For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அப்பல்லாம் எனக்கு சூர்யாவை சுத்தமா பிடிக்காது.. ரெண்டுபேரும் அடிச்சிக்குவோம்! - கார்த்தி

  By Shankar
  |

  இந்த தீபாவளிதான் கார்த்திக்கு நிஜமான தலை தீபாவளி. இந்த தீபாவளிக்குத்தான் அவர் நடித்த 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' வெளியாவதால் எக்கச்சக்க உற்சாகத்துடன் காணப்படுகிறார் கார்த்தி.

  அந்த உற்சாகத்தோடு, படம் குறித்தும் தன் குடும்பம் பற்றியும் மனம் திறக்கிறார்...

  இந்த தீபாவளி ரொம்ப ஸ்பெஷல்...

  இந்த தீபாவளி ரொம்ப ஸ்பெஷல்...

  "நான் எத்தனையோ தீபாவளியை பார்த்திருக்கிறேன். இந்த தீபாவளி எனக்கு நிச்சயமாக ஸ்பெஷல்தான். இப்போதான்... இந்த ஆண்டுதான் எனக்கு தீபாவளி ரிலீஸ் ஆக படம் வருகிறது. அதனால் மனசுக்குள் எதிர்பார்ப்போடும் பரபரப்போடும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

   ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ பற்றி...

  ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ பற்றி...

  "நானும் ராஜேஷும் சந்தித்தபோது நகரம் சம்பந்தப்பட்ட கதை வேண்டாம். கிராமத்துப் பக்கம் போவோம் என்று விரும்பினோம். அது சற்று வளர்ந்த ஊர். ஸ்மால் டவுன் என்று கூறலாம். அதன்படி கதையின் பெரும்பகுதி அம்பாசமுத்திரத்தில் நடக்கிறது. அங்கே ‘ஆல் இன் ஆல்' என்கிற லோக்கல் சேனல் நடத்தும் அழகுராஜா... இந்த அழகுராஜா தன்மீது அதிகமாக நம்பிக்கை வைத்து அலைபவன். அந்த லோக்கல் சேனலை சன்டிவிக்கு போட்டியாக கருதி வளர்க்கிறான்னா பாருங்களேன்.

  அப்பா பிரபு. அம்மா சரண்யா. இவர்களின் ஒரே மகன் தான் அழகுராஜா, ஒரே பிள்ளை என்றால் செல்லம், திமிர், அதீத நம்பிக்கை, பிடிவாதம் எல்லாம் இருக்கும் தானே...? அதுதான் பிரச்சினையே..?

  அஸிஸ்டென்ட் சந்தானம்

  அஸிஸ்டென்ட் சந்தானம்

  சேனல் நடத்தினாலும் அவனுக்கும் நட்பு உலகம், காதல் உலகம் இருக்கிறது. நண்பன் சந்தானம். அவர்தான் அழகுராஜாவின் உதவியாளர். அசிஸ்டெண்ட் வேலை என்கிற பெயரில் சில அடமண்ட் வேலையும் செய்பவர். இதனால் ஒருவரை ஒருவர் நாங்கள் காலை வாரி விடுவதுண்டு.

  சித்ராதேவி பிரியா, இந்த பெயர்தான் காஜல்அகர்வாலுக்கு. அந்த பெயருக்குரிய காரணமே கலகலப்பு. காஜல்அகர்வால் கேரக்டரே வித்யாசமானது. வெறும் அலங்கார ஹீரோயினாக வராமல் நிறைய இடங்களில் நடிக்க வாய்ப்பு உள்ள வேடம்.

  பிரபு போல...

  பிரபு போல...

  பிரபு சார் என் செல்ல அப்பா, நான் அவரைப் போல கெட்டப்பிலும், செட்டப்பிலும் நடிக்கிற மாதிரி காட்சி வரும். அப்படி நடிக்க படாத பாடுபட்டேன். ஒருவரை போல நடிக்கிறது ரொம்பவும் சிரமம் என்று புரிந்தது. சிறுவயதில் நான் ஊட்டி, கொடைக்கானலில் பிரபு சாரின் படபிடிப்பைப் பார்த்ததுண்டு. அவருடன் சேர்ந்து நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

  நோ வெளிநாடு

  நோ வெளிநாடு

  பாடல் காட்சிகளுக்கு வெளிநாடு போவது இல்லை என்பதில் முடிவாக இருந்தோம். நம்மூரில் இல்லாத அழகா... என்று நினைக்கும்படி நிறைய இடங்களில் எடுத்திருக்கிறோம். நம் பொள்ளாச்சி, கும்பகோணம், அம்பாசமுத்திரம் அழகை படத்தில் பாருங்கள். பார்க்கிற மக்கள் எல்லாம் குடும்பத்தில் ஒருவராக நினைக்கிற அப்பாவி மனசுக்காரர்கள். இந்த வெளிப்புறம் படப்பிடிப்பு அனுபவம் ஜாலி ட்ரீம் போல இருந்தது நிஜம்.

  காஜலின் அனுபவம்

  காஜலின் அனுபவம்

  இதற்கு முன் அவருடன் ‘நான் மகான் அல்ல' படத்தில் நடித்தேன். அப்போது நாங்கள் இருவருமே புதியவர்கள். அது எனக்கு 3-வது படம். இது எனக்கு 8வது படம். ஆனால் இந்த நாலு வருஷத்தில் காஜல் 30 படங்களில் நடித்து விட்டார். எனவே அவரது அனுபவம் நடிப்பில் தெரிந்தது. படபிடிப்புக்கு முன்பு என்னதான் பேசப் போகிறோம். எப்படி நடிக்க போகிறோம் என்று நாங்கள் விவாதித்துக் கொள்வதுண்டு. இது வேலையை சுலபமாக்கியது.

  கவுண்டமணியை நடிக்க வைக்க விரும்பினோம்...

  கவுண்டமணியை நடிக்க வைக்க விரும்பினோம்...

  இந்த மனுஷன் ராஜேஷுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். எந்த சிக்கலான சூழலுக்குள்ளும் சிரிப்பை கொண்டு வந்துவிடும் வித்தைக்காரர். இதில் நாயகன், நாயகி என்று மட்டும் கதை போகாது. சுமார் எட்டு பாத்திரங்கள் மறக்க முடியாதபடி அமைந்திருக்கும். கோட்டா சீனிவாசராவ் ஜுவல்லரி முதலாளியாக வந்து, அவர்கூட சிரிக்க வைப்பார். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா' கவுண்டமணி சாரால் புகழ் பெற்றது.
  அவரை ஒரு காட்சியிலாவது நடிக்க வைக்க முயற்சி செய்தோம். முடியவில்லை.

  சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்

  சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்

  நடிகர் நடிகைகள் செய்ய வேண்டிய ஹோம் ஒர்க்கைக் கூட ராஜேஷ் செய்து விடுவார். நான் நடிக்கும் லோக்கல் சேனல் பற்றி விவரம் தேடி நான் சிரமப்படவில்லை. அது சம்பந்தமான ஏராளமான தகவல்கள், சிடிக்கள் கொடுத்தார். என் சுமையை குறைத்தார்.

  தமனின் இசையும், சக்திசரவணன் ஒளிப்பதிவும் படத்துக்கு பெரிய பலமாக இருக்கும். ‘இந்த விளம்பர உத்தி, உங்களை எங்கேயோ கொண்டு போகப்போகிறது.' ‘த சாய்ஸ் இஸ் யுவர்ஸ்' என்றெல்லாம் அடிக்கடி நானும் சந்தானமும் பேசுகிற வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும்.

  சிரிக்க வைக்கும்படி கலகலப்பு படமாக இருந்தாலும் செறிவான நிறைய காட்சிகளையும் வைத்திருக்கிறார் ராஜேஷ்,என்று மூச்சிவிடாமல் பேசி முடித்தார் கார்த்தி.

  இத்தனை ஆண்டுகளில் எட்டே படங்கள் போதுமா?

  இத்தனை ஆண்டுகளில் எட்டே படங்கள் போதுமா?

  "ஒரு ஹீரோவாக பார்க்கும் போது நான் இதுவரை 8 படங்கள்தான் முடித்து இருக்கிறேன். என் கூட நடித்த கஜால் அகர்வால் நாலே வருஷத்தில் 30 படங்கள் முடித்து அனுபவசாலியாகி விட்டார் பாருங்கள்... நம்மால் எல்லாம் அவ்வளவு படம் செய்ய முடியாது. ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு மூணு வருஷம் ஆனது. இது போன்று சில நேரம் தாமதமாகி பட எண்ணிக்கையைக் குறைத்து விடுகிறது. இதுவும் ஒரு அனுபவம் தானே?

  படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

  படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

  "கதை கேட்டுதான். அப்படி என்ன பெரிதாக கதை கேட்கிறீங்க என்று நீங்கள் கேட்கலாம். எனக்குப் பிடித்த மாதிரி நான் பொருந்துகிற மாதிரி கதை வரும் போது கேட்கிறேன். முதலில் எனக்கு பிடிக்க வேண்டும். முதலில் அதன் மீது நம்பிக்கை வர வேண்டும். என் கணிப்பு தவறாக கூட இருக்கலாம். இருந்தாலும் செய்வதை பிடித்தமுடன் செய்கிறேன்.

  நீங்கள் அம்மா செல்லமா? அப்பா செல்லமா?

  நீங்கள் அம்மா செல்லமா? அப்பா செல்லமா?

  "உண்மையை சொல்லச் சொன்னால் நான் யாருடைய செல்லமும் இல்லை. நான் மூத்த பிள்ளையும் இல்லை கடைக் குட்டியும் இல்லை. மூத்த பிள்ளை அண்ணன் அம்மா செல்லம். கடைக்குட்டி தங்கை அப்பா செல்லம். இடையில் மாட்டிக் கொண்டது நான்.

  எனக்கு எதுவும் தேவை என்றால் மூத்த பிள்ளை உங்க பிள்ளை... இளைய பிள்ளை செல்லப் பிள்ளை... நடுவில் பிறந்த பிள்ளை நான் மட்டும் எடுப்பார் கைப்பிள்ளையா என்று செண்டிமென்டாகப் பேசி காரியம் சாதிப்பது உண்டு. இப்படி அழுது பைக் கூட வாங்கி இருக்கிறேன்".

  உங்கள் அப்பாவிடம் பிடித்தது...?

  உங்கள் அப்பாவிடம் பிடித்தது...?

  "எங்களை, ஒரு நடிகர்... பிரபலமானவர் வீட்டுப் பிள்ளை என்பது போல் வளர்க்கவில்லை. எல்லாக் கஷ்டமும் தெரிய வைத்துதான் வளர்த்தார். சாதாரண நடுத்தர வர்க்க குடும்பம் போலவே நாங்கள் வளர்ந்தோம். மிடில் கிளாஸ் பசங்களைப் போல ஸ்கூலுக்கு பஸ்ஸில் தான் போனோம். உலகம் தெரியாமல் கண்ணை மூடி வளரவில்லை நாங்கள். நான் பத்தாம் வகுப்பு போகும் போதுதான் சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்கள். காரில் நாங்கள் ஸ்கூல் போனதில்லை. எங்களை பாகுபாடு இல்லாமல் பாரபட்சம் பார்க்காமல் ஒப்பிட்டுப் பார்க்காமல் வளர்த்தார், நடத்தினார்.

  அண்ணன் சீரியஸ்.. நீங்க ஜாலி ரூட்டா?

  அண்ணன் சீரியஸ்.. நீங்க ஜாலி ரூட்டா?

  "என் முதல் படம் 'பருத்தி வீரன்' அது படு சீரியஸாக பேசப்பட்ட படம். நானா அது என்று பலருக்கும் அதிர்ச்சி தந்த படம். எனக்கும் அப்படி நடந்தது ஷாக்தான். நான் அமெரிக்காவில் படித்தவன். சத்தம் போட்டுப் பேசுவது நாகரிக குறைவு என்று அறிந்தவன்... பழகியவன். என்னை கூப்பிட்டு சத்தம் போட்டுப் பேச வைத்து தொடை தெரிய லுங்கி கட்டி... எனக்கே புதியதாக இருந்த அனுபவம் அது.

  இப்போ வருகிற படங்கள் ஜாலி எண்டர்டெயினராக இருக்கிறது.. போகப் போக மாற்றம் வரும். ஜனங்களுக்கு எண்டர்டெயினராக இருக்கவே எனக்குப் பிடிக்கும். அந்தப் பாதையில் என் பணியும் தொடரும். பொங்கல் அன்று வரவிருக்கும் "பிரியாணி", நடித்துக் கொண்டிருக்கும் ரஞ்சித் படம் எல்லாமே மாறுப்பட்ட கார்த்தியை காட்டும் படமாக இருக்கும்.

  பிரபுவைப் போல நடித்துள்ள அனுபவம்...?

  பிரபுவைப் போல நடித்துள்ள அனுபவம்...?

  கஷ்டத்திலேயே கஷ்டமான விஷயம் ஒருத்தரைப் போல நடிப்பதுதான். பிரபு சார் என்றால் எனக்கு பிடிக்கும். அவரைப் போல நடிக்க அவ்வளவு சிரமப்பட்டேன். 15 நாள் பயிற்சி எடுத்து குதிரை சவாரி எல்லாம் கற்றுக் கொண்டு நடித்தேன். 1980-ன் உடை வேண்டும். பிரபு சார் 1985-ல் தான் சினிமாவுக்கே வந்தார். அந்த 80 சூழ்நிலைக்கு சிரமப்பட்டு எடுத்தோம்.

  'சூர்யாவுக்கும் எனக்கும் ஆகவே ஆகாது'

  'சூர்யாவுக்கும் எனக்கும் ஆகவே ஆகாது'

  "உண்மையைச் சொன்னால் வேடிக்கையாக இருக்கும். சின்ன வயதில் எனக்கும் அண்ணனுக்கும் ஆகவே ஆகாது. இவன் எல்லாம் எனக்கு அண்ணனா? ஏன்டா எனக்குன்னு இப்படி ஒரு அண்ணன் இருக்கான்னு நினைப்பேன்.

  எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். நான் குண்டாக இருப்பேன். இருந்தாலும் நான் தோற்று விடுவேன். அண்ணன் அவ்வளவு வேகம். என் சைக்கிளை என் பைக்கை எடுத்து ஓட்டினால் எனக்குப் பிடிக்காது. ஆனால் அண்ணன் ஒன்றையும் விடுவதில்லை. என் சட்டையை கூட பழசாக்காமல் வைத்து இருப்பேன். ஆனால் என் சட்டையை விட்டு வைப்பதில்லை. என்ன வேடிக்கை என்றால் என் சட்டையை அண்ணன் போடலாம். அவர் சட்டை எனக்கு சிறியதாக இருக்கும். இரண்டு பேரும் சேருவது ஒரே ஒரு விஷயத்திற்காகத்தான். சேர்ந்து ப்ரூஸ்லீ, ஜெட்லீ படம் பார்ப்போம். இந்தப் படங்களை எல்லாம் பார்த்து விட்டு சும்மா இருக்க முடியுமா?அன்று இரவு வீட்டுக்கு வந்தவுடன் சண்டை வரும். கட்டிப் புரண்டு, திட்டிக்கொண்டு உருளுவோம்.

  கார் வாங்கிக் கொடுத்தார்

  கார் வாங்கிக் கொடுத்தார்

  நான் அமெரிக்கா போய் படித்து ஊர் வந்து பார்த்தால் வீடே வெறிச் சென்று இருந்தது. பேசக் கூட ஆளில்லை.முதலில் திரும்பி வந்த போது அவர் ஒரு நடிகராக வளர்ந்திருந்தார். பிதாமகன் ஷூட்டிங்கில் இருந்தார். கும்பகோணம் போய் பார்த்தேன். அடையாளமே தெரியவில்லை.

  இவர் பழைய அண்ணனா என்று ஆச்சர்யம். அந்த அளவுக்கு மென்மையுள்ளவராக மாறியிருந்தார். நான், பருத்தி வீரன் முடித்ததும் எனக்கு கார் வாங்கிக் கொடுத்தார். ஒரு சைக்கிள் விஷயத்தில் கட்டிப்புரண்ட அண்ணனா இவர் என ஆச்சர்யமாக இருந்தது. அப்போது அந்த அளவுக்கு பொறுப்புள்ளவராக மாறி இருந்தார்.

  வீட்டில் உங்கள் பொறுப்பு என்ன?

  வீட்டில் உங்கள் பொறுப்பு என்ன?

  எங்கள் வீட்டு விவகாரங்களை நான் பொறுப்புடன் பார்ப்பேன். வெளியுறவுத் துறை இலாகா அண்ணன் பார்ப்பார். என் தங்கையின் திருமணத்தின் போது எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு பார்த்துப் பார்த்து பொறுப்புடன் அவர் வேலை செய்தது எனக்கு பிரமிப்பாக இருந்தது.

  அமெரிக்க சினிமா - உள்ளூர் சினிமா

  அமெரிக்க சினிமா - உள்ளூர் சினிமா

  மணி சார் சொல்வார். அங்குள்ள சினிமா வேறு. பார்க்கிற மக்கள் வேறு. அவர்கள் கலையாக பார்க்கிறார்கள். இங்கு வருகிற மக்கள் மன அழுத்தம் போக்க வருகிறவர்கள். பல கவலைகளை மறக்க தியேட்டர் வருகிறவர்கள். இவர்களுக்கு என்டர்டெயினிங் தேவை. அப்படிப்பட்ட படங்கள்தான் இங்கு வேண்டும் என்பார். அதையே நானும் ஏற்றுக் கொண்டேன். சினிமாவைப் புரிந்து கொள்ள படிப்பு உதவும் மக்களைப் புரிந்துதான் படமாக்க வேண்டும். மக்களைப் புரிந்து கொள்ள அனுபவம்தான் உதவும்.

  English summary
  Actor Karthi's open interview on his personal, family and cinema life.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X