»   »  டிவி இல்லாட்டி பழைய சினிமா அழிஞ்சுரும்ணே! - வடிவேலு

டிவி இல்லாட்டி பழைய சினிமா அழிஞ்சுரும்ணே! - வடிவேலு

Subscribe to Oneindia Tamil


தொலைக்காட்சியில் மட்டும்தான் இன்று பழைய சினிமாப் படங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. டிவிக்கள் இல்லாவிட்டால் பழைய சினிமாக்கள் அழிந்து போய் விடும் என்று வைகைப் புயல் வடிவேலு கூறியுள்ளார்.

Click here for more images

காமெடிப் புயலாக கலக்கிக் கொண்டிருக்கும் வடிவேலு 2வது முறையாக ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள படம் இந்திரலோகத்தில் நா. அழகப்பன். இப்படத்தில் 3 வேடங்களில் வடிவேலு அசத்துகிறார். அவருக்கு தீத்தா சர்மா, சுஜா உள்பட 3 ஜோடிகளும் கூட. இதுதவிர கலக்கல் நாயகி ஷ்ரியா படத்தில் வடிவேலுவுடன் ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்தப் பாடல் காட்சியை நெல்லை மாவட்டத்தின் எழில் கொஞ்சும் பகுதிகளான முக்கூடல், கல்லிடைக்குறிச்சி, சுந்தரபாண்டியபுரம் ஆகிய இடங்களில் படமாக்கி வருகின்றனர்.

அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் உள்ள காசிநாதர் கோவில் அருகே வடிவேலு, ஷ்ரியா ஆகியோர்ஆடிப் பாடுவது போல ஷூட் செய்தார் இயக்குநர் தம்பி ராமையா.

ஷ்ரியாவுடன் சிலுசிலுவென ஆடி முடித்து வந்த உட்கார்ந்த வடிவேலு காத்திருந்த செய்தியாளர்களுக்கு சுடச் சுட பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், விஜயகாந்த் ரசிகர்கள் ரகளை செய்த சம்பவத்தில் என்னை பற்றி ஒரு தமிழ் நாளிதழ் தவறாக குறிப்பிட்டிருந்தது. அந்த செய்தி என் மனத்திற்கு வேதனையை அளித்தது. பத்திரிக்கைகள் மக்களுக்கு உண்மையை சொல்லவேண்டும்.

நான் இதுவரை 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். இந்திரலோகத்தில் நா.அழகப்பன் புராணம் கலந்த கமர்ஷியல் படம். இந்த படத்தில் நான், இந்திரன், எமன், பூலோகவாதி என்ற 3 வேடங்களில் நடிக்கிறேன்.

யாருக்கும் கெட்டதை செய்யாதே, நல்லதை செய், என்பதை வலியுறுத்தும் கதைதான் இந்த படம். மனித வாழ்க்கையே கொஞ்ச காலம் தானே. ஆதலால் எந்த நேரமும் சந்தோஷத்தோடு இருக்க வேண்டும்.

எல்லோருடைய பிரச்சனைகளை போலவே எங்களை போன்ற நகைச்சுவை நடிகர்களுக்கும் பிரச்சனை உள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் நகைச்சுவையுடன் பிறரை சிரிக்க வைத்து வருகிறேன்.

எனக்குப் பழைய படங்கள்தான் ரொம்பப் பிடிக்கும். அதைத்தான் அதிகம் பார்ப்பேன். தொலைக்காட்சி என்ற ஒன்று இல்லையென்றால் பழைய படங்களே இல்லாமல் போயிரும்ணே.

என் அப்பா, தாத்தா எல்லாப் பேருமே காமெடியன்கள்தான். காமெடி எங்க பரம்பரையுடன் பிறந்தது, என் ரத்தத்தோடு பிறந்தது. இம்சை அரசன் 23ம் புலிகேசி தமிழ் சினிமா உலகத்திற்கே சவால் விட்டு எடுக்கப்பட்ட படம். அதை விட இந்த படம் தமிழ் திரைஉலத்திற்கு இன்னோரு சவாலாக இருக்கும்.

இந்திரலோகம், எமலோகம், பூலோகம் என 3 வகைகளாக பிரித்து எடுக்கப்பட்டது. இந்திரலோகம், எமலோகம் ஆகியவற்றில் 60 சதவீதக் காட்சிகளை எடுத்தாச்சு. பூலோகக் காட்சிகளை இப்போது எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நடிகை ஷ்ரியா பெரிய நடிகர்களுடன் நடித்தவர். ஆனால் எந்த கெளரவமும் பாராமல், என்னை ஒரு காமெடியன் என்றும் பாராமல் என்னுடன் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார். அவர் என்னுடைய தீவிர ரசிகை.

சினிமாவில் நகைச்சுவை பண்ணுகிற மாதிரி அரசியலில் பண்ண முடியாது. எனக்கு ஒரு ஆசை இருக்குண்ணே. அதாவது ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்து விட வேண்டும். அதுதான் எனது ஆசை.

நடிப்புடன் நகைச்சுவையும் கலந்து சொல்ல வேண்டும். அதுதான் நகைச்சுவை நடிகனுக்கு அழகு. என்னுடைய உசிரு இருக்கும் வரை மக்களை சிரிக்க வைத்து மக்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வைத்தியனாக இருப்பேன். அதுதான் எனது லட்சியம் என்றார் வடிவேலு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil