சினிமாவை விட்டு விலகுறேனா? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. அதிரடியாக மறுத்த கோஸ்ட் ரைடர் நடிகர்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டின் அதிரடி ஆக்ஷன் ஹீரோவான நிக்கோலஸ் கேஜ் ஓய்வெடுக்கப் போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தொடர்ந்து சினிமாவில் தான் நடித்துக் கொண்டே இருப்பேன் எனக் கூறியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கோஸ்ட் ரைடர், நேஷனல் டிரெஷர், டிரைவ் ஆங்க்ரி உள்ளிட்ட ஏகப்பட்ட ஹாலிவுட் ஆக்ஷன் படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தியவர் நிக்கோலஸ் கேஜ்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிப்புக்கு நீங்க ஓய்வு கொடுக்கப்போறீங்களா என்கிற கேள்வி எழுந்ததும், அதற்கு வாய்பே இல்லை என அதிரடியாக மறுத்துள்ளார்.

நிக்கோலஸ் கேஜ்
1982ம் ஆண்டு வெளியான 'Fast Times at Ridgemont High' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நிக்கோலஸ் கேஜ். பிரபல அதிரடி ஆக்ஷன் ஹீரோவான இவருக்கு தற்போது 57 வயதாகிறது. ரேசிங் வித் தி மூன், காட்டன் கிளப், மூன்ஸ்டிரக், டைம் டு கில், கோஸ்ட் ரைடர், நேஷனல் டிரெஷர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் இவர் நடித்து அசத்தி உள்ளார்.

புதையலை தேடி
2004ம் ஆண்டு இயக்குநர் ஜான் டர்ட்டுலாப் இயக்கத்தில் வெளியான நேஷனல் டிரெஷர் திரைப்படம் நிக்கோலஸ் கேஜை உலகளவில் பிரபலமாக்கியது. புதையலை தேடி இவர் செய்யும் சாகச பயணம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து 2007ம் ஆண்டு நேஷனல் டிரெஷர்: புக் ஆஃப் சீக்ரெட்ஸ் படமும் வெளியாகி வெற்றிப்பெற்றது.

கோஸ்ட் ரைடர்
அதே 2007ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான கோஸ்ட் ரைடர் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. தலை முழுக்க மண்டை ஓட்டில் நெருப்பு எரிந்தபடி இவர் பேய்களை பந்தாடும் விதத்தை பார்த்த ரசிகர்கள் கோஸ்ட் ரைடர் படத்திற்கு அடிமையாகி விட்டனர். 2011ம் ஆண்டு கோஸ்ட் ரைடர் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. மேலும், பல பேய் படங்களில் ஹீரோவாக இவர் நடித்துள்ளார்.

ரிட்டயர் ஆகப்போவதில்லை
ரிட்டயர்மென்ட் பிளான் எனும் டைட்டிலில் நடிகர் நிக்கோலஸ் கேஜ் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், விரைவில் நிக்கோலஸ் கேஜ் சினிமாவை விட்டு விலகப் போகிறார் என வதந்திகள் பரவின. இந்நிலையில், சமீபத்தில் நிக்கோலஸ் கேஜ் அளித்த பேட்டியில் அப்படி ஒரு எண்ணமே தனக்கு இல்லை என்று தடாலடியாக கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நல்லா இருக்கிறேன்
சினிமா தான் எனக்கு எல்லாம் நான் ஆரோக்கியமாக ரொம்பவே நல்லா இருக்கிறேன். வயதும் இருக்கிறது. அதனால், என்னால் முடியும் வரை தொடர்ந்து நான் நடித்துக் கொண்டே இருப்பேன். அது மட்டும் தான் எனக்கு உற்சாகத்தை அளிக்கும் என்றும் நிக்கோலஸ் கேஜ் கூறியுள்ளார்.

அடுத்தடுத்து படங்கள்
பேய் பட விரும்பியான நிக்கோலஸ் கேஜ் அடுத்ததாக 'Prisoners of the Ghostland' படத்தில் நடித்து வருகிறார். விரைவில் அந்த படம் வெளியாக உள்ள நிலையில், தனது கைவசம் இன்னும் சில படங்களும் உள்ளதாக தொடர்ந்து தனது நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாக உள்ளதாகவும் நிக்கோலஸ் கேஜ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











