»   »  பில்லா ரஜினிக்கு காணிக்கை-அஜீத்

பில்லா ரஜினிக்கு காணிக்கை-அஜீத்

Subscribe to Oneindia Tamil

நான் நடித்து பில்லா படத்தின் ரீமேக்கை சூப்பர் ஸ்டார் ரஜினிக்குக் காணிக்கையாக்குகிறேன் என்று அஜீத் கூறியுள்ளார்.

தல அஜீத்துக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி நேற்று பத்திரிக்கையாளர்களை அழைத்து விருந்து வைத்து சிறப்புப் பேட்டி கொடுத்தார் அஜீத்.

இதுவரை இல்லாத அளவுக்கு மனம் திறந்து படு ரிலாக்ஸ்டாக பேசினார் அஜீத். அவர் இப்படிப் பேசிய ரொம்ப நாட்களாகி விட்டதால் பத்திரிக்கையாளர்களும் படு ஜாலியாக பல கேள்விகளைக் கேட்டனர். அத்தனைக்கும் படு நிதானமாக பதிலளித்தார் அஜீத்.

பில்லா ரீமேக் குறித்துத்தான் அனைவரும் ஆவலோடு கேட்டார்கள். இன்னும் பில்லா படத்தின் பிரமிப்பே ரசிகர்களிடம் உளள நிலையில் அந்தப் படத்தை ரீமேக் செய்ய வேண்டிய அவசியம் என்ன, இயக்குநர்களிடம் கற்பனை வறட்சி ஏற்பட்டு விட்டதா, ஏன் இந்த ரீமேக்கில் நீங்கள் நடிக்கிறீர்கள் என்று சரமாரியாக கேள்விகள் வந்து விழுந்தன.

ஆனால் இவற்றுக்கு அஜீத் படு கூலாக பதிலளித்தார். முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். பில்லாவே ஹிந்திப் படமான டான் படத்தின் ரீமேக்தான். சமீபத்தில் டான் படத்தை ஷாருக்கானை வைத்து ரீமேக் செய்தார்கள். அது பாலிவுட்டில் மெகா ஹிட் ஆனது.

தமிழிலும் பில்லா சூப்பர் ஹிட் படம். பல லட்சம் மக்களை சந்தோஷப்படுத்திய படம். அந்தப் படத்தை இப்போது ரீமேக் செய்யவுள்ளனர். என்னை அதில் நடிக்க வைத்துள்ளனர்.

இதில் பல ரிஸ்க்குகள் உள்ளன. ஒரிஜினல் படத்தின் புகழைக் கெடுத்து விடக் கூடாது. காட்சிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்படி பல சிக்கல்கள் உள்ளன. எனவே நானும் கவனமாக நடிக்கவுள்ளேன்.

ஆனால் இந்தப் படம் ரஜினி சாரின் பில்லாவுக்கு பெருமை சேர்க்கும் வகையிலேயே அமையும் என நம்புகிறேன். இந்தப் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்ததுக்கு காணிக்கையாக்குகிறோம் என்றார் அஜீத்.

சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் பெறுவேத எனது லட்சியம் என்று சில காலத்திற்கு முன்பு கூறினீர்கள். அதை அடைந்து விட்டீர்களா என்ற கேள்விக்கு அஜீத் பதிலளிக்கையில், முதலில் ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் பெறுவேன் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை.

அனைவருக்கும் உள்ள கனவு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைவதுதான். கடந்த கால தலைமுறையினருக்கு எம்.ஜி.ஆர்.தான் ரோல் மாடலாக இருந்தார். என்னைப் போன்ற இளைய தலைமுறையினருக்கு ரஜினிதான் ரோல் மாடல்.

அவர் அடைந்த புகழை, பெருமையை, இடத்தை அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவ்வளவுதான். அப்துல் கலாம் மாதிரி வர வேண்டும் என ஒரு குழந்தை விரும்பினால் உடனே, அந்தக் குழந்தையை அனைவரும் பாராட்டுகிறார்கள். ஆனால் நான் சூப்பர் ஸ்டார் மாதிர வர வேண்டும் என்று சொன்னால் உடனே தட்டிக் கொடுக்காமல் கன்னத்தில் அறைகிறீர்கள்.

ரஜினி சாரின் உயரத்திற்கு வர விரும்புகிறேன் என்றுதான் நான் சொன்னேன். அவர் இடத்தைப் பிடிக்கப் போகிறேன் என்று கூறியதில்லை. அது சாத்தியமும் அல்ல.

பில்லாவை ரீமேக் செய்வது என்ற முடிவு எடுக்கப்பட்டவுடனேயே நான் ரஜினி சாரை சந்தித்தேன். அவரிடம் கூறினேன். அவர் உடனடியாக வாழ்த்துக்கள் சொல்லி ஊக்கப்படுத்தினார். தைரியமாக செய்யுங்கள் என்றும் கூறினார். என்னை தனிப்பட்ட முறையிலும் வாழ்த்தினார்.

ஆழ்வார் கற்றுத் தந்த பாடம் என்னவோ?

ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் நான் நிறைய பாடம் கற்றுக் கொள்கிறேன். ஒவ்வொரு படத்திற்குப் பிறகும் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். பொறுமையுடன் எதையும் அணுக வேண்டும் என்பது ஆழ்வார் மூலம் நான் கற்றுக் கொண்ட பாடம். இனிமேல் கதைத் தேர்வில் மிகவும் கவனமாக இருப்பேன்.

சமீபத்திய உங்களது படங்கள் எல்லாம் ரீமேக் ஆக உள்ளதே, ஏதாவது ஸ்பெஷல் காரணம் உண்டா?

பார்ப்பவர்களின் பார்வையில்தான் அது ரீமேக் படம் என்பது உள்ளது. அதுகுறித்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை. சில படங்கள் அதுபோல அமைந்து விடுகிறது.

கடும் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்கள். பிறகு ஏன் பில்லா போன்ற ஆக்ஷன் படங்களைத் தேர்வு செய்கிறீர்கள்?

எனது முதுகில் 5 பெரிய ஆபரேஷன்கள் நடந்துள்ளன. எப்போதெல்லாம் நான் சண்டைக் காட்சியில் நடிக்கிறேனோ அப்போதெல்லாம் நரக வலியை அனுபவிக்கிறேன். ஆனால் எனது முயற்சிகளையும், நம்பிக்கையையும் நான் விட்டு விடுவதில்லை. எனக்கு நானே தன்னம்பிக்கையை கொடுத்துக் கொண்டு கடினமாக உழைக்கிறேன், சாதிக்க முயல்கிறேன்.

உங்களது அடுத்த படங்கள் ...

பில்லாவுக்குப் பிறகு அய்ங்கரன் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளேன். இன்னும் 2 தயாரிப்பாளர்களுடன் பேச்சு நடக்கிறது. ஆனால் இன்னும் முடிவாகவில்லை. 2008ல் ஆட்லாப்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படம் செய்யயவுள்ளேன்.

கிரீடம் குறித்து ...

மலையாலத்தில் வந்த கிரீடம் படத்தின் ரீமேக்தான் இது. இயக்குநர் விஜய் என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் பிரியதர்ஷனுடன் பல மலையாளப் படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளார். கிரீடம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக கிரீடம் அமையும் என்றார் அஜீத்.

படு கேஷுவலாக, ஜோவியலாக, ரிலாக்ஸ்டாக பேசிய அஜீத்தை அவரது மனைவி ஷாலினியும் சந்தோஷாக பார்த்துக் கொண்டிருந்தார். கடந்த கால அஜீத்தை விட இப்போது பேசிய அஜீத் ரொம்பவும் மெச்சூர்டாக தோன்றினார் என்பதை சொல்லாமல் விடக் கூடாது.

ஹேப்பி பர்த்டே தல!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil