அரவிந்த் சாமி இப்படிப்பட்ட மனுசனா..? காளியம்மாள் சொல்வதைப் பார்த்தால்.. இதெல்லாம் நடந்திருக்கா?
சென்னை: தமிழ் சினிமாவில் அரவிந்த் சாமிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அவர் அறிமுகம் ஆன காலகட்டத்தில் இருந்து இப்போது வரை அவர் தனது படங்கள் மூலம் ரசிகர்களுக்கு பெரும் திருப்தியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான மெய்யழகன் படம் காலத்திற்கும் கொண்டாடப்படும் படமாக உள்ளது. இந்நிலையில் அவர் விஜய் தொலைக்காட்சியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது, போட்டியாளராக களமிறங்கிய காளியம்மாளிடம் ஆஃப் த கேமராவில் அவர் பேசிய விஷயங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
சமீபத்தில் தி டிபேட் யூடியூப் சேனலுக்கு காளியம்மாள் அளித்த பேட்டியில் இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது அவர் பேசுகையில், " நான் முதலில் அந்த நிகழ்ச்சிக்கான ஆடிசனுக்கு போகும்போது எனக்கு போட்டியில் கலந்து கொள்ள வேண்டும், பணம் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. மீனவர்களின் பிரச்னைகளை பேச ஒரு ஊடகம் தேவை என்ற மனநிலையில் தான் சென்றேன். ஆனால் அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் தான் என்னை போட்டியில் கலந்து கொள்ளச் சொன்னார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கேள்விகளுக்கு நடுவே, மீனவ சமூக மக்கள் படுகிற கஷ்டங்கள் குறித்து நான் அரவிந்த் சாமி சாருடன் பேசுவேன். சில நேரங்களில் ஆஃப் த கேமராவிலும் கூட அவரிடம் பேசி இருக்கிறேன். அவரும் நான் பேசியதை முழுவதுமாக கேட்டுள்ளார்.

அரவிந்த் சாமி கோபம்: ஒருமுறை ஒரு ஷாட் முடிந்து இன்னொரு ஷாட்டுக்காக எல்லாரும் தயார் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது எனது கணவரிடம் அரவிந்த் சாமி சார் பேசிக் கொண்டிருந்தார். அதாவது மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லும்போது அவர்கள் என்ன மாதிரியான இன்னல்களை எதிர் கொள்கிறார்கள் என்பது குறித்து மிகவும் அதிர்ச்சியுடன் கேட்டுத் தெரிந்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு உதவியாளர் ஷாட் ரெடி என்று கூற, உடனே கோபப்பட்ட அரவிந்த் சாமி சார், 10 நிமிசம் லேட்டா ஷாட் எடுத்தா ஒன்னும் குறைந்து போகாது. மக்கள் உயிர் போகிற விசயம் குறித்து பேசிக் கொண்டு இருக்கிறேன் என்று கூறினார்.

மிகவும் நல்லவர்: அதேபோல், நான் ரூபாய் 25 லட்சம் வென்ற பின்னர், மேடைக்கு கீழே வந்து, இந்த 25 லட்சத்தில் 8 லட்சம் ரூபாய் வரிகளாக பிடித்துக் கொள்வார்கள். மீதிப் பணத்தை வைத்து எப்படி வீடு கட்டுவீர்கள் என்று கேட்டார். நானோ, 8 லட்சம் வரிகள் போய்விடும் என்று சொன்னதும் அதிர்ச்சி ஆகிவிட்டேன். காரணம் எனக்கு அந்த விவரம் தெரியாததுதான். அதன் பின்னர் அரவிந்த் சாமி சாரிடம் அவரது உதவியை மறுத்துவிட்டேன். ஆனால் அவர் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். ஆனால் அவருக்கு எங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பேட்டி தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பலர் அரவிந்த் சாமியின் இந்த அணுகுமுறை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











