யாரு இந்த தேவ் சூர்யா?.. இந்திரா படத்தின் மூலம் அறிமுகமானவரை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க!
சென்னை: தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக் மற்றும் இர்ஃபான் மாலிக் இணைந்து தயாரித்த திரைப்படம் "இந்திரா." அறிமுக இயக்குநர் சபரிஷ் நந்தா இயக்கத்தில் உருவான இந்திரா திரைப்படத்தில் வசந்த் ரவி மற்றும் மெஹ்ரீன் பிர்சதா இணைந்து நடித்தனர். இந்தப் படத்தில் அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர், சுமேஷ் மூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்திரா திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் தேவ் சூர்யா. இவர் அளித்த பேட்டி பின்வருமாறு.,

சினிமாவில் நுழைந்தது எப்படி?
தமிழ் திரையுலகில் நான் "இந்திரா" திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானேன். முன்னதாக 2018ஆம் ஆண்டு கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்தேன். எனினும், அந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை. அந்த வகையில், நான் சினிமாவில் அதிகாரப்பூர்வமாக நுழைந்தது அந்தப் படத்தில் தான் என்றாலும், நான் அங்கம் வகித்து வெளியான முதல் திரைப்படம் "இந்திரா."
பாடலாசிரியர் ஆனது எப்படி?
எனக்கு தமிழ் மொழி மீது இருந்த விருப்பம் தான் பாடலாசிரியர் ஆகியிருக்கிறேன். என் பாட்டி தமிழ் ஆசிரியை. அதனால் எனக்கு தமிழில் தெரியாத சந்தேகங்களை அவரிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு இருந்தது. என் பாட்டி மூலம் தான் தமிழ் மொழி மீது எனக்கு விருப்பம் வந்தது. இதனால் தான் எனக்கு எழுத வேண்டும் என்ற ஆர்வமும் வந்தது. நான் என் அம்மா, நண்பர்கள் மற்றும் என்னை சுற்றி இருந்தவர்களுக்காக கவிதை எழுத துவங்கினேன். என் நண்பர்களின் காதலுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு காதல் கவிதைகள் எழுதி கொடுத்திருக்கிறேன். எழுத்து மூலம் பணமின்றி ஒருவரை மகிழ்ச்சியில் ஆழ்த்த முடியும் என்ற நிலை உருவானது. அதுவே நான் அதிகம் எழுதவும் காரணமாக இருந்தது. பரிசு பொருட்கள் இன்றி எழுத்தின் மூலம் ஒருவரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதை போல் ஒரு சந்தோஷம் இருக்கவே முடியாது.
பாடலாசிரியராக உங்களது முதல் படம், உங்களுக்கு பிரேக் கொடுத்தது யார்?
திரையுலகில் பாடலாசிரியராக நான் அறிமுகமான படம் இந்திரா தான். இந்தப் படம் தொடங்கும் முன்பிருந்தே நான் இசையமைப்பாளர் அஜ்மல் தஹ்சீனுடன் இணைந்து அவ்வப்போது ஜேமிங் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தோம். அந்த வகையில் தான் இந்திரா படத்திற்கு பாடலாசிரியராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திரையுலகில் நான் பாடலாசிரியர் ஆக இசையமைப்பாளர் அஜ்மல் முக்கிய காரணம். இதேபோல் நான் பாடலாசிரியராக அறிமுகமானதற்கு இந்திரா படத்தின் இயக்குநர் சபரிஷ் நந்தா மற்றும் தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக், இர்பான் மாலிக் ஆகியோருக்கு பெரும் பங்குண்டு. இயக்குநர் சபரிஷ் நந்தாவுக்கு என் எழுத்துக்கள் பிடித்திருந்தன. தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் நல்ல மனிதர், பண்பாளர், மிகவும் எதார்த்தமானவர். இவருக்கு எனது ராப் பகுதி மிகவும் பிடித்தது. இதனால் இந்திரா என் முதல் படமாக மாறியது.
எமன் யாரு பாடல் பற்றி கூறுங்கள்
இந்தப் பாடலுக்கான பின்னணி என்ன என்பது பற்றி எதுவும் சொல்லாமல் தான், இதற்கான பணியை தொடங்கினேன். அப்போது படத்தில் சுற்றிலும் கொலைகள் நடக்கும், ஆனால் அவை ஏன் நடக்கிறது, யாரால் நடக்கிறது என்பதே புரியாத இடத்தில் தான் இந்தப் பாடல் வருகிறது. இதனால் பாடலின் வரிகள் அழுத்தம் அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள். மேலும், இந்தப் பாடலின் காட்சிகளில் நடிகர் வசந்த் ரவி மற்றும் சுனில் என ஹீரோ, வில்லன் இருவரும் வருவார்கள் என்றனர். இருவரில் யார் எமன் என்பதை சொல்லாமல் பாடல் வரிகள் இருக்க வேண்டும் என்றார்கள். அப்படித் தான் இந்தப் பாடல் உருவானது.
பாடலின் தீம் பற்றியும், பாடல் டியூனிற்காக எழுதப்பட்டதா அல்லது பாடல் எழுதி டியூன் போடப்பட்டதா?
எமன் யார் பாடலை வெகுஜன பிரிவில் சேர்த்துவிட முடியாது. இந்தப் பாடலில் ராப் இருக்கிறது, ஆனாலும் இது ராப் பாடல் என்று கூற முடியாது. இந்தப் பாடலின் ராப் - பாடல் வரிகளோடு சேர்ந்தே வரும். எமன் யாரு பாடலுக்கு டியூன் கொடுக்கும் முன்பே எழுத தொடங்கினோம், டியூன் முடித்த பிறகும் எழுதினோம். இந்தப் பாடலுக்கு முதலில் டியூனிற்காகவே எழுதினோம்.
இயக்குநர் அல்லது இசையமைப்பாளர்களில் யாரேனும் பாடல் எப்படி இருக்க வேண்டும் என்று விவரித்தார்களா?
இந்தப் பாடலின் வரிகள் எப்படி இருக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் ஆலோசனைகளை வழங்கினார். ஆனால், அவை அனைத்தும் குழப்பமாகவே இருந்தன. இந்தப் பாடல் ஹீரோ, வில்லன் என யாரையும் குறிப்பிடக்கூடாது. ஆனால், இருவருக்கும் ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்றனர். இதனால், யார் அந்த எமன் என்று கேட்கும் வகையில் சூழல் அமைந்தது. அங்கிருந்து தான் "எமன் யார்" என்ற யோசனை வந்தது. அதன்பிறகு பாடல் உருவானது. இந்தப் பாடலில் எமன் யாரு என்ற வார்த்தைக்கு விசேஷ அர்த்தம் எதுவும் இல்லை. ஆனால், யார் இந்த கொலைகளை செய்கிறார்கள் என்பதை விவரிக்கும் அர்த்தம் தான் எமன் யாரு. இந்தப் படம் முழுக்க முழுக்க எமன் யார் என்பதை சுற்றியே இருக்கும். மற்றப்படி எமன் யாரு என்ற வார்த்தைக்கு விசேஷ அர்த்தம் எதுவும் இல்லை. பொதுவாக எமன் யார், உயிர்களை எடுப்பவர். அந்த வகையில், எமன் யார் என்பது இந்தப் படத்தில் மிகவும் விசேஷமானதாக இருக்கிறது. இதை தவிர்த்து அந்த வார்த்தைக்கு விசேஷ அர்த்தம் எதுவும் இல்லை.
ADK உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் பற்றி சொல்லுங்கள்
சிறு வயதில் பைக்குகள் மீது அதீத விருப்பம் இருந்ததால், நான் புதுப்பேட்டை பகுதியில் அதிக நேரம் சுற்றி இருக்கிறேன். புதுப்பேட்டையை சேர்ந்த குழுவினர் தான் துப்பாக்கிஸ் பேன்ட். இதனால் எனக்கு துப்பாக்கிஸ் குழுவினரை தெரிந்து கொள்ளும் சூழல் அமைந்தது. இந்த குழுவில் ஏடிகே இணைந்து பணியாற்றி வந்தார். திரைத்துறை தவிர்த்து இன்டிபென்டென்ட் இசை மீதான ஆர்வம் ஏடிகே அண்ணன் மற்றும் துப்பாக்கிஸ் பேன்ட் பார்த்து தான் வந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு ஏடிகே அண்ணாவை தெரியும். இன்டிபென்டென்ட் இசை மீதான ஆர்வம் ஏற்பட காரணமாக இருந்தவரும், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து ஏடிகே அவர்களுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது.
இசையமைப்பாளர் அஜ்மல் உடன் பணியாற்றிய அனுபவம் பற்றி கூறுங்கள்
நாங்கள் இருவரும் நண்பர்களாக இருக்கிறோம். நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே பாடல் அமைப்பது, பாடுவது என ஸ்டூடியோவில் அதிக நேரம் செலவழித்து இருக்கிறோம். நானும், இசையமைப்பாளரும் தொழிலை தாண்டி நண்பர்களாக இருந்ததால், எனக்கு அவருடன் பணியாற்றிய அனுபவத்தை விவரிக்க முடியவில்லை. பணியாற்றும் போதும், ரெக்கார்டிங்கின் போதும் நாங்கள் நண்பர்களாகவே இருந்தோம். அது மிகவும் இயல்பாக இருந்தது.
ரெக்கார்டிங்கின் போது நடந்த மறக்க முடியாத சம்பவம் பற்றி சொல்லுங்கள்
இந்திரா படத்திற்கான பாடல்களை பதிவு செய்து கொண்டிருந்த போது, ஒருமுறை ஏடிகே என்னிடம் இந்த வரிகள் முதல் முறை பாடல் எழுதுபவரின் எழுத்தாக தெரியவில்லை என்றார். எனக்கு அது மிகப்பெரிய பாராட்டாக இருந்தது. என்னால் அவர் சொன்னதை மறக்க முடியாது. மேலும், எமன் யார் என்ற பாடலின் கடைசி சில வார்த்தைகளை மாற்ற முடியுமா என ஏடிகே அண்ணா கேட்டிருந்தார். உடனே அவர் கேட்ட இடத்தில் சில வார்த்தைகளை மாற்றி, அதில் "எமனுக்கே நகரத்தில் நரகத்தை காட்டிட" என எழுதினேன். அதை படித்துவிட்டு ஏடிகே அண்ணா சிரித்துக் கொண்டே யார்டா நீ என்பது போல் கேட்டார். அவர் அப்படி கூறியது மறக்க முடியாத தருணம்.
உங்களுக்கு பிடித்த பாடலாசிரியர் மற்றும் உங்களது ரோல் மாடல் யார் என்று கூறுங்கள்
குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு யாரை சொல்வது என்று தெரியவில்லை. பெரும்பாலும், எனக்கு அதிகம் பிடித்த சில பாடல்களை எழுதியது யார் என்பது கூட தெரியாது. சில பாடல்களை கேட்கும் போது எனக்கு அதிகம் பிடித்துவிட்டால், உடனே அதனை யார் எழுதியிருக்கிறார்கள் என்பதை தேடி பார்க்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.
என் சிறுவயது முதலே ரோல் மாடல் யார் என்றால் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே, நான் கூறும் ஒரே பதில் அஜித் குமார் சார் தான். அவருக்கும் பாடல் வரிகளுக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு தெரியாது. ஆனால், என்னிடம் எனது ரோல் மாடல் யார் என்று கேட்டால் இப்போதும் சரி, எப்போதும் சரி நான் கூறும் பெயர் அஜித் குமார் சார் மட்டும் தான். ஒருவர் எப்படி வர வேண்டும் என்பதை குறிப்பதை மட்டுமின்றி இப்படியொரு மனிதராக வரவேண்டும் என்பதற்கும் ரோல் மாடல் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இதனால் எனக்கு அவரை தவிர வேறு யார் ரோல் மாடலாக இருக்க முடியும் என்று தெரியவில்லை.
உங்களது விசேஷ எழுத்துமுறை பற்றி சொல்லுங்கள்
தனிப்பட்ட முறையில் விசேஷமான எழுத்த முறை என எனக்கு எதுவும் இருந்ததில்லை. பாடலாசிரியராக நமக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டும். அனைத்து விதமான வரிகளையும் எழுத வேண்டும் என நினைக்கிறேன். எளிதில் எழுதக்கூடிய பாடல்கள் என்று ஏதேனும் இருக்கலாம். எமன் யார் என்ற பாடலில் வரிகள் அழுத்தம் அதிகமாக இருக்கும். அதற்காக அந்த மாதிரியான பாடல்களைத் தான் எழுதுவேன் என்றில்லை. நான், அந்தப் பாடலுக்கு முற்றிலும் நேர்மாறான பாடல்களை எழுதியிருக்கிறேன். அந்த வகையில், எனக்கென தனிப்பட்ட எழுத்து முறை எதுவும் இல்லை.
பாடலாசிரியர், நடிகராக உங்களது அடுத்த படங்கள் பற்றியும், நீங்கள் எழுத விரும்பும் பாடல்கள் பற்றியும் கூறுங்கள்
என்னை பொருத்தவரை சினிமா என்றாலே எனக்கு அதிகம் பிடித்தது நடிப்பு மட்டும்தான். எமன் யாரு பாடல் வெளியானது முதலே பாடலாசிரியராக எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சினிமாவில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என எல்லாமே இணைந்த குடும்பம் போன்றது தான். பாடலாசிரியராக எனக்கு இது நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு திரைத்துறையில் நடிப்பதற்கான வழியை அமைத்து வருகிறேன்.
சினிமாவில் பாடலிசிரியராக வருவதே நான் காணாத கனவு தான். இதை கனவு என்று கூற முடியாது, ஆனால் மாற்றத்தில் நானும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சமீபத்திய பாடல்களில் தமிழ் மொழிக்கு இருந்த முக்கியத்துவம் குறைந்துவிட்டதோ, பழைய நபர்களுக்கு பாடல்கள் பிடிப்பதில்லையோ என நினைக்கிறேன். எல்லோரையும் கூறவில்லை ஆனால், முன்பு இருந்ததைவிட குறைந்து இருக்கிறது. இந்த மாற்றத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் மொழி அழந்துவிட்டால் வேறு எதுவுமே இல்லை என நினைக்கிறேன். பேச்சு வழக்கு வார்த்தைகள் அதிகம் பயன்பாட்டுக்கு வந்திருப்பதால் பழைய தமிழ் காணாமல் போனதாக நினைக்கிறேன். இதற்காக அந்த வழக்கம் இருக்கக்கூடாது என்று சொல்லவில்லை, ஆனால் அதே அளவுக்கு தமிழ் வார்த்தைகளும் இருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.
உலகின் மூத்த மொழி தமிழ். கல் தோன்றி, மண் தோன்றா காலத்தில் தோன்றிய மொழி தமிழ், இன்று சர்வதேச அளவில் பெரிதாக இல்லாதது கஷ்டமாக இருக்கிறது. தமிழ் மொழி, தமிழ் எழுத்துக்கள், பாடல் வரிகள் மூலம் இசையை பயன்படுத்தி தமிழை உலக அளவில் மேலும் எடுத்துச் செல்ல விரும்புகிறேன். தமிழ் தான் பெரியது என்பதை காட்டுவதோடு, உண்மையை உரக்க கொண்டு செல்ல வேண்டும் என நினைக்கிறேன்.
சினிமாவில் எனக்கு நடிப்பு மீதான ஆர்வம் எப்போதும் குறையாது. தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான பணிகளில் முழுவீச்சில் செயல்படுவேன். நான் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications











