இந்த சம்பவம் விஜய்யின் வாழ்க்கையில் ஒரு தீராத பழி..வலைப்பேச்சு அந்தணன் ஆதங்கம்!
சென்னை: கரூரில் விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக மாவட்ட, மாநில நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுவிட்டார். கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர். இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் பேட்டி அளித்துள்ளார்.
அதில், இப்படி ஒரு சம்பவம் இந்திய வரலாற்றில் நடந்ததே இல்லை, அண்ணா இறந்த போது அவரை பார்ப்பதற்காக, ரயிலின் மீது பயணம் செய்தவர்கள் கொள்ளிடம் ஆற்று பாலத்தில் அடிபட்டு இறந்தார்கள் என நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதன் பிறகு இவ்வளவு பெரிய கூட்டம் இறந்தது இப்போதுதான். எம்.ஜி.ஆருக்கு அலைகடல் போல கூட்டம் திரள்வார்கள். அங்கு தள்ளுமுள்ளு ஏற்படாத வகையில் இருந்தது. ஆனால், இங்கு, மிக மிஞ்சிய ஆர்வம், கட்டுப்பாடு அற்ற கூட்டமாக இருந்தது அதுதான் இந்த துயர சம்பவம் நடப்பதற்கு ஒரு காரணம்.

அந்தணன் பேட்டி: ஆனால், அந்தக் கூட்டத்தில் அடித்ததாகவும், கத்தியை வைத்து கீறியதாகவும் கட்சிக்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லாதவர்கள் சொல்கிறார்கள். அப்படி என்றால் அந்த கூட்டத்திற்கு ஏதோ ஒரு கும்பல் நுழைந்து இருக்கிறது என்பது தான் அர்த்தம். அதேபோல செந்தில் பாலாஜியை பற்றி விஜய் பாட்டு பாடியா போதுதான் தடியடி நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதையெல்லாம் சிசிடிவி ஆதாரங்களை வைத்து தான் விசாரணையின் நடத்த வேண்டும். ஒரு நபர் விசாரணை உண்மையாக நடக்கும் போது தான் இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பது தெரிய வரும்.
தீராத பழி: அதே போல, இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காமல் விஜய் மௌனமாக ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பியதுதான் மிகப்பெரிய வேதனையாக உள்ளது. ஆனால், அதன் பிறகு விஜய் யாரிடமும் பேசவே இல்லை, ஒருவிதமான மன அழுத்தத்தில் இருக்கிறார். யாருமே கிட்ட நெருங்க முடியாத அளவிற்கு ஒரு பெரிய கோபத்தில் விஜய் இருப்பதாக சொல்லப்படுகிறது. கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என காவல்துறையிடம் அனுமதி கேட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்கள் இப்பொழுது போக வேண்டாம் என சொல்வதாக கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் கரூருக்கு நான் சென்றே ஆவேன் என்று பிடிவாதத்தோடு விஜய் இருக்கிறார். ஒருவேளை காவல் துறை அனுமதி கொடுக்கவில்லை என்றாலும் நீதிமன்றத்தின் மூலமாக உத்தரவு வாங்கிக் கொண்டு செல்ல இருப்பதாக அங்கிருந்து தகவல் வருகிறது. விஜய் பேசக்கூடிய மனநிலையில் இல்லை என்றால், கட்சியில் இருக்கும் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள். இவர்கள் மருத்துவமனைக்கு சென்று இருக்கலாம். இந்த சம்பவம் விஜய்யின் வாழ்க்கையில் ஒரு தீராத பழி தான் என வலைப்பேச்சு அந்தணன் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











