»   »  சிவாஜி மாபெரும் வெற்றி: ஏவிஎம்

சிவாஜி மாபெரும் வெற்றி: ஏவிஎம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜி உலகெங்கும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது என்று தயாரிப்பாளர்கள் ஏவி.எம். சரவணன் மற்றும் எம்.எஸ்.குகன் ஆகியோர் சந்தோஷமாக கூறியுள்ளனர்.

உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் சிவாஜி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக ஏவி.எம். சரவணன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், படம் ரிலீஸான நாள் முதல் அதிக அளவிலான பிரிண்டுகள் கேட்டு வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

அமெரிக்காவுக்கு இன்று 7 கூடுதல் டிஜிட்டில் பிரிண்டுகளும், மலேசியாவுக்கு 3 கூடுதல் டிஜிட்டல் பிரிண்டுகளும் அனுப்பியுள்ளோம். ஆனால் இது போதாது, 10 வேண்டும் என்று மலேசிய விநியோகஸ்தர்கள் கோரியுள்ளனர்.

படத்தின் வியாபாரம் குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் மீண்டும் இணைந்து மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்ததற்காக பெருமைப்படுகிறோம்.

எப்போதுமே சினிமாவில் ரஜினிக்கென்று தனி ஆதிக்கம் உள்ளது. அது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

தமிழ் சூப்பர் ஸ்டாராக இதுவரை இருந்து வந்த ரஜினிகாந்த் சிவாஜி மூலம் உலக சூப்பர் ஸ்டாராக மாறியுள்ளார்.

தற்போது சிவாஜியை மலாய், சீன மொழிகளில் டப் செய்யக் கோரிக்கைகள் வந்துள்ளன. ஆனால் இப்போதைக்கு எங்களிடம் அந்தத் திட்டம் இல்லை. இதுகுறித்து இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மானிடம் கலந்து பேசி முடிவெடுக்கவுள்ளோம்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள எங்களது விநியோகஸ்தர்கள், கூடுதல் தியேட்டர்களில் படத்தைத் திரையிட வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

பல வெளிநாட்டு தியேட்டர்களில் சிவாஜி மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் ஒரு இந்தியப் படம் இந்த அளவுக்கு அதிக காலத்திற்கு திரையிடப்படுவது இதுவே முதல் முறையாகும், இது ஒரு புதிய சாதனையும் ஆகும் என்றார் சரவணன்.

சிவாஜி 30க்கும் மேற்பட்ட நாடுகளில் திரையிடப்பட்டுள்ளதாம். வெளிநாடுகளில் ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு நிகரான கூட்டம் அலைமோதுகிறதாம்.

சிவாஜியின் இந்த மாபெரும் வெற்றி குறித்து கோலிவுட் தரப்பிலிருந்து இதுவரை யாரும் வாயே திறக்கவில்லை. அவர்களுக்கு இது ஒரு புது அனுபவம்.

மலேசியாவில் புதிய வசூல் சாதனை:

மலேசியாவில் 40 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளதாம். 14ம் தேதி இரவிலிருந்தே சிவாஜியை ஓட்ட ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் டிக்கெட் வசூல், புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளதாம்.

முதல் நாளிலேயே ரூ. 60 லட்சம் வசூலாகியுள்ளதாம். இதற்கு முன்பு, இதே ஷங்கரின் ஜீன்ஸ் படம் வசூல் செய்த ரூ. 32 லட்சம்தான் சாதனை அளவாக இருந்தது. அது நடந்தது 1997ம் ஆண்டு. கிட்டத்தட்ட சரியாக 10 ஆண்டுகள் கழித்து அதே ஷங்கரின் சிவாஜி படம் புதிய வசூல் சாதனையைப் படைத்துள்ளது.

முதல் நாளில் கூட்டம் அலைமோதியதாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ரசிகர்கள் திரண்டு விட்டதாலும், மேலும் சில தியேட்டர்களில் படத்தை திரையிட்டுள்ளனர். கூடுதலாக 22 தியேட்டர்களில் தற்போது சிவாஜி ஓடிக் கொண்டிருக்கிறது.

சிவாஜி திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் திருவிழாக் கூட்டம் போல ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது என்று சரவணன் முகம் நிறைய மகிழ்ச்சியுடன் கூறினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil