»   »  மீண்டும் வருகிறார் வட்டாரம் வசுந்தரா!

மீண்டும் வருகிறார் வட்டாரம் வசுந்தரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வசுந்தராவை நினைவிருக்கிறதா... வட்டாரம் படத்தில் அறிமுகமாகி, பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று மற்றும் போராளி படங்களில் நடித்து நல்ல அறிமுகம், அங்கீகாரம் பெற்ற இவர், சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டார் வாட்ஸ்ஆப்பில். சதா ஆன்ட்ராய்டு போனும் கையுமாகத் திரிபவர்களுக்கு காரணம் தெரியும்!

இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

Actress Vasunthara Kashyap interview

ஏன் இந்த இடைவெளி?

"நான் என்றைக்கும் படங்களின் எண்ணிக்கையில் ஆர்வம் காட்டுவதில்லை. எனக்கு மனதிருப்தி உள்ள பாத்திரங்களில்தான் நடிப்பேன். வழக்கமான கமர்ஷியல் படங்களில் நடிக்க மாட்டேன். அப்படிப்பட்ட படங்களில் நடிக்க நான் எப்போதும் ஆர்வம் காட்டுவதில்லை."

இப்போது எந்தப் படத்தில் நடிக்கிறீர்கள்?

'மைக்கேல் ஆகிய நான்', 'புத்தன் இயேசு காந்தி' என்று இரண்டு படங்களில் நடித்துள்ளேன். இரண்டுமே ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இதில் 'மைக்கேல் ஆகிய நான்' ஒரு ஹாரர் படம். 'புத்தன் இயேசு காந்தி'சற்றே மாறுபட்ட படம். இதில் எது முதலில் வந்தாலும் அது என் பத்தாவது படமாக இருக்கும். இப்போது ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறேன். அது ஒரு பீரியட் ஃபிலிம். சிலநூறு ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை.

அதிசயா என்று இருந்த பெயரை ஏன் வசுந்தரா என்று மாற்றினீர்கள்? பல வசுந்தராக்கள் இருக்கிறார்களே?

அதிசயா என்பது இயக்குனர் சரண் வைத்த பெயர். ஒரு செண்டிமெண்டுக்காக அதை வைத்தார். வசுந்தரா என்பது என் சொந்தப் பெயர், ஒரிஜினல் பெயர். வசுந்தராதாஸ், வசுந்தரா ராஜே என்று இருக்கிறார்கள். எனவேதான் நான் வசுந்தரா காஷ்யப் என்று மாற்றிக் கொண்டேன். என் இயற்பெயரை மாற்ற விரும்பவில்லை.

Actress Vasunthara Kashyap interview

சினிமா உலகம் பற்றி நடிக்க வருவதற்கு முன் உங்களிடம் இருந்த அபிப்ராயம் இன்று மாறி உள்ளதா?

நாங்கள் சினிமாவே பார்க்காத குடும்பம். ஆர்மி, சார்ட்டர்டு அக்கவுண்ட், பேங்க் என்கிற குடும்பப் பின்னணி கொண்டவள். வீட்டில் பெரிதாக சினிமா பார்க்க அனுமதி இல்லை. ஆர்வமும் இல்லை. எப்போதாவது விசேஷ நாட்களில் பழைய சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் படங்கள் பார்க்க மட்டுமே அனுமதி. இல்லையென்றால் லயன் கிங்' போன்ற குழந்தைகள் படங்கள்தான் பார்க்க முடியும்.. எனவே படங்கள் பார்த்த அனுபவங்கள் எனக்குக் குறைவுதான். எனவே சினிமா உலகம் பற்றி எந்த அபிப்ராயமும் இல்லாமல் இருந்தது.

சினிமா உலகம் வந்த பின் படப்பிடிப்பில் எல்லாம் திமிராக நடந்து கொள்வார்கள். ஆடம்பரமாக இருப்பார்கள் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால்
நான் என் முதல் படத்தில் நடித்த போது எல்லாருமே நட்புடன் பழகினார்கள். நாங்கள் ஒரே குடும்பம் போல இருந்தோம். அதைப்பார்த்த பின் என் அபிப்ராயம் மாறியது.

இப்போது நான் நடிக்கும் படங்களில் கூட நட்பாகவே இருக்கிறார்கள்.. எல்லா உதவி இயக்குநர்களும் எனக்கு நண்பர்கள்தான்.

சினிமாவில் வெற்றி பெற என்ன தேவை என்று நினைக்கிறீர்கள்?

திறமை வேண்டும். அதிர்ஷ்டமும் வேண்டும். கடின உழைப்பும் தேவை. திறமை இருந்தால் மட்டும் போதாது. அது போலவே கடின உழைப்புடன் திறமை, அதிர்ஷ்டம் எல்லாமும் அமைய வேண்டும்.

Actress Vasunthara Kashyap interview

உங்களுக்குள்ள வித்தியாசமான குரல் பலமா? பலவீனமா?

என் குரல் பாதிபேருக்குப் பிடிக்கும். பாதிபேருக்கு பிடிக்காது. என் குரல் வித்தியாசமாக இருக்கிறது என்று பலரும் கூறுவதுண்டு. சில படங்களில் நான் சொந்தக் குரலில் பேச விரும்புகிறார்கள், சிலபடங்களில் சொந்தக் குரல் வேண்டாம் என்று டப்பிங் பேச வைக்கிறார்கள்.

வீட்டில் நான் படபடவென்று பேசுவதாகக் கூறுவார்கள். என் குரல் பலமா பலவீனமா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. பலம் 50 சதவீதம் பலவீனம் 50சதவீதம் என்று கூறலாம். எப்படி இருந்தாலும் என் குரல் இப்படித்தான். என் படங்களில் டப்பிங் வேறு யாராவது பேசினால் என் நண்பர்கள் என்னடி ஒரு மாதிரியாக இருக்கிறது. நன்றாக இல்லை என்பார்கள்.

நடிக்கும் போது தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் காட்டுவதுண்டா?

தொழில்நுட்ப விஷயங்களை நிச்சயம் கவனிப்பேன். அது பற்றியும் தெரிந்தால்தான் நடிப்பதற்கு சௌகரியமாக இருக்கும். உடன் நடிப்பவர்களையும் விட உதவி இயக்குநர்கள்தான் என்னுடன் நண்பர்களாக இருப்பார்கள். அவர்களுடன் அதிகம் தொழில்நுட்ப விஷயங்கள் பற்றிப் பேசுவேன்.

அண்மையில் பார்த்த படம்?

'காக்கா முட்டை' படம் பார்த்தேன் ,மிகவும் பிடித்திருந்தது. எவ்வளவு எளிமையாக இவ்வளவு பெரிய விஷயத்தை படத்தில் சொல்லியிருக்கிறார்கள். ரொம்பவே ஆச்சரியப் பட்டேன். அது கமர்ஷியல் பிலிம் என்றும் கூறலாம். ஆர்ட்பிலிம் என்றும் கூறலாம். அவ்வளவு அருமையாக இருந்தது. 'இறுதிச் சுற்று' பார்த்தேன் அதுவும் பிடித்திருந்தது. அதில் நடித்த ரித்திகாசிங்கிற்கு முதல் படத்திலேயே தேசிய விருது கிடைத்தது அறிந்து மிகவும் சந்தோஷப்பட்டேன். அவர் திறமைசாலி மட்டுமல்ல அதிர்ஷ்டசாலியும் கூட! இப்படிப் பட்ட பெருமை எல்லோருக்கும் வராது. எனக்கு 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் தேசிய விருது என்ற அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை. அதனால் வருத்தமும் இல்லை.

உங்கள் இயக்குநர் சமுத்திரக்கனி தேசிய விருது பெற்றது பற்றி?

சமுத்திரக்கனி சார் இயக்கத்தில் 'போராளி'யில் நடித்தேன். அந்தக் கேரக்டரில் என்னால் நடிக்கமுடியுமா என்று பயந்தேன். அவர் கொடுத்த ஊக்கத்தாலும் தைரியத்தாலும்தான் நடித்தேன் அவருக்கு தேசிய விருது என்றதும் மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்து சொன்னேன்.

நடிப்பது தவிர வேறு எப்படி வர ஆசைப்பட்டீர்கள்?

எனக்கு மீடியாவில் ஆர்வம். ஜர்னலிஸ்ட் ஆக ஆசைப்பட்டேன். நான் ஆங்கில இலக்கியம் படித்ததே அதற்காகத்தான். இப்போது நான் நடித்துள்ள 'புத்தன் இயேசு காந்தி' படத்தில் கூட பத்திரிகையாளராக நடித்திருக்கிறேன்.

என்னைப் பத்திரிகையாளர்கள் பலரும் பாதித்து இருக்கிறார்கள். அவர்களின் பாதிப்பு அந்தக் கேரக்டரில் இருக்கும்.. 'புத்தன் இயேசு காந்தி' படத்தில் இயக்குநரும் ஒரு பத்திரிகையாளர்தான் என்பதால் அவர் சொன்னபடிதான் நடித்தேன்.

English summary
Actress Vasunthara Kashya's interview about her comeback after a gap.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil