For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  காதல் என்பது மனசுக்குள் பூக்கும் பூ... : இயக்குநர் சீனு ராமசாமி எக்ஸ்க்ளுசிவ் இன்டர்வியூ

  By Mayura Akilan
  |

  "பிளாஸ்டிக் கத்தியை
  காட்டி மிரட்டுகிறாள்
  அறுவை சிகிச்சையில் பிறந்த
  அன்பு மகள்"
  என்று டுவிட்டரில் ஹைகூ எழுதும் சீனு ராமசாமியின் ஒவ்வொரு நொடியும் கவிதைகளால் சூழப்பட்டிருக்கிறது. அவர் எழுதும் கவிதைகளைப் போலவே அவரது திரைப்படங்களும் கவித்துவமாக இருக்கிறது.

  ராமேஸ்வரம் கடலைப் பார்த்து
  சதா குறைத்துக்கொண்டிருக்கிறது
  ஒரு எல்லையோர நாய்
  ஒரு வேளை அதன்
  ஒளிரும் கண்களுக்குத்
  தெரிந்திருக்கக் கூடும்
  வசிப்பிடமின்றிக் கடலில் அலைந்து
  கொண்டிருக்கும் உருவமற்ற
  எம் மக்களை!

  இது இயக்குநர் சீனு ராமசாமியின் கவிதை... ‘காற்றால் நடந்தேன்' கவிதைத் தொகுப்பில் இதைப்போல பலவித உணர்வுகளை கொட்டியிருக்கிறார் சீனு ராமசாமி.

  Love is a flower in blossom, says Seenu Ramasamy

  முதல்படமான கூடல்நகர் படம் பார்த்த போதே திருப்பரங்குன்றம் மலைப்பகுதியை சீனு ராமசாமியை விட இத்தனை அழகாய் யாராலும் கொண்டு வந்திருக்க முடியாது என்று நினைத்தேன். ஏனெனில் ஒவ்வொரு பாறையாக அந்த மலையை ரசித்தவர்களால் மட்டுமே திரையில் அதை கொண்டுவர முடியும். நான் நினைத்தது போலவே சீனு ராமசாமி தினந்தோறும் திருப்பரங்குன்றம் மலையை பார்த்து ரசித்து வளர்ந்த திருநகரத்துக்காரர்.

  தென்மேற்கு பருவக்காற்று பார்த்த போதே விஜய் சேதுபதியை ரொம்பவே பிடித்து போக, கிராமத்து இளம்பெண்ணாய் வளைய வந்த வசுந்தராவின் அழகும் அப்படியே மனதில் பதிந்து போனது. புழுதிக்காட்டு காதலை படம் பிடித்து தேசிய விருதை பெற்றுத் தந்தவர் சீனு ராமசாமி.

  நீர்பறவை படத்தில் கடலின் அழகும்... அதைவிட கதையின் நாயகி சுனைனாவின் அழகும் மனதில் பதிந்து போனது. ரசிகன்டா... ராமசாமி என்று ஒரு நொடி மனதில் வந்து போனது. ஒரு கவிஞனால் மட்டுமே இப்படி ரசனையாய் படமெடுக்க முடியும் என்று எண்ணத் தோன்றியது.

  சினிமா துறைக்கு வந்து எட்டு ஆண்டுகளில் நான்கு படங்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார், ஆனாலும் அவரது கதைக்களங்கள் காற்று, கடல், நிலம் என ரசனையாக இருக்கிறது. தன்னுடைய சினிமா உலக பயணம் பற்றியும் இடம் பொருள் ஏவல் திரைப்படத்தைப்பற்றியும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

  நாம்: சினிமா இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசை எப்படி தோன்றியது?

  சீனு ராமசாமி: மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி தாய் கிராமம். வளர்ந்தது, படித்தது எல்லாமே திருநகரில்தான். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் படிப்பு முடிந்த உடன் பாலுமகேந்திராவின் திரைப்படங்களினால் ஈர்க்கப்பட்டு அவருக்கு கடிதம் எழுதி மாணவனாக இணைந்தேன். அதுவே ஒரு சுவாரஸ்யமான கதை. பாலுமகேந்திராவிற்கு நான் எழுதிய முதல் கடிதத்திற்கு பதில் வராமல் போகவே, அதையே ஜெராக்ஸ் எடுத்து மீண்டும் அனுப்பினேன். நீங்கள் பதில் அனுப்பும் வரை இதையேதான் மீண்டும் மீண்டும் அனுப்புவேன் என்று எழுதியதைப் பார்த்து எனக்கு பாலுமகேந்திரா பதில் எழுதினார். அவரிடம் சினிமாவை கற்றுக்கொண்டேன். சீமான் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து 2007ம் ஆண்டு கூடல்நகர் படத்தை முதன் முறையாக இயக்கினேன். 8 ஆண்டுகளில் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, இடம் பொருள் ஏவல் என மொத்தம் நான்கு படங்கள் இயக்கியிருக்கிறேன்.

  நாம்: உங்களின் முந்தைய இருபடங்களில் நடித்த விஜய் சேதுபதி, விஷ்ணுவை இடம் பொருள் ஏவல் படத்தில் மீண்டும் தேர்வு செய்தது ஏன்? கதை எழுதும் போதே கதை நாயகர்களை முடிவு செய்து விடுவீர்களா?

  சீனு ராமசாமி: கதை எழுதி முடித்த பின்னர்தான் கதாநாயகர்களைத் தேடுவேன். நாயகருக்காக கதை உருவாக்குவது ஒருவகை. அது கடினம். நான் தன்னியல்பாக கதையை உருவாக்குகிறேன் அதன்பின்னர் கதாபாத்திரங்களை தேடிப்போகிறேன் விஜய் சேதுபதியும், விஷ்ணுவும், என் கதைக்கான நாயகர்களாக பொருந்தி போகிறார்கள்.

  நாம்: கவர்ச்சி நாயகிகளை நம்பும் இயக்குநர்கள் மத்தியில் கதைக்கேற்ப சந்தியா, வசுந்தரா, சுனைனா, நந்திதா தாஸ், ஐஸ்வர்யா ராஜேஸ், நந்திதா என நாயகிகளை தேர்வு செய்வதன் பின்னணி என்ன?

  சீனு ராமசாமி: என்னுடைய திரைப்படங்களில் ஆண் கதாபாத்திரங்களுக்கு இணையாக பெண் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். தெற்கு பகுதியில் வசிக்கிற, திராவிட முகங்களாக பொருந்தி போகிற நாயகிகளாக நான் தேடுகிறேன். பக்கத்து வீட்டுப்பெண்கள் போல அனைவராலும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவன் நான். குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கிற படங்களைத்தான் நான் இயக்குகிறேன் எனக்கு கவர்ச்சிகரமான நடிகைகள் தேவையில்லை.

  நாம்: உங்களின் ‘காற்றால் நடந்தேன்' கவிதைத்தொகுப்பை வாசித்திருக்கிறோம்... அவ்வப்போது டுவிட்டர் வலைத்தளத்தில் உங்களின் ஹைகூவை வாசித்திருக்கிறோம். உங்களுக்குள் ஒரு கவிஞர் உருவானது எப்படி?

  சீனு ராமசாமி: பள்ளியில் படிக்கும் போதிருந்தே சுப்ரமணியபாரதியார் கவிதைகளை படித்து வளர்ந்தவன் நான். அடிப்படையில் நான் ஒரு கவிஞன், பின்னர்தான் இயக்குநராக உருவானேன். எனக்குள் ஒரு கவித்துவமான மனநிலை இருந்துகொண்டே இருக்கும். நான் ஒவ்வொரு நொடியும் கவிதைகளுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அதை அவ்வப்போது பதிவு செய்கிறேன்.

  நாம்: கவிதைகள் எழுதும் சீனு ராமசாமி உங்களின் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதலாமே?

  சீனு ராமசாமி: திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவது பனியில் சிற்பம் செதுக்குவதைப்போல கடினமானது. அதற்கு இசைஞானம் அவசியம். கவிதை எழுதுவது வேறு, ஆனால் பாடல்கள் எழுதுவது சுமையான விசயம். என்னைவிட பாடல்கள் எழுதுபவர்கள் இருக்கையில் எனக்கும் எழுதத்தெரியும் என்பதற்காக எழுதக்கூடாது.

  நாம்: உங்களின் முந்தைய படமான நீர்பறவையைப் போல இடம் பொருள் ஏவல் படத்திற்கு ஒருவித பரபரப்பு இல்லையே ஏன்?

  சீனு ராமசாமி: நீர்பறவை படம் மீனவர்களின் வாழ்வியலை மையப்படுத்தியது. அது உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படம். அரசியல் பின்னணி இருந்த படம் என்பதால் கூடுதல் கவனம் பெற்றது இடம் பொருள் ஏவல் தென்றலைப் போல தாலாட்டும்.

  நாம்: இடம் பொருள் ஏவல் திரைப்படம் எப்படி?

  சீனு ராமசாமி: என்னை நம்பி வரும் ரசிகர்களை சோர்வடைய வைக்காது. உன்னதமான விசயங்களை உணரவைக்கும். இந்தப்படத்தில் 5 முக்கிய கதாபாத்திரங்களை சொல்லியிருக்கிறேன். விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஸ் ஆகியோருக்கு முக்கிய பங்குண்டு. மலை கிராமத்துப் பெண் வெண்மணியாவே நந்திதாவைப் பார்க்கலாம். பட்டிமன்றப் பேச்சாளர் கலைச்செல்வி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா பேசுற ஒவ்வொரு வசனமும் பெண்களைக் கேவலமா பார்க்கிற ஆண்கள் மனசை அசைக்கும். விஜய் சேதுபதியை வளர்ப்பு மகனாகப் பார்க்கும் தாயின் தவிப்பில் வடிவுக்கரசி நடிச்சிருக்கார். முதல்மரியாதை படத்திற்குப் பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்று வடிவுக்கரசியே சொல்லியிருக்கிறார். பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பட்டிமன்ற நடுவராகவே வர்றார். அழகம்பெருமாள், இளவரசு, தீப்பெட்டி கணேசன், பால சரவணன்னு பெரிய குழுவே நடிச்சிருக்காங்க.

  நாம்: உங்களின் படங்களில் அம்மா கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறீர்களே?

  சீனு ராமசாமி: அம்மாதான் நம் ஒவ்வொருவருக்கும் அடிப்படை. ஆனால் அம்மாவை யாரும் கவனிப்பதில்லை. நம்மை விட்டு போனபின்னர்தான் நாம் ஒவ்வொருவரும் அம்மாவை கவனிக்க ஆரம்பிக்கிறோம். என்னுடைய படங்களில் அம்மாவைப் பற்றிய பாத்திரப்படைப்பு சற்றே அதிகமாக இருப்பது உண்மைதான். நம்முடைய நன்றி உணர்வை இப்படித்தானே வெளிப்படுத்த முடியும்.

  நாம்: யுவன் சங்கர் ராஜாவை பற்றி?

  ஒரு இசையமைப்பாளராக எனக்கு அறிமுகமாகி ஒரு சகோதரனாக மாறியவர் யுவன் சங்கர் ராஜா. அதிகம் பேசமாட்டார் அமைதியானவர். 100 படங்களுக்கு இசையமைத்திருக்கிறோம் என்ற கர்வம் துளிகூட கிடையாது. மனதை லேசாக்கும் பின்னணி இசையைத் தந்திருக்கிறார்.

  நாம்: வைரமுத்துவை நீங்கள் தேர்வு செய்வது ஏன்?

  கவிப்பேரரசு வைரமுத்து தென்மாவட்டத்துக்காரர். தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் இருந்தே ஒருவித அழுத்தமான பாடல்களை என்னுடைய படங்களில் பதிவு செய்து வருகிறார். இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர் ஆகியோருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட எளியவனான எனக்கு தருகிறார். அவருடன் பணிபுரிவது நம்ம ஊர் விவசாயியுடன் பணிபுரிவதைப்போல ஒரு ஆத்ம திருப்தியைத் தருகிறது.

  நாம்: உங்களின் படங்களில் காதல் டூயட், வெளிநாடுகளில் பாடல்காட்சிகள் எதுவும் இடம்பெறுவதில்லையே?

  சீனு ராமசாமி: காதல் என்பது இரண்டு மனசுக்குள் நடக்கிற விசயம். இதற்கு வெளியில் எதற்கு குத்தாட்டம் போடவேண்டும்? வெளிநாட்டில் போய் குதியாட்டம் போடவேண்டும்?

  நாம்: உங்களின் ஆதர்ஷ இயக்குநர்களைப் பற்றி சொல்லுங்களேன்?

  சீனு ராமசாமி: பாலுமகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா, பாலச்சந்தர் என தமிழ் சினிமாவில் என்னுடைய ஆதர்ஷ இயக்குநர்கள் இருக்கிறார்கள். இன்றைக்கு பலரும் சத்யஜித்ரே வழித்தோன்றல்கள்தான். பரதன், அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குநர்களும் மனித உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

  நாம்: எட்டு ஆண்டுகளில் நான்கு படங்களை மட்டுமே இயக்க முடிந்திருக்கிறது என்று எப்போதாவது நினைத்தது உண்டா?

  சீனு ராமசாமி: நிதர்சனமான உண்மையை சொல்லவேண்டுமானால் கலைப்படங்களுக்கான காலம் இதுவல்ல. 80களைப்போல இப்போது வாய்ப்புகள் இல்லை. திரைப்படங்களுக்கான இப்போதைய வியாபார சூழல் வேறு தயாரிப்பாளரை தேடி பிடித்து படத்தை இயக்குவதற்குள் இந்த கால இடைவெளி ஏற்படுவது இயல்புதான். என்னைப் பொருத்தவரை படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல நல்ல படங்களைக் கொடுத்தோம் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது.

  English summary
  Director Seenu Ramasamy speaks like a poet. He is surrounded by his poems. An interatction with him.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X