போலி நம்பர்னா ஆம்புலன்ஸ் எப்படி ஓடும்.. ராப்பகலா உழைச்சு உதவுறேன்.. விமர்சனத்திற்கு KPY பாலா பதிலடி!
சென்னை: KPY பாலா குறித்து பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, KPY பாலா வெளிநாட்டு கைக்கூலி, அவர் கொடுத்த எல்லா ஆம்புலன்ஸும் போலியானவை. அவைகளுக்கு எல்லாம் இன்சூரன்ஸ் என்பது இல்லை என்று எல்லாம் தெரிவித்திருந்தார். மேலும் அவருக்கு பின்னால் சர்வதேச வில்லன்கள் எல்லாம் உள்ளார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
இப்படி இருக்கையில் இந்த பேட்டி குறித்து, KPY பாலா தனது கருத்துக்களை பத்திரிகையாளர் செய்யாறு பாலுவிடம் பகிர்ந்து கொண்டார். அதில், " என்னை சர்வதேச கைக்கூலி என்று எல்லாம் பேசி வைத்துள்ளார்கள். அது எனக்கே அதிர்ச்சியாக உள்ளது. நான் வண்டி வாங்கித் தருகிறேன் என்றால், அதை அவர்கள் அவர்கள் பெயரில் மாற்றிக் கொள்வார்கள். அதனால் நம்பரை மறைத்து கொடுக்கிறேன். அதற்கான எல்லா ஆதாரமும் என்னிடத்தில் சரியாக உள்ளது. நான் வாங்கிக் கொடுத்த அனைத்து ஆம்புலன்ஸ்களும் நன்றாக இயங்கிக் கொண்டுள்ளது. இதுவரை நான் செய்த அனைத்து உதவிகளையும் எனது சொந்தக் காசில், நான் சம்பாதிப்பதை கொண்டுதான் செய்து வருகிறேன். நான் கலக்கப்போவது யாருக்கு போகிறேன், நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறேன், நிகழ்ச்சித் தொகுப்பாளராக செல்கிறேன், இது மட்டும் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் புரோமோசன் செய்கிறேன், விளம்பரங்களில் நடிக்கிறேன், இது இல்லாமல் படம் பண்ணுகிறேன். இதை வைத்துத்தான் நான் உதவி செய்கிறேன்.

கிளினிக்: நான் பெரிய மருத்துவமனை கட்டுகிறேன் என்று கூறவே இல்லை. நான் கிளினிக் தான் கட்டுகிறேன் என்று கூறுகிறேன். சாதாரணமாக கட்டிட வேலைக்குச் செல்பவரின் ஒரு நாள் கூலி 850. தனியார் மருத்துவமனைக்கு சாதாரண சிகிச்சைக்காக சென்றாலே ரூபாய் 1200 வரை செலவாகிறது. இப்படி இருக்கும்போது, நாம் ஏன் நமது ஏரியாவில் ஒரு கிளினிக் கட்டக்கூடாது என்று நினைத்தேன். அதற்காக நான் வீடு கட்ட வாங்கிய இடத்தில் கிளினிக் கட்டவேண்டும் என்று கூறினேன். இந்த கிளினிக்கிற்கு வரும் மருத்துவர், நர்ஸ், அதன் மெயின்டனஸ் உள்ளிட்டவற்றிக்கு நான் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றால் அந்த பணத்தைக் கொடுத்து விடுவேன்.
நெம்பரை மறைக்க காரணம்: நான் சம்பாதித்த பணத்தில் நான் ஒன்றரைக் கோடியில் கார் வாங்கி இருந்தால் எதுவும் சொல்லி இருக்க மாட்டார்கள். நான் வெளிப்படையாக உதவிகள் செய்வதால்தான் இப்படிப் பேசுகிறார்கள். எனக்குப் பின்னால் வெளிநாடு இருக்கிறது என்று சொல்வதை என்னாலே நம்பமுடியவில்லை. நான் கொடுக்கும் வாகனங்களுக்கு நெம்பரை மறைத்துக் கொடுக்க காரணம், அந்த வாகனங்களை மறுநாள் தான் அவர்கள் வண்டியை தங்களது பெயருக்கு மாற்றுவார்கள்.
வெளிநாட்டு கைகூலி என்றால்?: நான் ஷூட்டிங் எல்லாம் நடத்தவில்லை. அப்படி என்றால் நான் யூடியூப் தளத்தில் போட்டு காசு சம்பாதிக்கலாம். ஆனால் என்னிடத்தில் இன்ஸ்டாகிராம் தான் உள்ளது. எனவே நான் இன்ஸ்டாகிராமில் தான் போடுகிறேன். இப்படி இருக்கும்போது, நான் நினைத்தால் யூடியூபிலும் போட்டு பணம் சம்பாதிக்க முடியும். சர்வதேச கைக்கூலி என்றால் கூட எனக்கு என்னவென்று தெரியாது" என்று பேசியுள்ளார். இவரது இந்த பேட்டியும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











