»   »  பாலா படம்-பாவனா வருத்தம்

பாலா படம்-பாவனா வருத்தம்

Subscribe to Oneindia Tamil

பாலாவின் நான் கடவுள் படத்தில் நடிக்க முடியாமல் போனது மிக வருத்தமான விஷயம் என்கிறார் நடிகை பாவனா.

பாலாவின் இயக்கத்தில் விறுவிறுப்பாக ஆரம்பிக்கப்பட்ட படம் நான் கடவுள். பலவித சர்ச்சைகளைத் தொடர்ந்து ஆர்யா, பாவனா நடிப்பில் படத்தைத் தொடங்கினார் பாலா.

சில காட்சிகளில் பாவானா நடித்திருந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பாவனாவிடம் வாங்கிய கால்ஷீட் தீர்ந்து போகும் வரை காத்திருந்த பாலா, அதன் பின்னர் வேறு நாயகியைத் தேடத் தொடங்கினார். இதனால் பாவனா படத்தில் இருக்கிறாரா, இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில், கார்த்திகாவை பாவனா ரோலுக்குத் தேர்வு செய்தார் பாலா. இதன் மூலம் நான் கடவுள் படத்தில் பாவனா இல்லை என்பது உறுதியானது.

இந்த செய்தி பாவனாவுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாம். இதுகுறித்து அவர் கூறுகையில், பாலா மிகப் பெரிய இயக்குநர். அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அப்போதுதான் நான் கடவுள் படத்தில் நடிக்க வருமாறு அழைத்தார் பாலா.

அதைக் கேட்டதும் எனக்குப் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. 2 மாதங்கள் கால்ஷீட் கொடுத்தேன். ஆனால் அதில் 7 நாட்களை மட்டுமே பயன்படுத்தினார் பாலா. இதனால் மற்ற நாட்களில் நான் வீட்டிலேயே உட்கார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இருந்தாலும் கூட நான் பாலாவின் படத்தை மிஸ் செய்ய விரும்பவில்லை. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியவர் பாலா. அப்படிப்பட்டவரின் படம் கைநழுவிப் போக நான் விரும்பவில்லை. இந்த நிலையில் கூடுதல் கால்ஷீட் வேண்டும் என்று இயக்குநர் கேட்டதால் மேலும் 2 மாதங்களுக்கு கால்ஷீட்டை நீட்டித்துக் கொடுத்தேன்.

படம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளை சரி செய்து விட்டு ஷூட்டிங்கை பாலா சார் மீண்டும் தொடங்குவார் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் எனது நம்பிக்கை எல்லாமே வீணாகிப் போய் விட்டது. இதனால்தான் நான் படத்திலிருந்து விலக முடிவு செய்தேன்.

ஆனால் இன்னும் கூட நல்ல படத்தை நழுவ விட்டு விட்டோமே என்ற ஆதங்கமும், ஏமாற்றமும் எனக்குள் உள்ளது. எனது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த கிடைத்த நல்ல வாய்ப்பு நான் கடவுள். ஒரு நடிகையாக பாலா படங்களின் மதிப்பை நான் அறிவேன். அதனால்தான் இப்போதும் எனக்கு வருத்தமாக உள்ளது.

நடிகை கார்த்திகா இப்போது நடிக்கவுள்ளார். அவரை நான் வாழ்த்துகிறேன். தூத்துக்குடி படத்தில் அவர் பாடி நடித்த கருவாப்பையா பாடலைப் பார்த்துள்ளேன். நல்ல நடிகை, நான் கடவுள் நாயகிக்குப் பொருத்தமான நடிகை. இப்படத்தின் மூலம் அவருக்கு மிக நல்ல பெயர் கிடைக்கும் என்றார் பாவனா.

பாவனா இப்போது தமிழில் ஜீவாவுடன் ராமேஸ்வரம், மாதவனுடன் வாழ்த்துக்கள் ஆகிய படங்களில் நடிக்கிறார். இன்னொரு படமும் கையில் இருக்கிறதாம். இதுதவிர மலையாளம், தெலுங்கிலும் தலா ஒரு படம் இருக்கிறதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil