»   »  தசாவதாரம் தீபாவளிக்கு வருமா?-கமல்

தசாவதாரம் தீபாவளிக்கு வருமா?-கமல்

Subscribe to Oneindia Tamil

நான் நடித்து வரும் தசாவதாரம் படம் மிகப் பெரிய சப்ஜெக்ட், கஷ்டமான சப்ஜெக்ட், சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது என்று கலைஞானி கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த்தின் சிவாஜியைப் போலவே கமல்ஹாசனின் தசாவதாரம் படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கமல்ஹாசன் இந்தப் படத்தில் 10 வேடங்கள் போட்டுள்ளார். ஒவ்வொரு வேடமும் படு அட்டகாசமாக வந்துள்ளதாம்.

ஒவ்வொரு வேடம் குறித்தும் வெளியாகும் தகவல்கள் படம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. இந்த நிலையில், சென்னை திரைப்பட கழகமும், இந்திய அமெரிக்க வர்த்தக சபையும் இணைந்து சென்னையில் இந்திய சினிமா குறித்த கருத்தரங்கை நடத்தின.

இதில் கலந்து கொண்ட கமல் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தசாவதாரம் சற்று பெரிதான சப்ஜெக்ட், சிக்கலான சப்ஜெக்ட். சிறப்பாக உருவாகிக் கொண்டிருக்கிறது.படத் தயாரிப்பு இருக்கும்போது அதுகுறித்து விரிவாகப் பேச முடியாது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விரைவாக முடிந்தால் படமும் விரைவாக ரிலீஸாகும். அடுத்த மாதத்துடன் ஷூட்டிங் முடிவடைந்து விடும்.

அருமையான குழுப் பணி, நல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள், சிறப்பான தொழில் அணுகுமுறை எங்களுக்குக் கிடைத்துள்ளதால் எந்தவித சிக்கலும் இல்லாமல் படப்பிடிப்பு மிகவும் அருமையாக, சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.

தசாவதாரம் படம் குறித்த வழக்கு குறித்து நான் கவலைப்படவில்லை. அது விளம்பரம் தேட முனைவோரின் கை வேலை. சிவாஜி படத்தை எதிர்த்துக் கூட இதுபோன்ற மலிவான வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்தவில்லை. எங்களது வேலையை நாங்கள் சீரியஸாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

படம் தீபாவளிக்கு வருமா என்பதை இப்போது என்னால் சொல்ல முடியாது என்றார் கமல்.

கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிப்பது உலக அளவில் புதிய சாதனையாகும். இதற்கு முன்பு ஹாலிவுட் நடிகரான சர் அலெக் கின்னஸ் என்பவர் 1949ம் ஆண்டு எட்டு வேடங்களில் கைண்ட் ஹார்ட்ஸ் அண்ட் கொரோனெட்ஸ் என்ற படத்தில் நடித்தார்.

சிவாஜி கணேசன் 1964ம் ஆண்டு 9 வேடங்களில் நவராத்திரி படத்தில் நடித்திருந்தார். முதல் முறையாக பத்து வேடங்களில் நடிப்பவர் கமல் மட்டுமே. அந்த வகையில் தான் ஒரு உலக (சாதனை)நாயகன் என்பதை கமல் நிரூபித்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil