நீங்க சோறு திங்கணும்.. தயாரிப்பாளர்கள்?.. பிரசாந்த், ப்ளூ சட்டை மாறனை விளாசிய ஆதவன்!
சென்னை: தமிழ் சினிமா விமர்சகர்களான ப்ளூ சட்டை மாறன், இட்டிஸ் பிரசாந்த் உள்ளிட்ட சிலர், திரைப்படத் தொழிலையே அழிக்கும் நோக்கில் செயல்படுகிறார்களோ என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஆதவன்.
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், ப்ளூ சட்டை மாறன் போன்ற விமர்சகர்கள் எப்படி ஒரு தொழிலையே மொத்தமாக அழிக்கிறார்கள் என்பதைப் பற்றி அவர் பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான "குமாரசம்பவம்" என்ற திரைப்படத்தை உதாரணமாகக் காட்டி ஆதவன் பேசுகையில், "அந்தப் படம் குடும்பத்தோடு பார்த்து வயிறு குலுங்க சிரிக்கிற மாதிரி இருந்தது. ஆனால், அந்த படத்துக்கு யாரும் பெருசா ரிவ்யூ சொல்லல. ஒரே ஒரு தியேட்டர்ல ஒரே ஒரு ஷோ மட்டும்தான் ஓடுது" என்றார்
எல்லாருடைய சோத்தையும் அழிக்கிறாங்க: சின்ன படங்கள் ஏன் கண்டுகொள்ளப்படுவதில்லை என்கிற கேள்விக்கு, "நீங்க ஏன் ப்ளூ சட்டை மாறனிடம் கேட்கக் கூடாது?" என்று ஆதவன் கேள்வி எழுப்பினார். மேலும், "அவங்க சோறு திங்கறாங்க. எல்லாருடைய சோத்தையும் அழிக்கிறாங்க. ப்ளூ சட்டை மாறன் ஒட்டுமொத்தமா ஒரு தொழிலையே அழிச்சிட்டாரு" என்று காட்டமாக கூறினார்.
தயாரிப்பாளர்கள் காலி ஆகுறாங்க: தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் குறைந்து தெலுங்கு தயாரிப்பாளர்கள் ஆதிக்கம் செலுத்துவது குறித்து பேசிய ஆதவன், "மாறி மாறி நடக்கத்தான் செய்யும். அந்தக் காலத்துல தமிழ் சினிமா தயாரிப்பாளர், தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் எல்லாம் ஒரே இடத்துலதான் இருந்தாங்க. நம்ம கதைகள் நிறைய சப்போர்ட் பண்ணல" என்றார். தமிழன் என்ற உணர்வு இருந்தால், தமிழ் சினிமாவையும், தமிழ் நடிகர்களையும் நிறைய சப்போர்ட் பண்ணனும் என்று வலியுறுத்திய ஆதவன், "வாரத்துக்கு ஒன்னாவது நல்ல படம் வருதே. ஆறு படம், ஏழு படம் ரிலீஸ் ஆகுது. ஒன்னு நம்ம மனசை கவறுதே. ஒன்னு நம்மை ரொம்ப சிரிக்க வைக்குது. அந்த படத்தை ப்ரொமோட் பண்ணனும்" என்றார்.
பொறுப்பே இல்லை: சினிமாவை விமர்சனம் செய்பவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஆதவன், "நாமளும் ஒரு ரெஸ்பான்சிபிலான பொசிஷன்ல இருக்கோம். நாம போட்டா நாலு பேர் பாப்பாங்கன்னு உங்களுக்கு தெரியணும். கலாய்க்கிறது மட்டும்தான் வேலையா வச்சிருக்காங்க" என்று சாடினார்.இறுதியாக, சினிமா தொழிலை ஆதரிக்கவில்லை என்றால், இங்கு நீங்களும் வாழ முடியாது, நானும் வாழ முடியாது, கேமராமேனும் வாழ முடியாது என்று ஆதவன் கவலையுடன் தெரிவித்தார்.விமர்சகர்களுக்கு எதிராக வடிவேலு சமீபத்தில் கருத்து தெரிவித்த நிலையில், ப்ளூ சட்டை மாறன், பிரசாந்த் ரங்கசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஆதவன் இவர்களை குறிப்பிட்டே பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











