Ajith interview: இதுவரை 29 அறுவை சிகிச்சை.. பல சவால்களை கடந்து வந்தேன்.. அஜித் மனம் திறந்த பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கும் அஜித்குமார், தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்கு அளித்திருக்கும் பேட்டியில், சினிமா வாழ்க்கை, குடும்பம், அடுத்த படம் என பல விஷயம் பற்றி மனம் திறந்து பேசி உள்ளார்.
சினிமாவில் எனது ஆரம்பகாலத்தில் என் பெயர் பிரபலமாக இல்லை என்று சொல்லி மாற்றச் சொன்னார்கள். ஆனால், எனக்கு வேறெந்த பெயரும் வேண்டாம் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன். அதே போல ஆரம்பத்தில் என்னால் சரியாக தமிழில் பேச வராது, உச்சரிப்பில் பிரச்சனை இருந்தது, அதை சரி செய்ய கடுமையாக உழைத்தேன். அஜித் குமாரின் வளர்ச்சியை சாதாரணமானது இல்லை, ஒரே நாளில் பெயரோ, புகழலோ வரவில்லை. அதற்கு பின் என் கடின உழைப்பும், விடாமுயற்சியும் பல சவால்களும் இருந்தன அவைகளைத் தாண்டித்தான் இந்த இடத்திற்கு நான் வந்து இருக்கிறேன்.

நடிகர் அஜித்குமார் பேட்டி: ரேசிங்கின் போது பலமுறை நான் விபத்தில் சிக்கி இருக்கிறேன். இது எனது குடும்பத்தினருக்கு மன அழுத்தத்தை தரும். ஆனால் ரேசிங்கில் ஈடுபடும் பலருக்கும் இதுபோல் விபத்து நடக்கும். நான் நடிகர் என்பதால் அது பெரிய செய்தியாக வருகிறது. இதுவரையில் பந்தயத்தின் போது பெரிய அளவில் காயமோ, போட்டி தவிர்க்கும் அளவிற்கு காயம் ஏற்பட்டது இல்லை. ஆனால், சினிமா துறையில் இதுவரை எனக்கு 29 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. திரைப்படத்திலும், பந்தயத்திலும் ஒரே நெறிதான். அது சரியான குழுவை அமைக்க வேண்டும். புகழ் என்பது இரண்டு பக்க கூர்மையான வாள் போன்றது. அது வசதி மற்றும் நல்ல வாழ்க்கை முறையை தாராளமாக வாரி வழங்கும். ஆனால், அதே நேரத்தில் உங்களுக்கான முக்கியமான விஷயங்களை அது பறித்துவிடும்.
29 அறுவை சிகிச்சை: ரசிகர்கள் என்மீது பொழியும் அன்புக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். ஆனால், அதே அன்பின் காரணமாக, குடும்பத்துடன் நான் வெளியே செல்ல முடியவில்லை. என் மகனை பள்ளிக்கு அழைத்து செல்ல முடியவில்லை. இந்தியாவில் நான் காரை ஓட்ட முடியாது, ஏனெனில் யாரேனும் என்னை பார்த்துவிட்டால், உடனே 50 முதல் 60 மோட்டார் பைக்கில் என்னை புகைப்படம் எடுக்க பின் தொடர்வார்கள். இதனால் சாலையில் பலரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. அவர்கள் ரசிகர்கள் எனச் சொன்னாலும், சில நேரங்களில் அவர்களால் காயப்படுத்தப்படுவதும் உண்டு. என் கைகளில் இருக்கும் பல காயங்களே அதற்குச் சாட்சி என்று வேதனையுடன் கூறினார்.
ஏகே64 அப்டேட்: தொடர்ந்து தனது அடுத்த படம் குறித்து பேசிய அஜித்குமார், 'குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் இணைய உள்ளேன். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும். மார்ச் மாதம் வரை கார் பந்தயம் உள்ளதால், அதற்கு பிறகு தான் படப்பிடிப்பி தொடங்கப்படும் என்று கூறிய அஜித் குமார், F1 ஹாலிவுட் திரைப்படத்தின் ரீமேக் அமைந்தால், நான் நிச்சயம் நடிப்பேன் என அந்த பேட்டியில் மனம் விட்டு பல விஷயத்தை பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











