»   »  பெரியார்-கொந்தளிக்கும் ராதாரவி!

பெரியார்-கொந்தளிக்கும் ராதாரவி!

Subscribe to Oneindia Tamil

பெரியார் படம் முரண்பாடுகளின் மொத்த உருவமாக அமைந்துள்ளது. பெரியார் பெயரை வியாபாரத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்று நடிகர் ராதாரவி கோபமாக கூறியுள்ளார்.

பெரியார் படம் குறித்து ராதாரவி தட்ஸ்தமிழ்.காமுக்காக அளித்த சிறப்புப் பேட்டியில் அப்படத்தின் குறைகள் குறித்து கோபத்துடன் குமுறினார். அவரது கோபக் கொந்தளிப்பிலிருந்து சில சிதறல்கள் ..

பெரியாரின் பெயரை வியாபாரத்திற்க்காக பயன்படுத்திக் கொண்டு படம் எடுத்துள்ளனர். திரைக்கதையே அமைக்கத் தெரியாதவர்கள் சேர்ந்து படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்பதற்கு இப்படம் சரியான உதாரணம்.

சத்யராஜ் 5 கெட்டப்களில் நடித்துள்ளார் என்று கூறுகிறார்கள். பெரியார் எப்போதும் ஒருவர்தான். வெண்தாடி வேந்தராக அறியப்பட்டாரே அவர்தான் பெரியார். அவருக்கு முன்பு இருந்தவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

திராவிட இயக்கத்திற்கு வந்த பிறகுதான் பெரியார் ஆனார். எனவே பெரியாரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் பகுத்தறிவு இயக்கத்தில் அவர் ஆற்றிய பணிகளைத்தான் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லாமல் மடத்தனமாக படத்தை எடுத்துள்ளனர்.

எனது தந்தை எம்.ஆர்.ராதாவை இப்படத்தில் புறக்கணித்துள்ளனர், அவருக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பதற்காக நான் இப்படிப் பேசுகிறேன் என்று கூறுவார்கள். 40 வருடங்களாக பெரியாருடன் இணைந்திருந்தவர் ராதா.

ராதா இல்லாமல் பெரியார் இல்லை, பெரியார் இல்லாமல் ராதா இல்லை என்று கலைஞரே தனது வாயால் சொல்லியுள்ளார். அந்தக் கலைஞர் தலைமயிலான அரசு கொடுத்துள்ள பணத்தில் எடுக்கப்பட்ட பெரியார் படத்தில் ராதாவுக்கு ஒரு சீன்தான். அதையும் வாசு விக்ரம்தான் (எம்.ஆர். ராதாவின் மகன் வாசுவின் மகன்) செய்துள்ளார். ஆனாலும், எம்.ஆர்.ராதாவுக்கான கெட்டப் இல்லாமல் ஏனோதானோவென்று எடுத்துள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுரையில் பகுத்தறிவு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டை சீர்குலைப்பதற்காக காங்கிரஸ்காரர்கள் மாநாட்டுப் பந்தலுக்குத் தீவைத்து விட்டனர். பந்தல் திகுதிகுவென எரிகிறது. பெரியார் உள்பட அனைவரும் மேடையை விட்டு இறங்கி விட்டனர்.

ஆனால் எம்.ஆர். ராதா மட்டும் மேடையை விட்டு இறங்காமல், மேடை எரிந்தால் என்ன, நாங்கள் உயிரோடுதானே இருக்கிறோம். என்ன கொள்கைக்காக இங்கு வந்தோமோ அதை நிறைவேற்றி விட்டுத்தான் மேடையை விட்டு இறங்குவேன் என்று கூறி எரியும் மேடையில் நாடகத்தை நடத்தி விட்டுத்தான் கீழே இறங்கினார் எம்.ஆர்.ராதா.

தனது வாழ்க்கை வரலாற்று நூலில் பெரியாரே கைப்பட எழுதிய தகவல் இது. இப்படிப்பட்ட தலைவரை விட்டு விட்டு படம் எடுத்தால் எப்படி?

காந்தி படத்தை ரிச்சர்ட் அட்டன்பரோ எடுத்தார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளைக்காரனிடம் அடிபட்டது முதல் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்து செத்தது வரையிலான கால கட்டத்தைத்தான் அவர் படமாக எடுத்தார். காரணம், அந்தக் கால கட்டத்தில்தான் அவர் மகாத்மா ஆனார்.

அதேபோலத்தான் பகுத்தறிவுக் கொள்கையை ஏற்ற பிறகுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கர், பெரியார் ஆனார். அதை மட்டும் எடுத்திருந்தால் சத்யராஜ் 5 கெட்டப் போட வேண்டியிருக்காது.

அதை விட்டு விட்டு பெரியார் கோவணம் கட்டியது, அதை அவிழ்த்து விட்டுப் போனது எல்லாம் யாருக்குத் தேவை?. அவையெல்லாம் ராமசாமி என்ற தனி நபர் செய்தது. அவர் பெரியார் அல்ல!

90 வயதிலும், அந்தத் தள்ளாத வயதிலும் பகுத்தறிவுப் பிரசாரம் செய்தாரே அவர்தான் பெரியார். அவரைத்தான் படத்தில் காட்டியிருக்க வேண்டும். அந்தப் பெரியார் சொல்லியத்தைதான் படத்தில் சொல்லியிருக்க வேண்டும். நடக்க முடியாமல், யூரின் டிரேயை கையில் பிடித்துக் கொண்டபடி ஒருவர் நடக்க, பெரியார் தனது உடல் சிரமத்தையும் பாராமல் மேடையில் அமர்ந்தபடி பிரசாரம் செய்வார். அதைத்தான் சொல்லியிருக்க வேண்டும்.

எம்.ஆர்.ராதா மட்டுமல்ல, நிறைய தலைவர்களுக்கு ஒரு சீன்தான். எம்.ஜி.ஆருக்கும் ஒரு சீன்தான். எம்.ஜி.ஆர் ஒரு சீனுக்குத்தான் லாயக்கு. அதை நான் மறுக்கவில்லை. ஆனால், அண்ணா, கலைஞர், எம்.ஆர். ராதா இல்லாமல் எப்படி பெரியாரைப் பற்றிப் பேச முடியும்? அவர்கள் எல்லாம் படம் முழுவதும் வந்திருக்க வேண்டாமா?

பெரியார் படத்தில் ரகசியாவின் டான்ஸ் எதற்கு?. ரகசியா ஆடும் கேபரே டான்ஸை பெரியார் பார்ப்பதாக காட்சி அமைத்துள்ளனர். ஞான ராஜசேகரனை நான் கேட்பதெல்லாம், பெரியாரைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? அவரைப் பற்றிய படத்தில் ரகசியா டான்ஸ் எதற்கு?

பெரியார் கேபரே டான்ஸ் பார்த்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன?. இப்படிப்பட்ட காட்சியை வைக்க கி.வீரமணிக்கு என்ன அவசியம் வந்தது? கீழ்த்தரமான ஆசைகளுக்கு ஆட்பட்ட சாதாரண ஆசாமிதான் பெரியார் என்று சொல்ல வருகிறாரா?

படத்தில் ஒன்றரை மணி நேரத்தை இப்படிப்பட்ட கேலிக் கூத்துக்களுக்கே செலவிட்டுள்ளனர். கடைசி அரை மணி நேரத்தில்தான் வெண்தாடி வேந்தர் பெரியார் வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் பெரியார் போதித்த கருத்துக்களை எப்படி முழுமையாக அவர்களால் சொல்ல முடியும் என்று கேட்டுள்ளார் ராதாரவி.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil