»   »  சந்தோஷ 'சாகரத்தில்' பிரபுதேவா!

சந்தோஷ 'சாகரத்தில்' பிரபுதேவா!

Subscribe to Oneindia Tamil


'நடனப் புயல்' பிரபு தேவா முதன் முறையாக தனது குடும்பம் குறித்த தகவல்களை வெளியிட்டு, தனது மனைவி, குழந்தைகளை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

நடிப்பு ஏணியில் பிரபு தேவா ஏறத் தொடங்கியிருந்த நேரம் அது. திடீரென ஒரு பரபரப்புச் செய்தி வெளியாகி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. நடன நங்கை ரம்லத்தை பிரபு தேவா ரகசியக் கல்யாணம் செய்து கொண்டதாக அந்த செய்தி கூறியது.

இதை பிரபு தேவா அப்போது மறுத்தார். இருந்தாலும் உறுதியாக அதை மறுக்கவில்லை. அத்தோடு அந்த சமாச்சாரம் அமுங்கிப் போனது. இருந்தாலும் ரம்லத்துடன் பிரபு தேவா சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருவதாக பின்னர் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் முதல் முறையாக தனது குடும்பத்தை பகிரங்கமாக அறிமுகப்படுத்தியுள்ளார் பிரபு தேவா. ஆனந்த விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தனது மனைவி ரம்லத் மற்றும் இரு மகன்கள் குறித்து வெளிப்படையாக மனம் திறந்து பேசியுள்ளார் பிரபு தேவா.

பிரபு தேவா - ரம்லத் தம்பதிக்கு இரு மகன்கள். மூத்தவர் பெயர் பசவராஜ், இளையவர் ரிஷி ராகவேந்தர்.

தனது குடும்பம் குறித்து மனம் திறந்து பிரபு தேவா கூறியுள்ளதாவது ...

கூட ஆடும்போது கிடைத்த சினேகம்தான் ரம்லத். என் மீது ரொம்பவும் பிரியம் காட்டிய ஜீவன். ஆசைப்பட்டு கல்யாணம் செய்து கொண்டோம், அழகான இரு குழந்தைகள்.

மூத்தவர் பசவராஜுக்கு ஓவியம் என்றால் இஷ்டம். பார்த்த விஷயத்தை அப்படியே வரைய ஆரம்பித்து விடுவான். இளையவனுக்கு என்னைப் போல டான்ஸில் ஆர்வம். அதுவும் எனது டான்ஸை பார்த்து விட்டால் போதும் ஜாலியாகி விடுவான்.

குடும்பத்தை அழகாக வைத்திருக்கிறார் ரம்லத். எனக்கு எப்போதாவது பிரேக் கிடைத்தால் வீட்டிலேயேதான் இருப்பேன். அதுதான் சொர்க்கம். வீடே களேபரமாக இருக்கும்.

எதையுமே ஒளிவு மறைவு இல்லாம சொல்றதுக்கும் ஒரு பக்குவம் வரணும் பாஸ். அது இப்போதுதான் எனக்கு வந்திருக்கிறது என்று தனக்கே உரிய புன்னகையுடன் சொல்கிறார் பிரபுதேவா.

முதல் முறையாக இதுதான் தனது குடும்பம் என்பதை பெருமையோடு அறிமுகப்படுத்தியுள்ள பிரபு தேவாவுக்கு, தன்னை சிறந்த நடிகர் என்று மாபெரும் இயக்குநர் மகேந்திரன் கூறியிருப்பதை மிகப் பெரிய கெளரவமாக நினைக்கிறார்.

இதுவரை தன்னை எல்லோருமே மிகப் பெரிய டான்ஸர், டான்ஸ் மாஸ்டர் என்றுதான் கூறிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு தெரியும், நான் ஒரு நல்ல நடிகன் என்று. யாருமே இதை அங்கீகரிக்கவில்லையே என்று வருத்தத்துடன் இருந்தேன். ஆனால் இப்போது மகேந்திரன் சாரே சொல்லி விட்டதால் அந்த வருத்தம் சுத்தமாக போய் விட்டதாக திருப்தியுடன் கூறுகிறார்.

Read more about: family, prabudeva, ramlath

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil