»   »  எனக்கு கல்யாணம் ஆயிருச்சு: ஜோதிர்மயிர்

எனக்கு கல்யாணம் ஆயிருச்சு: ஜோதிர்மயிர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகைகள் கல்யாணம் செய்து கொண்டால் தப்பா? நான் கல்யாணம் செய்த விஷயத்தை எல்லோருக்கும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லையே என்று ஜோதிர்மயி கடுப்பாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இளம் மலையாள நடிகைகள் ஒரு பக்கம் கும்மி அடித்துக் கொண்டிருக்க மறுபக்கம், கல்யாணமாகி வெகு நாளான முதிர் கன்னி ஒருவர் தன் பங்குக்கு சத்தாய்த்துக் கொண்டிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல ஜோதிர்மயி.

தமிழ் சினிமாக்காரர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு நல்ல பழக்கம் உண்டு. அதாவது நாயகிகளுக்கு கல்யாணமாகி விட்டால் அவர்களை அப்படியே கெளரவாக ஒதுக்கி வைத்து விடுவார்கள். மனதால் கூட அவர்களைத் தீண்ட மாட்டார்கள்.

இதனால்தான் பல நாயகிகள் பல காலமாக கல்யாணமே பண்ணிக் கொள்ளாமல் இழுத்துப் பிடித்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள் (தேவையான அளவு சேர்த்த பின்னர் விட்டு விடுவார்கள்).

அப்படியாப்பட்ட சினிமா உலகில் ஒரு நாயகி கல்யாணத்திற்குப் பிறகும் கலக்கிக் கொண்டிருக்கிறார் என்றால் அவர் ஜோதிர்மயி மட்டுமே.

கேரளத்து ஜோதிர்மயி, மலையாளத்தில் பிரபலமாக இருந்தபோதே கல்யாணம் கட்டிக் கொண்டவர். கல்யாணத்திற்குப் பிறகு மலையாளத்தில் வாய்ப்பு குறையவே அப்படியே தமிழுக்கு வந்தார்.

தன்னை ரிலையன்ஸ் ஃபிரஷ் தக்காளி போல பாவனை காட்டிக் கொண்டு கலக்க ஆரம்பித்தார். முதல் படமான தலைநகரத்திலேயே அவர் சுந்தர்.சியுடன் கோக்கு மாக்காக நடித்து அசத்தினார். அப்போதே அரசல் புரசலாக ஜோதிர் கல்யாணமானவர் என்ற செய்தி பரவ ஆரம்பித்தது.

இருந்தாலும், அதைப் பற்றி ஜோதிர்மயி கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து கித்தாப்பாக கிளாமர் காட்டி நடிக்க ஆரம்பித்தார். விஜயகாந்த்துடன் சபரி உள்ளிட்ட படங்களில் திறமை காட்டியிருந்த ஜோதிர்மயி, சமீபத்தில் வெளியான நான் அவன் இல்லை படத்தில் படு கிளாமராக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவ்ளோ கிளாமரா நடிக்கிறீங்க, கல்யாணமும் ஆகி விட்டது, உங்க கணக்குப் புரியலையே என்று அப்பாவித்தனமாக ஜோதிரிடம் கேட்டு விட்டோம்.

அதற்கு ஜோதிர் சொன்னார், நான் ஒன்றும் சட்டவிரோதமான காரியம் எதையும் செய்து விடவில்லையே. நடிகைகளும் சாதாரண மனிதர்கள்தான்.

எல்லோருக்கும் உள்ள அதே உணர்வுகள் எங்களுக்கும் உண்டு. எங்களுக்கும் குடும்பமும், குட்டியுமாக இருக்க ஆசை இருக்காதா என்ன.

ஒரு நடிகை உச்சத்தில் இருக்கும்போது கல்யாணம் செய்து கொள்வதில் என்ன தப்பு இருக்கிறது. நான் கல்யாணத்திற்குப் பிறகுதான் தமிழுக்கு வந்தேன். எனது கல்யாணத்தை யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்தேன். அதனால்தான் அதை சொல்லவில்லை.

தனிப்பட்ட வாழ்க்கைக்கும், தொழிலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இரண்டையும் ஒன்றாக சேர்த்துக் குழப்பிக்காதீங்க.

குடும்பத்தையும், தொழிலையும் ஒரு சேர சமாளிக்க திறமை வேண்டும். அந்தத் திறமை, அந்தக் கலை எனக்குக் கை கூடியுள்ளாதகவே நினைக்கிறேன்.

என் புருஷன் ரொம்ப தங்கமானவர். எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. சினிமாத் துறையின் நிஜத்தை நன்கு புரிந்து கொண்டவர் அவர். என்னைப் போன்ற நடிகைகளிடமிருந்து திரையுலகம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்கிறார்.

நான் கிளாமராக நடிப்பதை அவர் ஒருபோதும் ஆட்சேபித்தது இல்லை. அது எனது முடிவு. அதை அவர் எதிர்க்கவில்லை என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கூறி நிறுத்தினார் ஜோதிர்.

ஜோர்மா ஜோதிர்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil