»   »  ஆண்களுக்கு இனி நோ என்ட்ரி-ப்ரீத்திவர்மா

ஆண்களுக்கு இனி நோ என்ட்ரி-ப்ரீத்திவர்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

இனி எனது வாழ்க்கையில் ஆண் என்ற பேச்சுக்கே இடமில்லை. கல்யாணம் செய்து கொள்ளும் ஐடியாவும் சுத்தமாக என்னிடம் இல்லை. இப்படியே தனியாக இருக்க முடிவு செய்து விட்டேன் என்று கூறியுள்ளார் நடிகை ப்ரீத்தி வர்மா.

பதினெட்டு வயசு இளம் புயல் ப்ரீத்தி வர்மா, சமீபத்தில் வீட்டை விட்டு ஓடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்பாவும், அம்மாவும் சேர்ந்து தன்னை விபச்சாரத்தில் தள்ள முயற்சிப்பதாக கூறி மேலும் பரபரப்பைக் கூட்டினார்.

பின்னர் ஒரு வழியாக சென்னைக்குத் திரும்பி வழக்கம் போல படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் ப்ரீத்தி வர்மா நடித்துள்ள பதினெட்டு வயசு புயலே படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடந்தது.

ப்ரீத்தி வர்மா கேசட்டை வெளியிட அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் பெற்றுக் கொண்டார். இவர்கள் இருவரும் அன்புத்தோழி படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக ப்ரீத்தி வர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மனம் விட்டு உருக்கமாக பேசினார். ப்ரீத்தியின் வாயிலிருந்து உதிர்ந்த உருக்க முத்துக்களில் சில ...

ஒரு பெண் படக் கூடாத கஷ்டங்களையெல்லாம் நான் பட்டு விட்டேன். பல பிரச்சினைகளில் சிக்கி ஒரு வழியாக மீண்டுள்ளேன். முழுமையாக மீளும் வரை புதிய படங்களில் நடிப்பதாக இல்லை. அதேசமயம், மூன்றாம் பவுர்னமி, ராமுடு மஞ்சி பாலுடு ஆகிய படங்களில் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளேன். எனவே அந்தப் படங்களில் மட்டும் நடித்துக் கொடுப்பேன்.

என்னை அணுகி புதிய படங்களில் நடிக்க வைக்க யாராவது விரும்பினால் தாராளமாக வரலாம். ஆனால் என்னிடம் பேசுவற்கு முன்பு எனது வக்கீல் மற்றும் இன்ஸ்பெக்டரிடம் அவர்கள் அனுமதி பெற்று என்னை அணுகலாம்.

இப்போது நான் தனியாகத்தான் வசிக்கிறேன். இனிமேலும் அப்படியேதான் இருக்கப் போகிறேன். ஒரு பெண் சமூகத்தில் தனியாக வசிக்க முடியாதா என்ன.

என்னைப் பொருத்தவரை திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனது வாழ்க்கையில் இனி ஆண் வாடைக்கே இடமில்லை. தனியாகத்தான் இருக்கப் போகிறேன். ஒரு பெண்ணால் சமூகத்தில் தனித்து வெற்றிகரமாக வாழ முடியும் என்பதற்கு நான் சிறந்த உதாரணமாக இருக்கப் போகிறேன்.

எனக்கு துணை என்று யாரும் தேவையில்லை. கடவுள் மட்டுமே இனிமேல் எனக்கு ஒரே துணை. ஆண்களை நான் வெறுக்கவில்லை. நான் வணங்கும் சிவன் கூட ஒரு ஆண்தானே. அதனால் ஆண்கள் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை.

முன்பு விஜய் என்பவரைக் காதலித்தேன். இப்போது அந்தக் காதல் இல்லை, முறிந்து போய் விட்டது. யார் மீதும் இப்போது எனக்கு காதல் இல்லை. எந்தக் காதலரும் இல்லை.

சில படங்களில் நான் கிளாமராக நடித்து விட்டேன். இனிமேல் அப்படி நடிக்க மாட்டேன். குடும்பப் பாங்கான வேடங்களில் நடிக்கவே ஆர்வமாக உள்ளேன்.

இப்போது நடித்துள்ள பதினெட்டு வயசு புயலே படம் கிட்டத்தட்ட எனது கதையைப் போலவே இருக்கும்.

காவல்துறையினரின் தலையீடு காரணமாகவே நான் பெரும் நரகத்திலிருந்து தப்பினேன். செக்ஸ் டார்ச்சரிலிருந்து மீண்டுள்ளது நிம்மதியாக உள்ளது என்றார் ப்ரீத்தி.

பேட்டியின்போது படத்தின் நாயகன் அஜய் பிரதீப், இயக்குநர் விஜய் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil