twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வீட்டுக்கொரு மரமா, ஆளுக்கொரு மரமா? -நடிகர் விவேக் சொல்லும் பசுமை கணக்கு

    By Shankar
    |

    Vivek
    முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் பத்து லட்சம் மரக்கன்றுகளை நடுகிற பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார் நடிகர் விவேக்.

    இதுவரை சுமார் மூன்றரை லட்சம் மரக்கன்றுகளை நட்டு முடித்திருக்கும் அவர், தனது லட்சியத்தை நிறைவடைய செய்யும் அந்த பத்து லட்சமாவது மரக்கன்றை கடலு£ரில் நட திட்டமிட்டிருக்கிறார். இவ்வளவு மரக்கன்றுகள் அவருக்கு எப்படி கிடைக்கின்றன, அதற்கான முதலீடு யாருடையது என்ற கேள்விகள் எழுமல்லவா? அதை 'தி கிரீன் சென்டீ' என்ற நர்சரி தோட்ட திறப்பு விழாவில் நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார் விவேக். இந்த தோட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சென்டீ என்றால் ஜப்பானிய மொழியில் பூத்துக்குலுங்கும் தோட்டமாம்.

    விவேக் பேசும் போது கூறியதாவது:

    "கலாம் அய்யா என்னிடம் தமிழகம் முழுவதும் டிசம்பர் மாதத்திற்குள் பத்து லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று கேட்டுக் கொண்டவுடன் என்னால் முடியுமா என்ற எண்ணம்தான் முதலில் வந்தது. ஆனால் முயன்றுதான் பார்ப்போமே, அந்த முயற்சியில் தோற்றால் கூட தப்பில்லை. 500 கோடியில் தயாரிக்கும் ராக்கெட்டே புறப்பட்ட பத்தாவது நிமிடத்தில் கடலில் விழுந்துவிடுகிற போது, நமது லட்சியம் சரிவர நிறைவேறாமல் போனால் கலங்கிவிடக் கூடாது. முடிந்தவரை போராடிப் பார்ப்போம் என்று இறங்கினேன்.

    ஆரம்பத்தில் நான் இப்படி நினைத்தாலும் இப்போது எனக்கு முழு நம்பிக்கை வந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, மரங்களை நாம் இப்போது நட வேண்டிய அவசியம் என்ன என்பதை விஞ்ஞான பார்வையோடு கலாம் என்னிடம் விளக்கியிருந்தார்.

    இந்தியா முழுவதுமே 100 கோடி மரங்களை நட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம் எல்லாரும். அப்படி பார்த்தால் வீட்டுக்கு ஒரு மரம் என்று கூட சொல்ல மாட்டேன். ஆளுக்கொரு மரம் நட்டால்தான் அது முடியும்.

    பத்து லட்சம் மரக்கன்றுகளை நான் நட வேண்டும் என்று கிளம்பியபோது ஒவ்வொரு ஊரிலும் எனக்கு பெரிய ஆதரவு கொடுத்தது மக்களும் சமூக அமைப்புகளும்தான். இந்த தோட்டத்தை நான் திறந்து வைக்க வேண்டும் என்று என்னை அழைத்தபோது நான் கேட்டது பணமல்ல. பதிலாக எனக்கு மரக்கன்றுகளை கொடுங்கள். நான் அவற்றை நட்டுக் கொள்கிறேன் என்றேன். நான் கேட்டவுடன் முப்பதாயிரம் மரக்கன்றுகளை தருவதாக கூறினார் தோட்டக்கலை நிபுணர் சரவணன். இவரைப் போன்றவர்களின் உதவியால்தான் நான் இப்படி ஒரு பெரிய காரியத்தை செய்ய முடிகிறது.

    பத்து லட்சம் மரக்கன்றுகளை டிசம்பருக்குள் உங்களால் நட்டு விட முடியுமா? அப்படியே நட்டாலும் அதன் பிறகு அவற்றை பராமரித்து கண்காணிக்க முடியுமா என்று கேட்கிறார்கள். இதுவரை மூன்றரை லட்சம் மரக்கன்றுகளை நட்டு விட்டேன். இந்தப் பத்து லட்சம் மரகன்றுகளும் நடப்பட்டு நல்லபடியாக பரமரிக்கப் பட்டு வருகிறது என்ற பசுமைக் கணக்கை புகைபட ஆதாரத்துடன் நான் கலாம் அய்யா அவர்களிடம் ஒப்படைத்தாக வேண்டும். அவரை நான் ஏமாற்றி விட முடியாது.

    சரவணன் போல தரமான மரக்கன்றுகளை கொடுத்து உதவ பலர் முன் வந்திருகிறார்கள். நான் 'க்ரீன் கலாம்' என்ற இந்த லட்சிய பயணத்தை தொடங்கிய பிறகு தமிழகம் முழுவதும் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்புக்கள் குவிந்த வண்ணம் இருகின்றன. ஒரு நடிகன் என்பதற்காக வரும் அழைப்புகள் அல்ல இவை. நல்ல லட்சியத்துகாக கிடைத்திருக்கும் அங்கீகாரம். ஒரு லட்சியத்தை தேர்ந்தெடுங்கள், அதை நோக்கி போராடுங்கள், அந்த லட்சியப்போராட்டத்தில் நீங்கள் கூட செத்து விடலாம். ஆனால் உங்கள் லட்சியம் ஒருபோதும் சாகாது என்று சொன்னார் சுவாமி விவேகாநந்தர். அவரது வார்த்தைகள்தான் எனக்கு இப்போது வேதம். கலாம் அவர்களின் வழிகாட்டல்தான் எனக்கு வேகம்," என்றார்.

    முன்னதாக நடைபெற்ற கிரீன் சென்டீ திறப்பு விழாவில், தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐஏஎஸ், கே.ஏ.செந்தில்வேலன் ஐபிஎஸ், டாக்டர் முத்துசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். அனைவரையும் தி கிரீன் சென்டீ நிறுவனர் சரவணன் வரவேற்றார்.

    English summary
    Actor Vivek appealed public to make sure of planting a sapling per head with in December 2012.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X