twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பாம்பு சட்டை... கீர்த்தி சுரேஷ், ஒரு சோற்றுப் பருக்கையின் கதை...' - இயக்குநர் ஆடம் தாசன் பேட்டி!

    By Shankar
    |

    சமீபத்தில் வெளியான பாம்புசட்டை திரைப்படம், ரசிகர்களிடயே வரவேற்பையும் மாறுபட்ட விமர்சனங்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறது. எளிய மக்களின் கதை, விளிம்புநிலை மக்களின் கதை, யதார்த்தமான கதை, வசனங்கள் அபாரம் என கொண்டாடப்பட்டாலும் தாமதமான வெளியீடு, வெளியீடு பிரச்சினை என ஒரு போராட்டத்திற்கு பின்பே தன் முதல் திரைப்படம் மக்கள் பார்வைக்கு வந்து சேர்ந்திருக்கிறது, என்கிறார் இயக்குநர் ஆடம் தாசன்.

    இயக்குநர் ஷங்கருடன் எந்திரன், அந்நியன், சிவாஜி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஆடம் தாசனுக்கு பாம்புசட்டை, இயக்குநராக முதல் திரைப்படம்.

     Director Adam Dasan's interview

    அவருடன் ஒரு நேர்காணல்...

    பாம்பு சட்டை படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். அதெப்படி நடந்தது?

    என் வீடு இருக்கும் தெருவில் தினமும் காலையில் தெருவை சுத்தம் செய்து குப்பைகளை அள்ளிச்செல்ல ஒரு இளம்பெண் வருவாள். மிக அழகாக இருப்பாள். அந்த பெண்ணுக்கு ஒரு காதல் இருந்தால், அது எப்படி இருக்கும் என யோசித்தேன். அதுதான் பாம்பு சட்டையில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம். படம் பார்த்த அனைவரும் கீர்த்தி சுரேஷையும் அவரது கதாபாத்திரத்தையும் கொண்டாடும்போது நிஜமாகவே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு எளிய மனிதனாக எளிய மனிதர்களைப் பற்றிய கதையை சினிமாவாக எடுத்ததில் பெருமைப்படுகிறேன்.

     Director Adam Dasan's interview

    படத்திற்கான கருத்துகள், விமர்சனங்கள், பாராட்டுகள் பற்றி...

    நிறைய பேர் நிறைய கருத்துகளை நேரிலும் தொலைபேசியிலும் பகிர்ந்துகொண்டார்கள். பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் இன்னும். முக்கியமாக படத்தின் கதாபாத்திரங்கள் பற்றியும் வசனங்களையும் குறிப்பிட்டுப் பாராட்டுகிறார்கள். ஒரு சோற்றுப் பருக்கையின் வரலாறு பற்றி சார்லி, தன் மகளிடம் சொல்கிற வசனம், வாட்ஸ் அப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது, என்று அதை ஒரு நண்பர் அனுப்பி வைத்தார். அந்த வகையில் பாம்பு சட்டை எனக்கு மனநிறைவைத் தந்திருக்கிறது.

    இன்று தமிழ் சினிமாவில் பட வெளியீடு என்பது வெகு சிரத்தையான ஒன்றாக இருக்கிறது. அதிலும் உங்கள் முதல் படம் பாம்புசட்டை, பெரிய அளவில் பிரச்சினைகளை சந்தித்திருக்கிறது. முதல்பட இயக்குநராக அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

     Director Adam Dasan's interview

    நீங்கள் சொல்வது உண்மைதான், நிறைய பிரச்சினைகளை கடந்து மிக காலதாமதமாக படம் வெளியானது எனக்கு பெரிய வருத்தம்தான். ஆனால், நான் இந்த படத்தின் கதையை தயாரிப்பாளர் மனோபாலா சாரிடம் சொன்ன நிமிடத்தை நினைத்துப் பார்க்கிறேன். அந்த நிமிடத்தை நினைத்து பார்க்கும்போது இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், பிற படங்களைப்போல ரிலீசான நேரத்தில், இன்னும் கொஞ்சம் விளம்பரம் செய்திருந்தால் இன்னும் பலருக்கு படம் சேர்ந்திருக்கும். பலரை முதல் இரண்டு, மூன்று நாட்களிலேயே தியேட்டருக்கு வர வைத்திருக்கும். அதுதான் கொஞ்சம் வருத்தம்.

    இயக்குநர் பா.ரஞ்சித் உங்களை அழைத்து பாராட்டியது பற்றி...

    இயக்குநர் ரஞ்சித் நேரில் பார்க்க வேண்டும் என்று அழைத்தார். 30 நிமிடங்களுக்கும் மேலாக படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அதிலும் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்தைப் பற்றியும், அவரது அப்பாவாக நடித்த சார்லி பற்றியும் சிலாகித்துப் பேசினார். கீர்த்தி சுரேஷ் பாத்திரப் படைப்பிற்காக உங்களை நூறு முறை பாராட்டுவேன் என்று கட்டிப் பிடித்துக்கொண்டார். எளிய மக்களின் கதைகள் சினிமாவாகி, அதற்கான அங்கீகாரம் கிடைக்கும்போது, அது ஒரு படைப்பாளனின் தனிப்பட்ட மகிழ்ச்சி அல்ல, இந்த சமூகத்தின் மகிழ்ச்சி என்றார் இயக்குநர் பா ரஞ்சித்".

     Director Adam Dasan's interview

    ஒரே ஒரு பருக்கையைக்கூட வீணாக்க விரும்பாத ஆடம் தாசனின், முதல் பருக்கையான பாம்பு சட்டை பலவகையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றுக்கொண்டிருப்பதில் ஆடம் தாசன், உற்சாகமாக தனது அடுத்த படத்திற்கான கதை பற்றிய யோசனையில் இருக்கிறேன் என்கிறார்.

    English summary
    Paambu Sattai Director Adam Dasan's interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X