமாண்ட அணையைக் கட்டவிருக்கிறது பிரேசில் அரசு. பெலோ மாண்டி டேம் எனப்படும் இந்த அணை மட்டும் கட்டப்பட்டால், ஜிங்சூ நதி வருடத்தின் சில மாதங்களுக்கு நம்ம ஊர் காவிரி மாதிரி வறண்டு போகும் அபாயம் உள்ளதாம். மேலும் மழைக் காடுகள் அழிக்கப்பட்டு, மழை வளம் சூறையாடப்படுவதோடு, அமேசான் காடுகளின் தொன்மைக் குடி மக்கள் முற்றாக அழியும் அபாயமும் உள்ளது என சுற்றுச் சூழல் ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

  இந்த அணை மட்டும் கட்டப்பட்டால், 500 சதுர கிலோ மீட்டர் பரப்பில் உள்ள மழைக்காடுகள் அழிக்கப்பட வேண்டும். 20000க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களை அப்புறப்படுத்தியாகவேண்டும்.

  ஏற்கெனவே பன்னாட்டு வேளாண் வர்த்தக நிறுவனங்களால் அமேசான் காடுகளின் இயற்கை வளம் சூறையாடப்பட்டு வருகிறது. அர்ஜன்டைனா, பெரு போன்ற நாடுகளில் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதாகக் கூறி அமேசான் காடுகளை அழித்துவிட்டனர்.

  இப்போது பிரேசிலின் மிக முக்கிய, பெரும் நிலப் பரப்பையும் அழிக்கப் பார்ப்பதாகக் கூறி, அமேசான் பகுதியில் வசிக்கும் 13 முக்கிய பழங்குடி இனத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த இனங்களின் தலைவர்கள் பிரேசிலின் நகர் ஒன்றில் கூடிப் பேசி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்கின்றனர். கடந்த திங்களன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கேமரூன், இந்தக் கூட்டத்தில் முக்கிய அழைப்பாளராகப் பங்கேற்கிறார். அடுத்த வாரம் முதல் இன்னும் பெருமளவிலான போராட்டங்களை முன்னெடுக்கப் போகிறாராம் பழங்குடி மக்களுடன் இணைந்து.

  டைம்ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இப்படிக் கூறியுள்ளார்:

  "அவதார் படத்தில் இயற்கைக்கு எதிராக என்னவெல்லாம் நடந்ததோ அதுதான் பிரேசிலில் நடக்கிறது. ஏன்... இந்தியா, சீனாவிலும் கூட அதுதான் நடந்து வருகிறது. பாரம்பரியமும், மக்களின் வாழ்வாதாரங்களும் நிறைந்த தொன்மை கிராமங்கள் அழிக்கப்படுகின்றன, உள்கட்டமைப்புகள் எனும் பெயரில். மனிதனின் பிரச்சினைகள் ஆரம்பிப்பதே அதிலிருந்துதான்.

  பிரேசில் அரசு பிடிவாதமாக இந்த அணையைக் கட்டுமானால் அங்கு பேராபத்து விளைவது நிச்சயம்..."

  பெலோ மாண்டி அணை கட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டது பிரேசில். ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக இத்தனை காலமும் தடைபட்டு வந்தது. இப்போது 11 பில்லியன் டாலர் செலவில் இந்த அணையைக் கட்ட தீவிரமாக உள்ளது பிரேசில்.

  இதைத் தொடர்ந்து போராட்டங்களும் வலுப்பெற ஆரம்பித்துள்ளன. கேமரூன் இந்தப் போராட்டத்துக்கு முழு ஆதரவளித்து களமிறங்கியிருப்பதால், சர்வதேசத்தின் கவனமும் இந்த அணைப் பிரச்சினை மீது மையம் கொண்டுள்ளது.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X