தயாரிப்பாளராக தோற்ற வெற்றிமாறன்.. கழுத்தை நெரிக்கும் பல கோடி கடன்.. பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்!
சென்னை: இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேட் கேர்ள் இப்படத்தில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் முக்கிய ரோலில நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 5ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன், என்ன போன்றவர்களுக்கு படத் தயாரிப்பு என்பது மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது. சில இடங்களில் கடன் வாங்கி படம் எடுக்கிறோம். இது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதற்கு முன் நான் தயாரித்த மனுஷி படம் கோர்ட்டுக்கு போயிருக்கிறது. இந்தப் படத்திற்கும் நிறைய சவால்கள் இருந்தன. அதனால் 'பேட் கேர்ள்' படம் தான் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனியின் கடைசி படமாக இருக்கும். அதன்பிறகு கடையை இழுத்து மூடுகிறோம் என்று பேசி இருந்தார். இதுகுறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு Realone Media யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அடுத்தடுத்து தோல்வி படம்: வெற்றிமாறன் ஒரு நல்ல படைப்பாளி பல நல்ல படங்களை கொடுத்து இருக்கிறார். சமுதாய அக்கறை உள்ள கருத்துக்களை சொல்லக்கூடிய படங்களாக அவருடைய திரைப்படம் இருக்கும். இயக்குனராக இருந்த வெற்றிமாறன் தயாரிப்பாளராக மாறி உதயம் NH4, பொறியாளன், அண்ணனுக்கு ஜே, காக்கா முட்டை இப்படி நிறைய படங்களையும் தயாரித்திருக்கிறார். இவை அனைத்துமே சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்களாக இருந்தாலும் இந்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றிமாறனுக்கு லாபம் கொடுத்ததா என்றால் நிச்சயமாக லாபம் கொடுக்கவில்லை.
பெரும் கடன் சுமை: காக்கா முட்டை திரைப்படம் தான் வெற்றிமாறன் தயாரித்த திரைப்படங்களில் அனைவருக்கும் தெரிந்த படமாக உள்ளது. ஆனால், அதன் பிறகு வெற்றிமாறன் தயாரித்த அனைத்து திரைப்படங்களையும் பெயர் தெரியாத திரைப்படங்களாகத்தான் இருக்கிறது. இப்படி அடுத்தடுத்து திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருந்த வெற்றிமாறனுக்கு தொடர்ந்து தோல்வி வரும் போது, பெரும் கடன் சுமையில் வெற்றி மாறன் சிக்கி இருக்கிறார்.
ஆபத்தான துறை: தற்போது வெற்றிமாறன் அவர்கள் பேட் கேர்ள் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் கதையே ஒரு சர்ச்சைக்குரிய கதையாக இருக்கிறது. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்கிற அளவிற்கு பேசுபொருளானதை அடுத்து,சென்சார் போர்டு இதற்கு பலவித கட்டுப்பாடுகளை விதித்தது. பின் முறையீடு செய்தார். அதேபோல மனுஷி என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். அந்த படத்திலும் சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகள் இருப்பதாக அந்த படமும் நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறது. இயக்குனராக நல்ல திரைப்படங்களை கொடுத்து வந்த வெற்றிமாறன் தயாரிப்பாளராக மாறும்போது அதனால் ஏற்படும் அழுத்தத்தை அவரால் தாக்கு பிடிக்க முடியாத நிலைக்கு சென்று இருக்கிறார்.
ஒரு படைப்பாளி தயாரிப்பாளராக மாறும்போது அதில் இருக்கும் நுணுக்கங்கள் தெரியாமல், காசு வருகிறது என்பதற்காக, ஒரு பக்கம் படத்தை தயாரிப்போம், ஒரு பக்கம் படத்தை இயக்குவோம் என நினைத்துக் கொண்டு படத்தை தயாரிக்கிறார்கள். ஒரு படத்தை தயாரிப்பது என்பது இன்றைய காலகட்டத்தில விஷம் சாப்பிடுவது போல. தயாரிப்பு துறை ஆபத்தான துறையாக இருக்கிறது. அதனால் தான், வெற்றிமாறன் இப்படி சொல்லி இருக்கிறார் என பாலாஜி பிரபு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











