»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil
சினிமாவில் நல்ல கலைஞர்களை யாரும் கண்டு கொள்வதில்லை என்றும் 4 வெற்றிப்படம் கொடுத்தால் ரூ.2 கோடி சம்பளம்கொடுக்கிறார்கள் என்றும் இயக்குநர் பாலுமகேந்திரா வருத்தத்துடன் கூறியுள்ளார்.

தற்போது தனுஷ், ப்ரியாமணியை வைத்து அது ஒரு கனாக்காலம் என்ற படத்தை இயக்கி வரும் பாலுமகேந்திராவின் பேட்டி:

நான் சினிமாவுக்கு வந்து 35 வருடங்கள் ஆகிறது. 1971ல் நெல்லு என்ற மலையாள படத்திற்கு ஓளிப்பதிவாளராகபணியாற்றினேன். செம்மீன் இயக்குனர் ராமு காரியத் அந்தப் படத்தை இயக்கினார்.

1976ம் ஆண்டு இயக்குநராகி, கோகிலா என்ற கன்னடப்படத்தை இயக்கினேன். தமிழில் அழியாத கோலங்கள் முதல் சதிலீலாவதிவரை நான் இயக்கிய பல படங்கள் 100 நாட்கள் ஓடின. சதிலீலாவதி 150 நாட்கள் ஓடியது.

இருப்பினும், அந்தப் படத்திற்குப் பிறகு 5 வருடங்கள் எந்த வாய்ப்பும் வரவில்லை. வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்ததால்,பொருளாதார ரீதியாகக் கஷ்டப்பட்டேன்.

நான் எப்போதும் சம்பள விஷயத்தில் அடம் பிடிப்பவனல்ல. மற்றவர்கள் எவ்வளவு வாங்குகிறார்கள் என்பது தெரியாமல்சொற்ப சம்பளத்தில் வேலை செய்திருக்கிறேன்.

பி.சி. ஸ்ரீராம், அசோக்குமார், கே.வி. ஆனந்த் போன்றவர்கள் ஒளிப்பதிவுக்கு மட்டும் வாங்கும் பணத்தை விட, கதை,திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, டைரக்ஷன் ஆகிய 5 பொறுப்புகளுக்கும் சேர்த்து நான் குறைவாகவே வாங்கியிருக்கிறேன்.

அது எவ்வளவு பெரிய தப்பு என்பது இப்போதுதான் தெரிகிறது. எனக்கு கார், பங்களா இல்லையே என்று கவலைப்படவில்லை.இப்போதும் ஆட்டோவில் போவது சந்தோஷம்தான்.

இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம். கொஞ்சம் பணம் சேர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. என்னை பலதயாரிப்பாளர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். நான் முட்டாள்தனமாக இருந்தது தாமதமாகத் தான் தெரிந்தது.

படைப்பாளிகள் அமைப்பு தொடங்கிய காலத்தில், எல்லா இயக்குனர்களுடன் நெருக்கமாக பழகியபோதுதான் பொருளாதாரரீதியில் நான் எவ்வளவு பின்தங்கியிருக்கிறேன் என்பது தெரிந்து.

சிலர் ஒரு ரூபாய் என்று பேசிக்கொண்டதை நான் ஒரு லட்சம் என்று நினைத்திருந்தேன். பின்னர்தான் ஒரு ரூபாய் என்றால் ஒருகோடி என்பது தெரிந்தது.

4 வெற்றிப்படம் கொடுத்தால் பெரிய டைரக்டர் என்கிறார். 2 கோடி சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால் நல்ல படங்களைக்கொடுத்த மகா கலைஞர்களைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள்.

உடல் ரீதியாக நான் வயதாகி விட்டாலும், மனதளவில் நான் இளமையாகவே இருக்கிறேன்.

என் மகன் சங்கி மகேந்திரா என்னை விட சுதந்திரமானவன்; ஆழமானவன். என் புகழில் வாழ்வதை அவன் விரும்பவில்லை.தனியாக விளம்பரப்பட நிறுவனத்தை நடத்துகிறான். கார், பங்களா என வசதியாக இருக்கிறான்.

அவனுக்கு ஒரு மகன் பிறந்த பின்புதான் என்னை வயதானவனாக உணர்ந்தேன். என் தனிப்பட்ட வாழ்க்கையை எல்லோருக்கும்போட்டு உடைத்து விட்டேன். முக்காடு போட்டு அலைகிற ஆள் நான் இல்லை.

தனிப்பட்ட வாழ்க்கையில் மன நிறைவுடன் வாழ்கிறேன். நாளை பற்றி எனக்கு கவலை இல்லை. இப்போது என்ன நடக்கிறதுஎன்பதுதான் முக்கியம் என்றார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil