»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

பூபதி ராஜா என்றால் நிறைய பேருக்குத் தெரியாது. ஆனால் பிரியமானவளே படத்தின் கதாசிரியர்தான் அவர்என்று கூறினால், ஓ .. அவரா என்று கேட்கத் தோன்றும்.

பிரியமானவளே படத்தின் கதை முதலில் பவித்ர பந்தம் என தெலுங்கில் படமாக்கப்பட்டு வெற்றிபெற்றது. அதன் பிறகு ஹிந்தியில் ஹம் ஆப்கே தில் மேரெஹ்தே ஹை என்ற பெயரில் படமாக்கப்பட்டது.

இப்படத்தின் கதை லண்டன் சினிமா விழாவில் சிறந்த கதையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த கதைகளுக்காக தெலுங்கில் நந்தி விருது பெற்றுள்ளார்பூபதி ராஜா.

ஹிந்தியில் சல்மான்கான் மற்றும் ராணி முகர்ஜி நடிக்கும் மற்றொரு படத்திற்கு பூபதி ராஜாவே கதை எழுதுகிறார். பிரியமானவளே வெற்றி குறித்தும்,தனது கதாசிரிய அனுபவம் குறித்தும் மனம் திறந்து பேசுகிறார் பூபதி ராஜா.

இதோ பேட்டி ...

திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளீர்கள். எப்போது கதாசிரியர் ஆனீர்கள்?

என்னுடைய தந்தை மறைந்த பாலமுருகன் சிவாஜியின் தங்கப்பதக்கம், வசந்த மாளிகை போன்ற படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்தார். என்னுடையஆரம்ப கால குரு எனது தந்தையே.

நான் குழந்தை நட்சத்திரமாக மாறியது தற்செயலாக நிகழ்ந்த ஒன்றாகும். ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் ஒரு பக்தி பாடலுக்கு ஜூனியர் ஸ்ரீகாந்த்தாகநடிக்க வைத்தனர். அதன் பிறகு தங்கப்பதக்கம், முருகன் காட்டிய வழி, திருடி, மாணிக்கத்தொட்டில் போன்ற படங்களில் நடித்துள்ளேன்.

நடிகரும்- இயக்குநருமான திரு.ராம ராஜன் அவர்கள் தான், ராமதாஸ் இயக்கிய ராஜா ராஜா தான் படத்திற்கு கதை எழுதும் வாய்ப்பு தந்தார். அதன்பிறகு நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு, இரட்டை ரோஜா போன்ற படங்களுக்கு கதை எழுதினேன். ராம ராஜனே, தேடி வந்த ராசா படத்தை இயக்கும்வாய்ப்பை தந்தார். அப்படம் சிறந்த வெற்றியைப் பெற்றாலும் சிரஞ்சீவி நடித்த முட்டா மேஸ்திரி(1992) படத்தின் கதை வெற்றி பெற்றதால் முழுநேரகதாசிரியராக மாறிவிட்டேன்.

சபாஷ் ராமு , சுபலேகானாம், பவித்ர பந்தம், பெல்லி சேஸ் கொண்டாட்டம், மாஸ்டர் போன்ற படங்கள் வெற்றி பெற்றதுடன் சிரஞ்சீவி நடித்த மாஸ்டர்படத்தின் கதைக்காக ஆந்திர அரசின் நந்தி விருது கிடைத்தது.

உங்களோட கதைகள் வெற்றிகரமாக அமைந்து விடுகிறதே?

என்னுடைய கதைகள் எப்பொழுதும் பெண்களையும் இளைஞர்களையும் மனதில் கொண்டே எழுதப்படுபவையாகும். காதல் கதைகளாட்டும், குடும்பகதைகளாகட்டும் அவை ஒரு சாராருக்கு மட்டும் பொருந்தாமல் அனைவரையும் கவரும் வகையில் எழுதப்பட வேண்டும்.

என்னால் குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்க்கும் வகையில் கதை எழுத முடியும். அதே சமயம் மக்களை கவரக்கூடிய சிரஞ்சீவி, வெங்கடே.ஷ்,நாகார்ஜூனா போன்ற நடிகர்கள் அக்கதைகளில் நடிக்கும்பொழுது படம் நிச்சயம் வெற்றி பெறும்.

தொடர்ந்து படங்களை இயக்காததற்கு காரணம் ...

தொடர்ந்து பல படங்களுக்கு கதை எழுத வேண்டி இருந்ததால் என்னால் தொடர்ந்துபடங்களை இயக்க முடியவில்லை. தற்பொழுது கூட ஸ்ரீனிவாசன் இயக்கத்தில்நாகார்ஜூனாவுக்கு ஒரு படமும், வெங்கடேஷ் நடிக்கும் திருவிக்ரம ராவின்படத்துக்கும், கீதா ஆர்ட்ஸின் சிரஞ்சீவி நடிக்கும் படத்திற்கும் கதை எழுத வேண்டிஉள்ளது.

இது தவிர ஹிந்தியில் சல்மான்கான் - ராணி முகர்ஜி படத்திற்கும், ஆர்.கே பிலிம்ஸ்படத்திற்கும் கதை எழுத வேண்டி உள்ளது.

மதறாஸி களின் கதைகளுக்கு முக்கியத்துவம் தராத ஹிந்தி சினிமா உலகில் கபூர்சகோதரர்கள் தங்களின் கதையை ஏற்றுக்கொண்டுள்ளது குறித்து ....

ஹிந்தியில் ஏற்கெனவே ஜுடாய், ஹம் ஆப்கே தில் மே ரெஹ்தே ஹை, ஹமாரா தில்ஆப்கே பாஸ் ஹை போன்ற படங்கள் என்னுடைய கதையில் வந்துள்ளன. கபூர்சகோதரர்களுக்கு என்னுடைய கதையை சொல்ல அனுமதி கிடைத்தபொழுது எனதுகனவு நனவானது.

என்னுடைய கதையை கேட்டபின் வழக்கம்போல் அதனை தங்களுடைய தாயாரானதிருமதி.ராஜ்கபூரிடம் கூறச்சொன்னார்கள். அவரும் அதை ஆமோதித்தவுடன் ரந்தீர்கபூர் சார், ஆர்.கே.சிம்பல் பொறித்த ஒரு தங்கச் சங்கிலியை எனது கழுத்தில்அணிவித்தார்.

திரையுலக வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம் ...

பவித்ர பந்தம் படத்திற்கு கலாசாகர் விருதை நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடமிருந்து பெற்றது மறக்கமுடியாத ஒன்றாகும். அவருடைய படத்திற்குஎனது தந்தை வசனகர்த்தாவாக இருந்தது மட்டுமல்ல நானும் அவருடைய படத்தில் குழந்தை வேடத்தில் நடித்துள்ளேன். அந்த மாமனிதரிடமிருந்து விருதுபெற்றது மறக்கமுடியாத ஒன்றாகும்.

மேலும், என்னுடைய கலையுலக வாழ்வை எனக்கு ஆதரவளித்து காத்த சிரஞ்சீவிக்கும், ராமராஜனுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

பூபதி ராஜா உங்க பெயரை கதை ராஜா என்று கூட மாற்றிக்கலாம்.

Read more about: bhupathi raja, cinema, story writer
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil