twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    200 படங்களில் நடித்த முன்னாள் கனவுக் கன்னி இப்போது வறுமையில்..!

    By Staff
    |

    எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்டோருடன் நடித்த முன்னாள் நாயகி ஒருவர் தற்போது வாழ்க்கையைத் தள்ளுவதற்கே சிரமப்பட்டு வருகிறார். வறுமையை விரட்ட, பாட்டி வேடம் கிடைத்தால் நடிக்கத் தயார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    சிவாஜி கணேசன் நடித்த கெளரவம் படத்தில் மேஜர் சுந்தரராஜனின் பணக்கார காதலியாக நடித்தவர் ஜெய்குமாரி. எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி படத்தில் நம்பியாரின் தங்கையாக வந்தவர். எங்கிருந்தோ வந்தாள் படத்தில் சிவாஜியின் காதல் கன்னியாக வந்தவர்.

    அந்தக் காலத்து ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

    இப்படி அந்தக் காலத்தில் பிரபலமாக, பிசியாக இருந்த ஜெய்குமாரி, இப்போது வாடகையைக் கூட கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்.

    வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்து வரும் ஜெய்குமாரி இரு முறை தற்கொலைக்கும் முயன்றாராம்.

    இதுகுறித்து ஜெய்குமாரி கூறுகையில், எனக்கு பெங்களூர்தான் சொந்த ஊர். ஆனால் நான் வளர்ந்து, வாழ்ந்து வருவது சென்னையில்தான்.

    எனக்கு 2 தங்கைகள் உள்ளனர். 6 வயதில் நான் நடிக்க வந்தேன். பந்துலு இயக்கிய மக்கள் ராஜ்யா என்ற கன்னடப் படம்தான் எனது முதல் படம்.

    தமிழில் எனக்கு முதல் படம் எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி. அப்போது எனக்கு 14 வயதுதான்.

    தெலுங்கு, மலையாளத்தில்தான் நிறையப் படங்களில் நடித்துள்ளேன்.

    நடிப்புக்கு அப்போது அதிக சம்பளம் கிடையாது. இதனால் கவர்ச்சி நடனத்திற்கு நான் மாறினேன்.

    எனது உழைப்பால் 2 தங்கைகளுக்கும் கல்யாணம் செய்து வைத்தேன். எனக்கு 25 வயது ஆனபோது நாகையைச் சேர்ந்த அப்துல்லா என்பவரை காதலித்து மணந்தேன்.

    எங்களுக்கு சாஜிதா, பானு என்ற 2 மகள்களும், ரோஷன் என்ற ஒரு மகனும் பிறந்தார்கள். என் மூத்த மகள் சாஜிதாவை எம்.சி.ஏ.' படிக்க வைத்தேன்.

    இந்த சமயத்தில்தான் என் கணவர் சொந்த படம் எடுக்க ஆரம்பித்தார். ஏ.எஸ்.பிரகாசம் இயக்கத்தில் முன்னொரு காலத்திலே என்ற படத்தை தயாரித்தோம்.

    படம் முடிவடைந்த நிலையில், என் கணவருக்கும், பைனான்சியருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, படம் ரிலீஸ் ஆகவில்லை.

    இந்த கவலையில், என் கணவர் இறந்து விட்டார். அதன்பிறகுதான் சோதனை ஆரம்பம் ஆனது. கணவருக்கு சொந்தமான பெரிய வீட்டை, கடனுக்காக எடுத்துக் கொண்டார்கள். நான் 3 கார்கள் வைத்திருந்தேன். மூன்று கார்களையும் விற்றுவிட்டு வாடகை வீட்டில் குடியேறினேன்.

    மூத்த மகளை படிக்க வைத்த அளவுக்கு, இரண்டாவது மகளையும், மகனையும் படிக்கவைக்க முடியவில்லை. என் தங்கைகள் எனக்கு உதவ முன்வரவில்லை. கஷ்டப்பட்டு இரண்டாவது மகள் பானுவுக்கு திருமணம் செய்து வைத்தேன்.

    2 தங்கைகளும், எனது 2 மகள்களும் என்னை கவனிப்பதில்லை. எந்த உதவியும் செய்வதில்லை. நானும், என் மகனும் வேளச்சேரியில் 750 ரூபாய் வாடகை வீட்டில் வசிக்கிறோம். என் பிள்ளை கஷ்டப்பட்டு படித்து, பி.பி.ஏ. முடித்தான். இப்போது எம்.பி.ஏ படிக்க ஆசைப்படுகிறான். ஆனால் பணம் இல்லையே..

    படித்துக் கொண்டே அவன், இன்டீரியர் டெகரேஷன் கம்பெனி ஒன்றில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்கிறான். அந்த பணத்தில்தான் இருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில சமயம் வாடகை கூட கொடுக்க முடியவில்லை.

    இப்படி வறுமையில் இருக்கும் நிலையை விரட்ட மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன். அம்மா, பாட்டி என கேரக்டர்கள் கிடைத்தால் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.

    எனக்கு இன்றுள்ள சினிமாக்காரர்கள் யாரையும் தெரியாது. வறுமை, கடன் சுமை காரணமாக இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்தேன். என் மகன் காப்பாற்றி விட்டான்.

    எனக்கு உதவக் கோரி முதல்வர் கலைஞரை அணுக உள்ளேன். அவரைத் தவிர வேறு எனக்கு வேறு யாரும் உதவ இல்லை என்றார் ஜெய்குமாரி.

    நடிகர் சங்கத்தினரே கொஞ்சம் ஜெய்குமாரிக்கு கை கொடுங்களேன்..

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X