For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சந்திப்போமா?

  By Staff
  |

  தமிழ் சினிமா உலகில், ஏதாவது ஒரு கிசு கிசு என்றால் எல்லாப் பத்திரிக்கைகளுமே ஒட்டு மொத்தமாக கண், காது மூக்கு குத்திஒரு உருவம் கொடுத்து விடுவது என்பது வாடிக்கையான விஷயம். அண்மையில் கோடம்பாக்கம் வட்டாரத்தை கலக்கிய செய்தி என்னதெரியுமா? பிரபுதேவா, மீனா ரகசியத் திருமணம் நடக்கும் என்றும், நடந்து விட்டது என்றும் ஆளாளுக்கு கூறி கொண்டிருந்தார்கள்.

  கிசுகிசுக்களை, நம்பவும் முடியாது நம்பாமலும் இருக்கமுடியாது. சில சமயம் கிசுகிசுக்கள் உண்மையாகி விடுவதும் உண்டு.பொய்யாவதும் உண்டு. நமக்கு ஏன் வம்பு என்று சம்பந்தப்பட்டவரிடமே கேட்டு விடலாம் என்று முடிவு செய்தோம். நடிகை மீனா மீதுசமீபகாலமாக கோடம்பாக்கத்தில் இருந்த கிசு கிசுக்களுக்கு அவரிடமே பதில் கேட்டோம்.

  பாளையத்து அம்மன் படப்பிடிப்பில் இருந்தார் மீனா. மதிய நேரம் சந்தித்துப் பேசினோம். கோபப்படுவாரோ என்று யோசித்துமுதலிலேயே கோபப்படாதீங்க என்று ஆரம்பித்து, கிசு கிசுக்களைத்தான் கேட்கப் போகிறோம் என்றே ஆரம்பித்தோம். கிசுகிசு வா என்று முகத்தைச் சுழித்தவர் என்னைப்பற்றி வந்துள்ள கிசுகிசு பற்றி என்னிடமே கேட்பதும் நாகரிகமானதுதான் என்றுயதார்தத்தை உணர்ந்து பேச ஆரம்பித்தார்.

  முதல் கேள்வியாக..பிரபுதேவாவுடன் ரகசியத் திருமணம் என்று பேசிக் கொள்கிறார்களே?

  எனக்கு பெற்றோர்கள் முக்கியம். அவர்களது விருப்பம் இல்லாமல் எந்த ஒரு முடிவும் எடுக்க மாட்டேன். இது என்னைப்பற்றிகிளப்பி விடப்பட்ட திட்டமிட்ட வதந்தி. விஷமத்தனம். என்னடா மீனா அமைதியா இருக்காளே அவளை வம்புக்கு இழுப்போம்.அவள் பெயரைக் கெடுப்போம் என்று இப்படியெல்லாம் செய்கிறார்கள்.

  நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் நடிக்கும் பொழுதும் இப்படித்தான் மீனா அளவுக்கு மீறி கிளாமராக பண்ணிட்டா ன்னு செய்தியைபரப்பினாங்க. அந்த படத்தோட கேரக்டருக்கு அந்த கிளாமர் தேவைப்பட்டதால் பண்ணினேன். பாவாடை தாவணி போடுகிறவளாகஎத்தனை படத்தில் நடிப்பது?

  மார்டன் டிரஸ், ஜீன்ஸ் போட்டா கிளாமர்னு சொல்லுவாங்க. பிறகு, பிரபுதேவாவோடு டபுள்ஸ் படம் பண்ணினேன் இப்ப காதல்கல்யாணம் என்று ஆரம்பித்து இருக்கிறார்கள். மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப்போட முடியுமா?போட்டாத்தான் நிற்குமா? ரசிகர்களுக்கு உண்மை எது என்பது நன்றாகவே தெரியும். இது போன்ற வதந்திகள் என்னை நிச்சயம்பாதிக்காது.

  என்னோடு பணிபுரிந்த டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்களுக்கும் என்னைப் பற்றி நன்றாக தெரியும். இது போன்றசெய்திகளைப் படிக்கும் பொழுது கோபம் தான் வருகிறது. சரி நமக்கு நிறைய வேலை இருக்கிறது என்று பல விஷயங்களை காதில்போட்டுக் கொள்வதேயில்லை.

  அப்போ எப்போ தான் கல்யாணம்..?

  ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் என்பது அவசியமானது. ஒரு பெண் தாய்மை அடையும் பொழுது தான் பெண்மை நிறைவடைகிறதுஎன்பதையும் நான் நன்கு அறிந்தவள். இப்பொழுது எனக்கு திருமண ஆசை வரவில்லை. இன்னும் வயதும் ஆகவில்லை. என்னுடன்கல்லூரியில் படித்த தோழிகள் பட்டப்படிப்பில் இப்பொழுது தான் கடைசிவருடம் படித்து வருகிறார்கள்.

  யாருக்குமே இன்னும் திருமணம் ஆகவில்லை. சினிமாவில் நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. கல்யாணத்துக்கு இப்ப ஒண்ணும்அவசரமில்லை. நான் குழந்தையில் இருந்து சினிமாவில் நடித்து வருவதால், எனக்கு வயதாகி விட்டதாக பலரும் நினைக்கிறார்கள்.என் திருமணம் என்று ஒன்று நடந்தால் அது ஊர் உலகமறிய திட்டமிட்டுத்தான் நடக்குமே தவிர இப்படி புரளியையோ, இல்லைவதந்தியையோ கிளப்பிவிட்டு அதை உண்மையாக்க முடியாது.

  ஓ.கே மீனா. சினிமா வாய்ப்புக்காக நீங்கள் பிற வழிகளில்முயற்சிப்பதாக பேச்சு அடிபடுகிறதே உண்மைதானா?

  இது தவறானது. நடிகைகள் என்றால் வாய்ப்புக்காக பிற வழிகளில் முயற்சிப்பார்கள் என்பது எல்லோருக்கும் பொருந்தாது. அப்படித்தவறான வழியில்தான் வாய்ப்புப் பெற வேண்டும் என்றால், இந்த சினிமா உலகமே வேண்டாம்னு தலை மூழ்கிட்டு, குடும்பவாழ்க்கைக்கு போய்விடுவேன்.

  எல்லாத் துறைகளிலுமே இரு வகையானவர்களைப் பார்க்கமுடிகிறது. ஒரு சிலரது ஒழுங்கீனத்தால் மற்றவர்களும்பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் உண்மை. ஒழுக்கத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் பெயர் பெற்ற காவல்துறை,ராணுவத்திலேயே சில கருப்பு ஆடுகள் இருப்பதை செய்தியாக பார்க்க முடிகிறது. என்னைப் பொறுத்தவரை, அப்படி வாய்ப்புகள் பெறும்நிலை எனக்கு ஒரு போதும் வராது.

  பிற மொழி நடிகைகளின் வரவால் நீங்கள் நிறைய பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்களே?

  நான் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? பாதிப்பு என்கிற கேள்வி எங்கே வந்தது? நானும் ஒரு காலத்தில் புதியவளாக அறிமுகமானநடிகைதான். புதியவர்களின் வரவால் எனக்கு ஒன்றும் பாதிப்பில்லை. புதியவர்களின் பாதை வேறு என் பாதை வேறு. புதிய நடிகைகளின்வரவு இப்பொழுதுள்ள டிரன்ட்க்குத் தேவை. வரவேற்கப்படவும் செய்கிறார்கள்.

  ஆனால் ஒன்று புதிய நடிகைகள் மாதிரி என்னால் கீழே இறங்கி வரவும் முடியாது. நானும் சும்மா வீட்டில் உட்கார்ந்து கொண்டுஇல்லை. தினம் தோறும் ரவுண்ட் தி க்ளாக் படப்பிடிப்புகளில் தான் இருக்கிறேன். எப்பொழுதாவது ஒரு சில மலையாளப் படங்ளில்நடிக்கிறேன். தெலுங்கிலும் நடித்துக் கொண்டு வருகிறேன். பாதிப்பெல்லாம் ஏதும் இல்லை. நான் எப்பொழுதும் பிஸி தான்.

  தொடர்ந்து மூன்று படங்களில் சூப்பர் ஸ்டாருடன் நாயகி. சூப்பர் நடிகர் கமல்ஹாசன், உள்பட அனைத்துமுன்னனி ஹீரோக்களின் நாயகியாகநடித்து நம்பர் ஒன் இடத்திலிருந்த மீனாவின் இன்றைய நிலை என்ன?

  எனக்கு இந்த நம்பர் ஒன் என்பதிலெல்லாம் நம்பிக்கையில்லை. ரஜினி சாருடன், குழந்தை நட்சத்திரமாக நடித்தபொழுது, இப்படிஅவருடனேயே கதாநாயகியாக நடிப்பேன் என்று நினைத்தது கூட கிடையாது. அதே மாதிரிதான் கமல் சாருடனும், எனக்குஇந்தளவுக்கு வளர்ச்சியைக் கொடுத்து உற்சாகப்படுத்தியது பத்திரிக்கைக்காரர்கள் தான். எனக்கு நான் நடிக்கின்ற கேரக்டர்கள் தான்முக்கியம்.

  நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத்தர வேண்டும். படம் வெற்றிப்படமாக வேண்டும். இந்த ஆண்டு வெளியான வானத்தைப்போலபடத்தில் நான் நடித்தேன். படம் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. என்னுடைய சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. இது போதும்எனக்கு. சினிமாவில் யாருக்கும் மகுடம் நிரந்தரமில்லை என்பதை நான் நன்கு அறிவேன்.

  இன்று நம்பர் ஒன்னாக இருப்பவர்கள் நாளையும் நம்பர் ஒன்னாக இருக்கலாம். நாளை மறுநாள் வேறு ஒருவர் நம்பர் ஒன்னாகலாம்.இதை நான் நன்கு அறிவேன். அதனால் யார் மீதும் பொறாமைப் படுவதில்லை. என்னைப் பொறுத்தவரை என்னோடகதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்க வேண்டும். அவ்வளவுதான்.

  நல்லது மீனா வாழ்த்துக்கள் என்று சொல்லி விடைபெற்றோம் அந்த சிரிப்பழகியிடமிருந்து.

  Read more about: acting actress cinema interview meena
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X