»   »  அரசியலுக்கு வருவேனா?: குஷ்பு

அரசியலுக்கு வருவேனா?: குஷ்பு

Subscribe to Oneindia Tamil

விருதை எதிர்பார்த்து பெரியார் படத்தில் நடிக்கவில்லை. நான் விருது கிடைக்கும் என எதிர்பார்த்தது சின்னத்தம்பி படத்துக்கு மட்டும்தான் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

பெரிய திரையில் கலக்கிய குஷ்பு இப்போது சின்னத் திரையிலும் கலக்கி வருகிறார். சன் டிவியில் நடிக்க ஆரம்பித்த குஷ்பு பின்னர் ஜெயா டிவிக்குத் தாவினார். அங்கு அவர் நடித்த கல்கி தொடர் 6 மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது.

அதன் பின்னர் குஷ்பு எதிலும் நடிக்கவில்லை. இந்த நிலையில், கலைஞர் டிவிக்காக தயாரிக்கப்படும் நம்ம குடும்பம் மெகா தொடரில் குஷ்பு நடிக்கிறார். இந்தத் தொடரை சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார். கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இத்தொடரின் ஷூட்டிங் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கைலாய நாதர் கோவிலில் நடந்தது. இதில் கலந்து கொண்டு குஷ்பு நடித்தார்.

பின்னர் ஓய்வு நேரத்தில் செய்தியாரிடம் பேசுகையில், பெரியார் படத்தில் எனக்கு விருது கிடைக்குமா என்று எனக்குத் தெரியாது. விருதை எதிர்பார்த்து அப்படத்தில் நான் நடிக்கவில்லை.

விருது கிடைக்கும் என்று நான் அதிகம் எதிர்பார்த்தது சின்னத்தம்பி படத்தைத்தான். ஆனால் விருது கிடைக்கவில்லை. மக்கள் ஆதரவும், வரவேற்பும் நிறையவே கிடைத்தது. அந்தப் படத்துக்கு விருது கிடைக்காதது இன்னும் கூட எனக்கு வருத்தமாக உள்ளது.

சினிமாவில் நடிப்பதற்கும், டிவி தொடர்களில் நடிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நான் ஒரு நேரத்தில் ஒரு தொடரில்தான் நடிப்பேன்.

எனது கணவர் சுந்தர்.சி. இயக்குநராக வெற்றி பெற்றார். இப்போது நடிகராகவும் வெற்றி பெற்றுள்ளார். இது சந்தோஷமாக இருக்கிறது. அவரது நடிப்பை மக்கள் வரவேற்றுள்ளனர், ரசிக்கிறார்கள். வீராப்பு படத்திலும் அவர் பிரமாதமாக நடித்துள்ளார். அந்தக் கதையும் நன்றாக உள்ளது. அப்படத்தையும் ரசிகர்கள் விரும்புவார்கள் என்றார் குஷ்பு.

சரி, அரசியலுக்கு வருவீங்களா என்ற கேள்விக்கு குஷ்பு கூறுகையில், அந்த எண்ணமே எனக்கு இல்லை. முன்பு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நான் சந்தித்தேன். அது அப்போதைக்கு நடந்த நிகழ்வு. அதில் எந்தத் தவறும் இல்லை.

எனக்கும், அரசியலுக்கும் ஒத்து வராது, நமக்கு சரிப்பட்டு வராது. நடிகர் விஜயகாந்த்துக்கும் எனக்கும் சினிமா அளவில்தான் தொடர்பு உள்ளது. அவர் சங்கத் தலைவராக இருந்தபோது நான் செயற்குழு உறுப்பினராக இருந்தேன்.

ஒரு நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக எனக்கு அவரை நன்கு தெரியும். ஆனால் அரசியல்வாதியாக எனக்கு விஜயகாந்த்தைத் தெரியாது. அந்த முகம் எனக்குத் தெரியாது. எனவே விஜயகாந்த் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது.

என்னைப் பொருத்தவரை தேர்தல் வந்தால் ஓட்டுப் போடுவேன். ஆனால் எந்த அரசியல் கட்சிக்கும் நான் ஆதரவு தர மாட்டேன் என்றார் குஷ்பு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil