twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீங்கள் பத்மஸ்ரீ விருதுக்குத் தகுதியானவர்தானா? - விவேக் பதில்

    By Staff
    |

    Vivek
    'மிகச் சிறந்த நகைச்சுவைக் கலைஞர்களான என்எஸ்கே மற்றும் நாகேஷுக்கே வழங்கப்படாத பத்மஸ்ரீ விருது உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதே... படத்துக்குப் படம் ஆபாச வசனங்கள் அதிகம் பேசும் நீங்கள் இதற்குத் தகுதியானவர்தானா?', என விவேக்கிடம் கேள்வி எழுப்பியதால் கடுப்பானார் விவேக்.

    டெல்லியி்ல் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் பத்மஸ்ரீ விருது பெற்றுத் திரும்பிய நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு அவரது ரசிகர்கள் மூலம் மிகப் பெரிய வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    நேற்று சில நிருபர்களைச் சந்தித்து தனது பத்மஸ்ரீ அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.

    தமிழின் உன்னதமான நகைச்சுவைக் கலைஞர்களான என்எஸ்கே, நாகேஷ் போன்றவர்களுக்குக் கூட கிடைக்காத பத்மஸ்ரீ விருது உங்களுக்குக் கிடைத்துள்ளது. படத்துக்குப் படம் ஆபாச வசனங்கள் பேசும் நீங்கள் இந்த விருதுக்குத் தகுதியானவர்தானா என்று கேட்டதற்கு, "என்எஸ் கிருஷ்ணன் காலத்தில் பத்மஸ்ரீ வி்ருது வழங்கப்படவில்லை. நாகேஷ் மிகச் சிறந்த கலைஞர். அவருக்கு விருது கொடுக்காதது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை", என்றார்.

    மேலும் அவர் கூறியதாவது:

    "27 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன். பல சமூக சீர்திருத்த கருத்துக்களைக் கூறி வந்திருக்கிறேன். குடும்பநல திட்டம், பெண் சிசு கொலை, குழந்தைகள் கல்வி, வரதட்சணை ஒழிப்பு, போலியோ மருந்தின் அவசியம், போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகள் ஆகிய கருத்துக்களை நான் நடித்த படங்களின் மூலம் சொல்லியிருக்கிறேன்.

    படத்தில் நாத்திகம் பேசினாலும் நான் ஒரு ஆன்மிகவாதி. கண்டிப்பாக நாத்திகன் அல்ல. ஆன்மிகத்தில் உள்ள சில மூடப்பழக்க வழக்கங்களை படங்களில் எடுத்து சொல்கிறேன், அவ்வளவுதான்.

    என் கருத்துக்களை அழுத்தம் திருத்தமாகச் சொல்லத்தான் இப்போது கதாநாயகனாக நடிக்க விரும்புகிறேன்.

    நான் சாமியாராகப் போவதாக சிலர் கேட்டிருந்தார்கள். நிச்சயமாக நான் சாமியார் ஆகமாட்டேன். எல்லோருடைய வாழ்க்கையிலும் உண்மை என ஒன்று இருக்கிறது. குறிப்பிட்ட அளவு வாழ்ந்து முடித்த பின், பெரும் உண்மையை தேடி போகவேண்டும் என்ற ஆசை சிலருக்கு ஏற்படுவது உண்டு. அது எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு சாமியார் ஆகவேண்டும் என்ற அவசியமில்லை...", என்றார்.

    வடிவேலுவின் நகைச்சுவை மாதிரி சுவாரஸ்யமாக உங்கள் நடிப்பு இல்லையே... திரும்ப திரும்ப ஒரே மாதிரிதானே நடிக்கிறீர்கள். படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறீர்கள், என்று கேட்டபோது கடுப்பான விவேக், "சில பிரசாரங்கள் 'போர்' அடிக்கத்தான் செய்யும். கசப்பு மருந்துக்குள் இனிப்பு கலப்பதைபோல் சொல்லவேண்டும். சுருளிராஜனின் நகைச்சுவையைகூட விமர்சித்தவர்கள் இருக்கிறார்கள். இன்னொருவரின் பெயரை சொன்னீர்களே அவரைப்போல் நான் ஏன் நடிக்க வேண்டும்?", என்றார் காட்டமாக.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X