நான் பண்ண பெரிய தப்பு.. திருமணத்தால் வாழ்க்கையே மாறிபோச்சு.. மனம் திறந்த சோனியா அகர்வால்!
சென்னை: பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் பிறந்த சோனியா அகர்வால், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7 ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். செல்வராகவன் படங்கள் மட்டுமில்லாமல், திருட்டுப் பயலே, ஒரு நாள் ஒரு கனவு போன்ற படங்களிலும் நடித்து தனித்துவமான நடிகையாக குறுகிய காலத்திலேயே வளர்ந்து வந்த சோனியா அகர்வால், செல்வராகவனை திருமணம் செய்துகொண்ட பிறகு சில காலம் நடிப்பில் இருந்து விலகினார்.
செல்வராகவன், சோனியா அகர்வாலின் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதையடுத்து, சிம்பு நடித்த வானம் படத்தில் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருந்தார். அதன் பின் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அவ்வப்போது ஒரு சில படங்களில் பெரிதும் முக்கியத்துவம் பெறாத கதாபாத்திரங்களில் நடித்து வரும் சோனியா அகர்வால், தற்போது,
கிப்ட் என்ற படத்தில் போலீசாக நடித்துள்ளார். இந்த மாதம் இறுதியில் இப்படம் வெளியாக இருக்கும் நிலையில், Cineulagam யூடியூப் சேனலுக்கு படம் குறித்து பல விஷயத்தை பேசி உள்ளார்.

நடிகை சோனியா அகர்வால்: இதில், இந்த படத்தில் நான் போல்டான போலீஸ் வேடத்தில் நடித்து இருக்கிறேன். போலீஸ் ரோல் என்பதால் அதற்கேற்றபடி என்னுடைய உடல் மொழி, நடை உடை அனைத்தையும் மாற்றி அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்து இருக்கிறேன். அதற்கு யூனிபார்ம் இல்லாத போலீசாக வருகிறேன். பல படங்களில் ஏஞ்சல் ரோலில் நடித்துவிட்டேன். ஏஞ்சலாக நடிப்பது ஈசிதான், ஆனால், போலீசாக நடிப்பது ரொம்ப கஷ்டம். இப்போது மாறுபட்ட வேடங்களில் பல படத்தில் நடித்து வருகிறேன். அடுத்து நீதிபதி, அரசியல்வாதி வேடத்திலும் சில படங்களில் நடித்து வருகிறேன்.
அரசியல் வர ஐடியா இல்ல: நான் காதல் கொண்டேன் படம் பண்ணும்போது, அது சின்ன பட்ஜெட் படம். ஆனால் பெரிதாக வெற்றி பெற்றது. எப்போதும் கதைதான் ஜெயிக்கும். முன்பை விட இப்போது சோஷியல் மீடியா மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது. அதன் மூலம் பலரின் அன்பு கிடைக்கிறது. காதல் கொண்டேன் பார்ட் 2 வர பிளான் இருக்குது. அது குறித்து என்னிடம் பேசினார்கள். எனக்கு சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய ஐடியா இருக்குது. இப்போதைக்கு அரசியலுக்கு வர ஐடியா இல்லை. விஜய் கட்சியிலும் சேருவது குறித்து யோசிக்கவில்லை என்றார்.
நான் செய்த பெரிய தப்பு: நான் வாழ்க்கையில் ஒரு தவறான முடிவு எடுத்துவிட்டேன், அதாவது நான் பீக்கில் இருந்த போது, ஒரு பிரேக் எடுத்துவிட்டேன். திருமணத்திற்கு பிறகு நான் நடிக்கவில்லை. அதான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்றார். தொடர்ந்து பேசிய அவர், நான் புதுப்பேட்டை படத்தில் நடித்துக்கொண்டு இருந்த போது, பிரபாசுடன் தெலுங்கு படம் ஒன்றிலும், ஜூனியர் என்டிஆருடன் படம் ஒன்றிலும் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், கால்ஷூட் பிரச்சனை காரணமாக அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அந்த இரண்டு படமும் தெலுங்கில் பெரிய அளவில் வெற்றி பெற்றன என சோனியா அகர்வால் அந்த பேட்டியில் மனம் திறந்து பல விஷயத்தை பேசினார்.


Click it and Unblock the Notifications











