twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மக்கள் ரசனையில் குறையில்லை... நல்ல படங்கள் அதற்கான மரியாதையைப் பெற்றே தீரும்! - வசந்தபாலன்

    By Shankar
    |

    பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் மீது படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் வைக்கும் குற்றச்சாட்டு, 'ரசனை மாறிவிட்டது' என்பதுதான். நல்ல படம் கொடுத்தாலும் ரசிக்கமாட்டேன் என்கிறார்களே என பலரும் புலம்புவதைக் கேட்க முடிகிறது.

    ஆனால் வசந்த பாலன் பார்வை வேறு. மக்கள் ரசனையில் பழுதில்லை. நல்ல படைப்புகள் அவற்றுக்குரிய மரியாதை - அங்கீகாரத்தைப் பெற்றே தீரும், என்கிறார்.

    ஆல்பம் படத்தில் தன் பயணத்தை ஆரம்பித்தவர் வசந்த பாலன். ஆனால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை. வசந்த பாலனுக்கு அது பெரும் ஏமாற்றத்தையும் சோதனைகளையும் தந்துவிட்டது. ஆனால் அவர் மக்களையோ, ரசிகர்களையோ குறை சொல்லவில்லை. அதே நேரம் தன் தரத்தில் சமரசமும் செய்து கொள்ளவில்லை.

    அடுத்த படம் வெயில் கொடுத்தார். வாழ்க்கையில் தோற்றவனின் கதையைச் சொல்லி வென்றார். பாக்ஸ் ஆபீஸில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் அங்கீகாரம் பெற்றது அந்தப் படம்.

    அடுத்த படமான அங்காடித் தெரு, தமிழ் சினிமாவின் புதிய மைல்கல் என்று போற்றப்பட்டது. நல்ல வசூல், பெரிய அளவில் அங்கீகாரம் என வசந்த பாலன் அடுத்த கட்டத்துக்குப் போனார்.

    அடுத்தடுத்து ஜெயித்தாலும், இந்த வழக்கமான கதைகளிலிருந்து வெளியில் வர விரும்பியவர், அரவானைக் கையிலெடுத்தார்.

    பழந்தமிழரின் வாழ்வை மையப்படுத்திய ஒரு கதை. 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் சமூகம், களவை மையமாகக் கொண்டு வாழ்க்கை நடத்திய ஒரு கூட்டத்தின் வாழ்க்கை நெறிகள், சாகஸங்கள், சோகங்கள் என வித்தியாசமான படைப்பை உருவாக்கி முடித்துவிட்டு, மீடியாக்களை சந்தித்து வருகிறார்.

    பிரசாத் லேபில் பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பேட்டி கொடுத்த வசந்த பாலன், தட்ஸ்தமிழுக்கு அளித்த பேட்டி:

    அரவான் எடுக்க உங்களை உந்தியது எது?

    ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை நாம் தரவேண்டும். இந்த எண்ணம் மனதில் உதித்தவுடன், என்னால் வழக்கமான எந்த கதைகள் பற்றியும் யோசிக்கவே முடியவில்லை. என்ன தரலாம், எப்படி உருவாக்கலாம் என மனசு பூரா பரபரவென இருந்தது. ஒரு நாள் காவல் கோட்டம் நாவல் படித்துக் கொண்டிருந்தேன். அது வேறு உலகத்துக்கு என்னை கூட்டிச் சென்றது. அந்தக் கதையில் வரும் ஒரு பத்து பக்க சமாச்சாரம்தான் அரவானுக்கான விதை.

    இதுதான் நாம் எடுக்க வேண்டிய சினிமா. ரசிகர்களுக்கு இப்படி ஒரு தீனிதான் இப்போது அவசியம் என முடிவெடுத்ததும் விறுவிறுவென உருவானது அரவான் திரைக்கதை.

    பொதுவாக, ரசிகர்களின் ரசனை மாறிவிட்டது, நல்ல படங்களை ரசிப்பதில்லை என்று சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். உங்கள் கண்ணோட்டம் என்ன?

    யார் குற்றம் சொல்கிறார்கள் என்றெனக்குத் தெரியவில்லை. ரசிகர்களின் ரசனை அப்படியேதான் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் எனக்குத் தெரியவில்லை. என்ன, மாற்றுப் பொழுதுபோக்குகள் அதிகரித்துவிட்டதால், திரையரங்குக்கு அவர்கள் அடிக்கடி வரமுடியாமல் போயிருக்கலாம். அல்லது வேறு காரணங்கள் இருக்கலாம்.

    ஆனால் நல்ல படங்கள் அவற்றுக்கான அங்கீகாரத்தை ரசிகர்களிடம் பெறத் தவறியதே இல்லை. வெயிலும், அங்காடித் தெருவும் வெளியான போதும் தமிழ் சினிமாவில் இதே சூழல்தானே இருந்தது? என் படங்கள் இரண்டு ஓடிவிட்டதால் இப்படி நான் சொல்லவில்லை. இன்னும் எத்தனையோ நல்ல படங்கள் சரியான திட்டமிடலோடு, உரிய நேரத்தில் வெளியாகி வெற்றியை ஈட்டியுள்ளன.

    எனக்கு மக்கள் ரசனை மீது, நமது ஊடகங்கள் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கைதான் என்னை அரவான் என்ற பீரியட் பிலிம் எடுக்க வைத்தது.

    உங்கள் படைப்புகளில் அரவானை எப்படிப் பார்க்கிறீர்கள்?

    அரவான் நிச்சயம் தமிழ் சினிமா வரலாற்றில் தடம் பதிக்கும் படமாக இருக்கும். இதில் பங்காற்றியுள்ள அத்தனை பேருக்கும் தனி மரியாதையை இந்தப்படம் பெற்றுத் தரும். தனித்தனியாக ஒவ்வொருவரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. அனைவருமே அப்படியொரு உழைப்பை இந்தப் படத்தில் கொட்டியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

    இதுவரை நான் பண்ணதெல்லாம் சின்ன பட்ஜெட் படங்கள்தான். இந்தப் படத்தில் ஒரே ஜம்பாக எகிறிவிட்டேன். ஆனால் நான் கீழே விழுந்துவிடாமல் பத்திரமாக தரையிறங்கக் காரணமாக இருந்தவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் டி சிவா. இவரைப் போன்றவர்கள் இருக்கும்வரை தமிழ் சினிமா தழைக்கும். நல்லா இருக்கும். சினிமாவை நிஜமாக நேசிக்கிற ஒரு மனிதருக்குப் படம் பண்ணதில் எனக்கு ஆத்ம திருப்தியும் கூட.

    சரித்திரப் படம் என்றால் அந்த உணர்வை திரையில் கொண்டு வருவது முக்கியம். உங்கள் இசையமைப்பாளர் கார்த்திக் ஒரு மாடர்ன் இளைஞர். எப்படி வந்திருக்கிறது அரவான் இசை?

    மிகப் பிரமாதமாக வந்திருக்கிறது. இன்றைக்கு அரவான் படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட். இந்தப் படத்துக்காக அவரை பிழிந்தெடுத்தேன் என்று சொன்னால் மிகையில்லை. அந்த அளவுக்கு மெனக்கெட்டுள்ளோம். திரையில் நீங்கள் எதிர்ப்பார்க்கும் உணர்வு நிச்சயம் கிடைக்கும்.

    கார்த்திக் என்றில்லை. என் கேமராமேன் சித்தார்த், கலை இயக்குநர் விஜயமுருகன் என அத்தனை பேரும் பிரமிக்க வைக்கும் அளவு பங்களிப்பைத் தந்துள்ளனர் அரவாணுக்கு. எனக்கு என் தயாரிப்பாளரின் பணத்தை வீணடிக்கக் கூடாது என்ற பதைப்பு. கிடைத்த பெரிய வாய்ப்பு சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தவிப்பு. அதற்காக அத்தனை பேரையும் கடுமையாக வேலை வாங்கியிருக்கிறேன். என் செட்டில் ஒருவருக்குக் கூட ரத்தக்காயம் ஏற்படாமல் இருந்ததில்லை. அதற்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்கவும் நேரமில்லை. ரிசல்ட் சரியாக இருக்க வேண்டும். அதற்காக எத்தனை கஷ்டத்தையும் பட்டே தீரவேண்டும்.

    பொதுவாக நடிகைகளுக்கும் இயக்குநர்களுக்கும் அல்லது நடிகைகளுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் என்பார்கள். ஆனால் பசுபதிக்கும் உங்களுக்கும் அப்படியொரு புரிதல். உங்கள் படங்களில் அவர் பங்களிப்பு அவுட்ஸ்டேன்டிங்காக உள்ளது. எப்படி?

    அதுதான் பசுபதியின் சிறப்பு. அவருடைய கேரியரில் ஒரு நல்ல படத்தைக் கொடுத்தேன் என்ற சின்ன திருப்தி எனக்கு இருக்கிறது. ஆனால் அவரது திறமைக்கு அவர் சர்வதேச அளவில் எங்கோ இருக்க வேண்டும். தமிழ் சினிமாவே இன்னும் அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு.

    ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

    மற்றவர்களைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும். என் படங்களில் ஆண் பெண் என்ற பேதமில்லாமல், கதைப்படி முக்கியத்துவம் இருக்கும். சொல்லப்போனால், இதுவரை நான் எடுத்த மூன்று படங்களிலுமே பெண் பாத்திரங்களின் பங்களிப்பு கணிசமாகவே இருக்கும்.

    அடுத்தபடம் குறித்து...?

    அரவான் வெளியாகும் வரை எனக்கு வேறு சிந்தனையே இல்லை!

    English summary
    In his exclusive interview to Thatstamil.com, ace director Vasantha Balan shared his experience in Aravan and his unit's hard work in making the period film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X