கோடை விடுமுறையை ஆக்கிரமித்த ஹாலிவுட் திரைப்படங்கள்
சென்னை: வழக்கத்தை விட கோடை விடுமுறையில் அதிக திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோடை தமிழ் சினிமாவிற்கு ராசி இல்லாததாக அமைந்தது. பைனான்ஸ் பிரச்சனை காரணமாக பல திரைப்படங்கள் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகாமல் போனது.
ஆனால் குழந்தைகளை கவரும் ஹாலிவுட் படங்கள் வெளியாகி அவர்களை குஷியில் ஆழ்த்தியதோடு வசூலையும் வாரி குவித்துள்ளது. விடுமுறையின் தொடக்கத்தில் டம்போ என்ற பறக்கும் யானைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து உலகமே எதிர்பார்த்த அவெஞ்சர்ஸ் என்ட் கேம் தமிழகத்திலும் சொல்லி அடித்தது. இப்படம் தமிழகத்தில் மட்டும் 60 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இது தமிழ் படங்களுக்கு நிகரான வசூலாகும்.

இதனைத் தொடர்ந்து தற்போது கோடை விடுமுறையின் கடைசி வாரத்தில் அலாவுதீன் திரைப்படம் வெளியாகியுள்ளது. அலாவுதீன் கதை நமக்கு புதிதல்ல. விளக்கை தேய்த்தால் பூதம் வரும் அதே அரேபிய கதைதான். 1992-ம் ஆண்டு அனிமேஷன் திரைப்படமாக வெளியிட்ட டிஸ்னி நிறுவனம் இக்கதையை தற்போது முழுநீள படமாக எடுத்துள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், அலாவுதீன் பூதமாக நடித்துள்ளார். இப்படத்தின் தமிழ் டப்பிங்கிற்கு மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார்.வெள்ளிக்கிழமை வெளியாகிய இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications