»   »  எல்லாப் புகழும் ஷங்கருக்கே!

எல்லாப் புகழும் ஷங்கருக்கே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எனக்குக் கிடைத்துள்ள அத்தனைப் புகழுக்கும், ஷங்கர்தான் முக்கியக் காரணம். அவர் தான் எனக்கு சினிமாவில் பிறப்பு கொடுத்தவர் என்று உணர்ச்சிவசப்படுகிறார் பரத்.

வாய் நிறைய ஆங்கிலத்தோடு, தனது காதலி வீட்டு பேக்யார்டில் ஜோடியாக உட்கார்ந்து கொண்டு வாயில் நுழையாத ஒரு ஆங்கில பாடலை உணர்ச்சிவசப்பட்டு பாடிய பாய்ஸ் பரத், இப்போது முற்றிலும் வித்தியாசமான நபராக மாறியிருக்கிறார்.

யாரைப் பார்த்தாலும் முதலில் கூறுவது வாங்கண்ணே என்றுதான். மனதளவில் மதுரைக்கார மச்சானாக மாறிப் போய் விட்டார் பரத். எல்லாம் காதல், வெயில், எம் மகன் என அடுத்தடுத்து மதுரைப் பக்கமே திரிந்து கொண்டிருப்பதால் வந்த வினை.

திடீரென பத்திரிக்கையாளர்களைக் கூப்பிட்டு கொஞ்ச நேரம் பேசினார் பரத். வந்தவர்களை வாய் நிறைய வாங்கண்ணே என்று விளித்தபடி பேசிய பரத், சினிமா என்பது ஒரு பெரிய உலகம். அதில் நானெல்லாம் ரொம்ப சின்னப் பையண்ணே. இயக்குநர் ஷங்கர் சார்தான் எனக்கு சினிமாவில் பிறப்பு கொடுத்தார்.

சினிமாவில் நான் பெற்ற வெற்றி, சிறப்புகள், புகழுக்கு அவர்தான் முழுக் காரணமும். அந்தப் பெருமையெல்லாம் அவரைத்தான் சேரும்.

காதலுக்குப் பிறகு நான் வெற்றிகரமான ஒரு நடிகராக மாறியிருக்கிறேன். வெற்றியை விட சந்தோஷம் தரும் விஷயம் எதுவும் இல்லண்ணே என்றார் பரத்.

வளரும் கலைஞர்களில் படு விறுவிறுப்பாக வளர்ந்து கொண்டிருப்பவர் பரத். இது அவரது கால்ஷீட் புக்கைப் பார்த்தாலே தெளிவாகத் தெரியும்.

ஆரம்பத்திலிருந்தே பிரபல இயக்குநர்கள், பிரபல நிறுவனங்களுடன்தான் நடித்துக் கொண்டிருக்கிறார் பரத். இப்போது வெயிலுக்குப் பிறகு கில்லாடி, நேபாளி, ஷங்கரின் தயாரிப்பில் ஒரு புதுப்படம் என படு பிசியாக இருக்கிறார் பரத்.

முதல் முறையாக கூடல் நகர் படத்தில் இரட்டை வேடத்திலும் அசத்தியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படம் திருப்திகரமான வசூலை தந்து கொண்டுள்ளதாம்.

அடுத்தடுத்து ஹிட் படம் கொடுத்து வருவதால், சத்தம் போடாமல் முன்னணி இளம் நடிகராக மாறி வருகிறார் பரத் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

நேபாளி படத்தில் அச்சு அசல் நேபாள நாட்டுக்காரராக நடிக்கிறாராம் பரத். இதற்காக மும்பையிலிருந்து மேக்கப்மேனை வரவழைத்து மேக்கப் போட்டுள்ளனராம். கமல்ஹாசன் நேபாள நாட்டுக்காரரா மேக்கப் போட்டு நடித்த எனக்குள் ஒருவன் படத்தையும், பத்து தடவைக்கும் மேல் பார்த்து கெட்டப் ஸ்டடி செய்தாராம்.

சரி, கல்யாணம் எப்பண்ணே என்று பரத்திடம் கேட்டபோது, அட போங்கண்ணே, இப்போதைக்கு சினிமாதான் முக்கியம். கல்யாணத்தைப் பத்தி நினைக்கக் கூட நேரமே இல்லண்ணே என்று வெட்கத்தோடு எகிறி ஓடினார் பரத்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil