»   »  கமலுடன் நட்பு - மனம் திறக்கும் கெளதமி

கமலுடன் நட்பு - மனம் திறக்கும் கெளதமி

Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசனுடன் எனக்கு உள்ள நட்பு, ஒரு திருமண பந்தத்தை விட நெருக்கமானது, நேர்மையானது என்று நடிகை கெளதமி கூறியுள்ளார்.

சரிகாவைப் பிரிந்த பின்னர் கமல்ஹாசனுக்கும், நடிகை கெளதமிக்கும் இடையே இருந்த நட்பு அதிகமாகி இருவரையும் இணைத்தது. இருவரும் இன்று இணைந்து வாழ்கின்றனர்.

கமல், கெளதமியின் நட்பு தனிப்பட்ட முறையிலானது என்றாலும் கூட அவ்வப்போது இதுகுறித்து எழுதப்பட்டும், பேசப்பட்டும் வருகிறது. இருப்பினும் இதுவரை இருவரும் இதுகுறித்து விரிவாக பொது இடங்களில் பேசியதில்லை.

முதல் முறையாக கெளதமி, கமல்ஹாசன் குறித்து வெளிப்படையாக பல விஷயங்களை தெரிவித்துள்ளார். கமல்ஹாசனுக்கும், தனக்கும் இடையிலான நட்பு குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.

கமல் குறித்து கெளதமி கூறுகையில், எனக்கு கமலை சிறு வயதிலிருந்தே பிடிக்கும். எனது வீட்டின் சுவர்களிலும், எனது அறையிலும் கமல்ஹாசன் படங்கள்தான் ஆக்கிரமித்திருக்கும். அவர் நடித்த ஒரு படத்தையும் விடாமல், அனைத்தையும் நான் பார்த்துள்ளேன்.

கமல்ஹாசனை, அவரது படங்களை ரசித்து வந்த நான் ஒரு கட்டத்தில் அவருக்கே ஜோடியாக நடிப்பேன் என்ற நிலை வந்தபோது என்னால் அதை நம்பவே முடியவில்லை. மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

இடையில் எனது திருமணத்திற்குப் பிறகு எனக்கும், நடிப்புக்கும் இடையே பெரிய இடைவெளி விழுந்திருந்தது. பின்னர் திருமண வாழ்க்கையில் சில கசப்பான அனுபவங்களும் வந்து சேர்ந்தது. அதனால் நான் மிகுந்த மனச் சோர்வடைந்திருந்தேன்.

அப்போதுதான் எனக்கு பஞ்சதந்திரம் பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடமிருந்து போன் வந்தது. படத்தில் ஒரு ரோல் இருக்கிறது நடிக்க வேண்டும் என்றார். ஆனால் என்னால் நடிக்க முடியாதது என்று நான் கூறினேன்.

அவர் எதுவும் பேசாமல் கமல்ஹாசனிடம் போனைக் கொடுத்தார். அவரிடம் நான் நடிக்க முடியாத நிலையில் இருப்பதைத் தெரிவித்தேன். ஆனால் அவரோ, நடிக்காவிட்டால் பரவாயில்லை. செட்டுக்கு வந்து போங்களேன் என்றார்.

கமல் கூப்பிட்டதால் நான் பஞ்சதந்திரம் செட்டுக்குப் போனேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமலை சந்தித்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. இடையில் விட்டுப் போன எங்களது நட்பை புதுப்பித்துக் கொண்டோம்.

அடிக்கடி சந்தித்தோம். பஞ்சதந்திரம் செட்டிலேயே அரட்டை அடிப்போம். இருவருக்கும் பொதுவான விஷயங்கள் குறித்துத்தான் விவாதம் இருக்கும்.

இந்த நிலையில்தான் சரிகாவை பிரிந்தார் கமல். பிறகு 2 வருடம் தனிமையில் வாழ்ந்தார். அப்போது அவர் அனுபவித்த வேதனைகள், சந்தித்த சோதனைகள் என்னை மிகவும் பாதித்தன. அவரைப் பார்த்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன்.

இந்த நிலையில்தான் கமலை விட்டுப் பிரிந்து சென்ற இரு குழந்தைகளும் (ஸ்ருதி, அக்ஷரா) மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தனர். இதனால் கமல் சந்தோஷமானார்.

குழந்தைகள் இருவரும் பிரிந்திருந்த காலத்தில் கமல் எந்த அளவுக்கு வேதனைப்பட்டார் என்பது எனக்கு மட்டுமே தெரியும். கண்கலங்கிக் காணப்படுவார். அதைப் பார்க்கவே கொடுமையாக இருக்கும்.

எனது மகள் சுப்புலட்சுமியைப் போலத்தான் ஸ்ருதியும், அக்ஷராவும். அவர்களை குழந்தையாக இருந்தபோதிலிருந்தே எனக்குத் தெரியும். இப்போது பெரியவர்களாகி விட்டாலும் கூட எனக்கு சுப்புலட்சுமியைப் போலத்தான் அவர்களும்.

அதேசமயம், நான் அவர்களை எனது மகள்கள் என்று உரிமை கொண்டாட முடியாது. செய்யவும் மாட்டேன். அவர்களின் தாய் சரிகா. அவரிடம், இருவரும் பாசமாகவே இருக்கிறார்கள். நான் அவர்களின் நல்ல தோழியாக இருக்கிறேன். அவர்களுக்கு நான் தேவைப்படும்போது முன்னால் இருப்பேன்.

எனக்கு புற்று நோய் வந்தபோது கமல் முகத்தில் தெரிந்த மாற்றம் என்னால் இன்னும் மறக்க முடியாது. அந்த முகத்தில் வலி தெரிந்தது. எனக்கு மலை போல உதவியாக இருந்தார். கமல் எவ்வளவு பெரிய மனிதர். அவரே நமக்காக வருத்தப்படுகிறாரே என்று யோசித்தபோது எனது தன்னம்பிக்கை கூடியது. தைரியம் வந்தது.

இப்போது நான் எடுத்து வைக்கும் ஒவவொரு அடிக்கும் அவர் பக்க பலமாக, ஆதரவாக இருக்கிறார். எந்தவித நிபந்தனையுமின்றி வழி காட்டுகிறார், ஒத்துழைக்கிறார்.

எனக்கும் கமலுக்கும் இடையிலான உறவு, திருமண பந்தத்தை விட நெருக்கமானது, நேர்மையானது, அதிக ஈடுபாடு கொண்டது என்று கூறியுள்ளார் கெளதமி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil