twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் பிரசாந்த்... - தட்ஸ்தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்!

    By Shankar
    |

    -எஸ் ஷங்கர்

    பிரஷாந்த்- தமிழ் சினிமாவின் அழகான, அத்தனை திறமைகளும் உள்ளடக்கிய, முக்கியமாக நடிக்கத் தெரிந்த நடிகர்.

    மீசை அரும்பத் தொடங்கிய வயதில் வைகாசி பொறந்தாச்சு படத்தில் அறிமுகமானார். இன்றைய வாரிசு நடிகர்களுக்கு முன்னோடி, அஜீத், விஜய், சூர்யா போன்றவர்களுக்கும் சீனியர் என்றால் பிரஷாந்த்தான்.

    எடுத்த எடுப்பிலேயே உச்சத்துக்குப் போனவர் பிரசாந்த். முதல் படம் வெற்றி, அடுத்த படம் பாலு மகேந்திரா இயக்கத்தில் தேசிய விருதுவரை போனது. அதற்கடுத்து வந்த செம்பருத்தியோ, அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படம் என்ற பெருமையைப் பெற்றது.

    அதன் பிறகு நிறைய படங்களை அவர் செய்தாலும், மீண்டும் அவரை திரும்பிப் பார்க்க வைத்தது மணிரத்னம் இயக்கிய திருடா திருடா. அதன் பிறகு வந்த படங்களில் ஆணழகன், அவரை நகைச்சுவையிலும் மிளிர வைத்தது.

    ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில் பிரஷாந்த் இரட்டை வேடங்கள் செய்தார். உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஜோடி. இரட்டை வேடங்களில் இப்படியும் சாத்தியமா என வியக்க வைத்திருந்தார் ஷங்கர். பிரஷாந்த் கடுமையாக உழைத்திருந்தார்.

    தொடர்ந்து கண்ணெதிரே தோன்றினால், ஜோடி என அடுத்தடுத்த வெற்றிப்படங்கள். பிரஷாந்த் நடித்ததில் இன்றும் ரசிகர்களால் மறக்கமுடியாத படம் என்றால் அது வின்னர். வடிவேலுவும் பிரஷாந்தும் மிகக் கச்சிதமான 'ஜோடியாக'த் திகழ்ந்தனர் இந்தப் படத்தில்.

    பிரஷாந்தின் பெரிய பலம் அவரது தந்தை தியாகராஜன். தான் முன்னணி ஹீரோவாக இருந்த போதே மகனுக்காக நடிப்பை விட்டுக் கொடுத்தவர் தியாகராஜன். பொன்னர் சங்கரில் தன்னை மிகத் திறமையான தொழில்நுட்பக் கலைஞராக, இயக்குநராக வெளிக்காட்டினார்.

    இப்போது தியாகராஜன் இயக்கத்தில் பிரஷாந்த் நடித்து வந்துள்ள படம் மம்பட்டியான். பழைய மலையூர் மம்பட்டியானின் ரீமேக். ரசிகர்கள் மட்டுமல்ல, விமர்சகர்களும் படத்தையும் பிரஷாந்தின் நடிப்பையும் பாராட்டியுள்ளனர்.

    தட்ஸ் தமிழின் புத்தாண்டு ஸ்பெஷலுக்காக பிரஷாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தோம். சினிமா தாண்டி, தொழில்நுட்பத் துறையில் நடக்கும் மாறுதல்களை விரல்நுனியில் தெரிந்து வைத்திருக்கிறார் மனிதர். அவரது அலுவலகமே குட்டி கம்ப்யூட்டர் உலகம் மாதிரிதான் இருக்கிறது.

    ஒரு வழக்கமான பேட்டியாக இல்லாமல், நம்முடன் நெடுநாளைய நண்பரைப் போல இயல்பாகப் பேச ஆரம்பித்தார் பிரஷாந்த்...

    மம்பட்டியான் அனுபவம் எப்படி... படத்தை எப்படி வரவேற்கிறார்கள் ரசிகர்கள்?

    மம்பட்டியான் எனக்கு ஒரு புதிய அனுபவம். இதுவரை அந்த மாதிரி ஒரு கிராமத்து அட்வென்ச்சர் நான் பண்ணதில்லை. அப்பா ஏற்கெனவே பெரிய அளவில் தன்னை நிரூபித்த படம் அது. அந்தப் படத்தில் நான் நடிப்பதே ஒரு த்ரில்லாக இருந்தது. அந்த வெற்றியை, தரத்தை காப்பாற்ற வேண்டிய நெருக்கடி எங்களுக்கு இருந்தது. காப்பாற்றிவிட்டதாக நம்புகிறோம். ரசிகர்களின் வரவேற்பை வைத்து இதைச் சொல்கிறேன்.

    படத்தில் இடம்பெற்றுள்ள பல லொகேஷன்கள் பிரமிப்பாக இருந்தன... எங்கே படமாக்கினீர்கள்?

    ஒரு இடத்தில் என்று சொல்ல முடியாது. தமிழகம், ஆந்திரா, ஒரிசா, கேரளா என பல மாநிலங்களில் இந்தக் காட்சிகளைப் படமாக்கினாலும், அது தெரியாத அளவுக்கு அப்பா காட்சிப்படுத்தியிருந்தார். ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் அத்தனை கச்சிதமாக தன் வேலையை செய்து கொடுத்தார்.

    இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக இருந்தன சண்டைக் காட்சிகள். இதற்கென தனி பயிற்சி பெற்றீர்களா?

    இல்லை. நான் ஆரம்பத்திலிருந்தே ஒரு ஃபைட்டர்தான். எல்லா படங்களிலுமே சண்டைக் காட்சிகளில் அதிகபட்ச ரிஸ்க் எடுத்து நடித்திருப்பவன் நான்தான். இந்தப் படத்துக்கு அதிகபட்ச நம்பகத்தன்மையுடன் சண்டைக் காட்சிகள் தேவைப்பட்டன. அதைப் புரிந்து கொண்டு நடித்தேன்.

    இப்போதுள்ள நடிகர்களுக்கெல்லாம் சீனியர் நீங்கள். உங்களுக்குப் பின்னால் வந்த சூர்யா போன்றவர்களை முன்னணி நடிகர்களாக மீடியாவும் சினிமாவும் வரிசைப்படுத்தும்போது எப்படி உணர்கிறீர்கள்?

    நீங்கள் சொல்வது உண்மைதான். இதில் என் தவறு என்று எதுவும் இல்லை. நான் நடிக்க வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால் எல்லா ஆண்டுகளிலுமே என் படங்கள் இடைவெளியின்றி வந்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் பொன்னர் சங்கருக்காக மட்டும் நான் 3 ஆண்டுகள் உழைத்தேன். வேறு படமே பண்ணவில்லை. இதோ மம்பட்டியானுக்காக ஒரு வருடம். என் படங்களுக்கான அதிகபட்ச உழைப்பை நான் தந்து கொண்டே இருக்கிறேன். எத்தனை அலைகள் வந்தாலும், என் பயணம் ஒரே சீராகத் தொடர்கிறது.

    இன்னொன்று எதற்குமே டைம் என்ற ஒரு விஷயம் இருக்கிறதல்லவா.... எனக்கான நேரம் ஒர்க் அவுட் ஆனால்தான் உரிய இடத்தைப் பெற முடியும் என்பதை நம்புகிறேன். நீங்கள் குறிப்பிடுகிற அத்தனை ஹீரோக்களுக்குமே நெருக்கடியான காலங்கள் இருந்திருக்கின்றன.

    இனி அடுத்து நான் செய்கிற படங்கள் நீங்கள் எதிர்ப்பார்க்கிற இடத்துக்கு என்னை கொண்டு வரும் என நம்புகிறேன்.

    இருபது ஆண்டுகால அனுபவத்தில், சினிமா உலக மாறுதல்களை எப்படி உணர்கிறீர்கள்?

    இரண்டு தலைமுறை கலைஞர்களுடன் வேலை செய்திருக்கிறேன். நிறைய மாற்றங்கள். ஆனால் இந்த மாற்றங்களின்போதும்கூட நான் சினிமாவில் பிஸியாகவே இருந்திருக்கிறேன்.

    அன்றைக்கு இளையராஜா சாருடன் பணியாற்றினேன், அடுத்து, ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்றவர்களுடன் பணியாற்றினேன். இப்போது தமன் போன்ற கலைஞர்களுடனும் பணியாற்றுகிறேன். சினிமாவின் ஓட்டத்தைப் புரிந்து கொண்டு என்னை புதுப்பித்துக் கொள்கிறேன்.

    சினிமாவில் இன்றைக்கு இன்னார்தான் இந்த வேலையைப் பார்க்க வேண்டும் என்ற நியதி எதுவும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. அது நல்லதா கெட்டதா என்பதை காலம்தான் முடிவு செய்யும். இதுதான் பெரிய மாற்றம். தயாரிப்பாளர் ஹீரோவாகிறார், இயக்குநர் ஹீரோவாகிறார், இசையமைப்பாளர் ஹீரோவாகிறார், ஒளிப்பதிவாளர் இயக்குநராகிறார், ஹீரோக்கள் இயக்குநர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். முன்பு இது அரிதாக நடக்கும். இப்போது ரொம்ப சகஜமாகிவிட்டது.

    இன்னொன்று இன்று எல்லாருமே தங்களுக்கென ஒரு செட்டப்போடுதான் இருக்கிறார்கள். தனக்கென ஒரு இயக்குநர், சொந்த பேனர் என தெளிவாகவே இருக்கிறார்கள்.

    மம்பட்டியானுக்குப் பிறகு...

    நிறைய கதைகள் வந்திருக்கு. இளம் இயக்குநர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். நல்ல கதைகள் கிடைத்ததும் அடுத்த அறிவிப்பை வெளியிட்டுவிட வேண்டியதுதான்.

    உங்களை வைத்துப் படம் பண்ணால் உங்கள் தந்தையின் தலையீடு இருக்கும் என்று ஒரு பேச்சிருக்கிறதே...

    அதை என்னை வைத்துப்படமாக்கிய எந்த இயக்குநராவது சொல்லியிருக்கிறாரா? ஷங்கர், மணிரத்னம், பாலு மகேந்திரா என ஜாம்பவான்கள் என்னை இயக்கியிருக்கிறார்கள். அப்பா தலையீடு இருந்திருந்தால் அது சாத்தியமா? என்னிடம் வர முடியாதவர்கள், அல்லது என்னை அணுகாமலேயே கேள்விப் பட்டதை வைத்து பேசுபவர்கள் அப்படிச் சொல்லியிருப்பார்கள்.

    நிறைய கதாநாயகிகளைப் பார்த்தவர் நீங்கள்... உலக அழகி முதல் உள்ளூர் நாயகிகள் வரை உங்களுடன் நடித்துவிட்டார்கள். ஆனால் யாருடனும் கிசுகிசு கிளம்பியதில்லை. எப்படி?

    ஆஹா.. ஏன் ஏதாவது எழுத திட்டமிட்டிருக்கிறீர்களா...? உண்மையிலேயே நான் விரும்பியதைச் செய்யும் சுதந்திரம் எனக்கு இருக்கிறது. அதே நேரம் என் தாய் தந்தை, குடும்பத்துக்கென உள்ள மரியாதையைக் காக்கும் பொறுப்பும் உள்ளது. அதுதான் காரணம்.

    சரி... இந்த நாயகிகளில் உங்களுக்கு பொருத்தமானவர், வசதியானவர் என்றால் யாரைக் குறிப்பிடுவீர்கள்?

    ஸ்வீட் கடையை வெளியிலிருந்து பார்ப்பவருக்கும், கடைக்குள்ளேயே இருந்து பார்ப்பவருக்கும் வித்தியாசமிருக்கில்லையா... ஆனாலும் குறிப்பிட்ட ஒருவரை சொல்ல வேண்டும் என்றால், அது சிம்ரன்தான். ரொம்ப பர்பெக்ட்டான நடிகை. நானும் அவரும் நடித்த படங்களில், காதல் காட்சிகள், பாடல் காட்சிகள் அத்தனையும் சிறப்பாக வந்திருக்கும். அவர் தனது தொழிலை அந்த அளவு நேசிப்பவர். அதே போல, செட்டில் நானும் அவரும் பெரிதாக பேசிக் கொள்ளமாட்டோம். அப்படியே பேசினாலும் முதல்நாள் எந்த இடத்தில் பேச்சை நிறுத்தினாரோ, அதே இடத்திலிருந்து தொடருவார். அந்த அளவு கச்சிதமான அணுகுமுறை அவருடையது.

    சொந்த வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?

    அது ஒரு பாடம்தான். வேறு என்ன சொல்வது... ஒரு ஆண் எந்த அளவு ஏமாற்றப்படுகிறான் என்பதற்கு நான் ஒரு உதாரணம். என் மூலம் ஒரு விழிப்புணர்வு வந்தது மகிழ்ச்சிதான். பலர் என்னை அழைத்து தங்கள் கஷ்டத்தைச் சொல்லி தீர்வு கேட்கிறார்கள். எனக்கு நடந்தது திருமணமே இல்லை என்பதை நீதிமன்றமே அறிவித்தது மகிழ்ச்சி தருகிறது.

    பெண் என்பதற்காக மட்டும் சலுகை காட்டாமல், இருதரப்பிலும் நியாயத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்கு என்னுடைய அனுபவமே ஒரு உதாரணம்.

    சரி... மீண்டும் தமிழ் சினிமாவின் 'எலிஜிபிள் பேச்சுலர்' ஆகிவிட்டீர்கள். கல்யாணம் எப்போது?

    வேணாங்க... இப்போதைக்கு வேணவே வேணாங்க. இன்னும் ஓரிரு வருடங்களுக்கு நல்ல சினிமாக்களைத் தருவதில் கவனம் செலுத்தப் போகிறேன். மற்றவற்றை பிறகு பார்ப்போம்.

    English summary
    Mambattiyan fame actor Prashant's exclusive interview for thatstamil's new year special.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X