உடல் மெலிந்து அடையாளம் தெரியாமல் மாறிய பூபதி.. கடைசி வரை நிறைவேறாத ஆசை.. கண்கலங்கிய நண்பன்!
சென்னை: நடிகை மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 60. நகைச்சுவை, குணச்சித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மறைந்த நடிகை மனோரமா. இவர், எஸ்.எம்.ராமநாதன் என்பவரை காதலித்து 1964 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, தனது ஒரே மகன் பூபதியை வளர்த்து வந்தார். பூபதி விசு இயக்கிய 'குடும்பம் ஒரு கதம்பம்' படத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, சில படங்களில் நடித்தார். ஆனால், அவரால் பெரிதாக பிரகாசிக்க முடியாமல் போனது.
மனோரமா இறந்த பிறகு சென்னை தியாகராய நகரில் வசித்து வந்த பூபதிக்கு நேற்று திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் நேற்று இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், பூபதியின் நெருங்கிய நண்பரும், மனோரமாக வாழ்க்கை வரலாற்று நாவல் ஆசிரியருமான பாஸ்கர தாஸ், Wow Tamizhaa யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மனோரமாவின் மகன்: அதில், மனோரமாவின் மகன் பூபதிக்கு சிறுவயதிலிருந்தே பிடிவாத குணம் அதிகமாக இருந்தது எந்த அளவிற்கு பிடிவாத குணம் இருந்ததோ, அதைவிட அதிகமாக அவருக்கு அம்மாவின் மீது பாசம் இருந்தது. அப்பா இல்லாமல் அம்மா கஷ்டப்பட்டு வளர்த்ததால் அம்மா மீது அதிகமான பாசத்தை வைத்திருந்தார் பூபதி. ஆனால், எந்த ஒரு இடத்திலும் தான் மிகப்பெரிய நடிகை மனோரமாவின் மகன் என்கிற தலைக்கனம் இருந்ததே இல்லை, அனைவருடனும் சகஜமாக பழகக் கூடியவராகவே இருந்தார் பூபதி. உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து, ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார் பூபதி. ஆனால், பட வாய்ப்புகள் அவருக்கு சரியாக வராததால் மனோரமாவே தன்னுடைய சொந்த தயாரிப்பில் 'தூரத்து சொந்தம்' என்ற திரைப்படத்தை எடுத்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை.
மதுவிற்கு அடிமையானார்: பூபதி மருத்துவராக வேண்டும் என விரும்பினார் அதுவும் நடக்காமல் போய்விட்டது. சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இப்படி அனைத்தும் பொய்த்து போனதால் மன வருத்தத்தில் இருந்த பூபதி மதுவுக்கு அடிமையாகி விட்டார். எப்போதுமே மதுவுடன் தான் இருப்பார். இதனால், உடல் மெலிந்து அடையாளம் தெரியாத அளவிற்கு அவர் மாறிவிட்டார். இரவுக்கு மேல் அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாது.
காதல் திருமணம்: பூபதி கல்லூரியில் படிக்கும் போதே ஒரு பெண்ணை காதலித்தார். அந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பிடிவாதமாக இருந்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமண வாழ்க்கை பாதிலேயே முடிந்து இருவரும் பிரிந்துவிட்டனர். தன்னைப்போல தனது மகனின் வாழ்க்கையும் இப்படி ஆகிவிட்டமே என நினைத்து மனோரமா மனவேதனையில் இருந்தார். அதன் பின், பூபதிக்கு தனலட்சுமி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். பூபதி, தனலட்சுமி தம்பதிகளுக்கு ராஜராஜன் என்கிற மகனும், அபிராமி, மீனாட்சி என்கிற மகளும் உள்ளனர். இதில், ராஜராஜன்,அபிராமி இருவருமே மருத்துவர்கள்.
நிறைவேறாத ஆசை: பூபதிக்கு சரித்திர கதைகளில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அதுபோன் கதைகளை தேடித்தேடி படிப்பார். தனது அம்மாவை வைத்து வேலுநாச்சியார் என்ற சரித்திர படத்தை எடுக்க வேண்டும் என்பது அவருடைய ஆசையாகவே இருந்தது. ஆனால், அந்த ஆசை கடைசி வரை நிறைவேற்றாமலே போய்விட்டது என பூபதி நெருங்கிய நண்பரான பாஸ்கர் தாஸ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











