»   »  ஒரு அகதியின் காதல் கதை

ஒரு அகதியின் காதல் கதை

Posted By:
Subscribe to Oneindia Tamil

இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து தமிழகத்திற்கு அகதியாக வந்த வாலிபனின் காதல் கதையை ராமேஸ்வரம் என்ற பெயரில் நேர்த்தியாக செதுக்கி வருகிறார் புதுமுக இயக்குநர் செல்வம்.

ஜீவா, பாவனாவின் நடிப்பில் உருவாகி வரும் படம்தான் ராமேஸ்வரம். புதுமுக இயக்குநர் செல்வம் படத்தை இயக்கி வருகிறார்.

ராமேஸ்வரம் என்று பெயர் வைத்துள்ளீர்களே, புலிப் பாய்ச்சலாக எதுவும் இருக்குமா என்று கேட்டோம். அதற்கு செல்வம், இதில் அரசியல் சுத்தமாக கிடையாது. அருமையான பொழுது போக்குச் சித்திரமாக இருக்கும். அப்பழுக்கற்ற காதல் கதையாக இருக்கும்.

இலங்கைத் தமிழ் அகதிகளின் காதல் கதை இது. இலங்கை கதைப் பின்னணி என்பதால் இதில் இலங்கைத் தமிழர்களின் போராட்டங்கள் குறித்த எதுவும் படத்தில் இடம் பெறாது. காதல்தான் படத்தின் ஆணிவேர்.

டைட்டானிக் படத்தில் வரும் காதலை போல, ஆழமான காதலை இப்படத்தில் நான் காட்டியுள்ளேன். ராமேஸ்வரத்தில் கதை நடப்பது போல கதையை வடித்துள்ளேன்.

சிவானந்த ராசா என்ற கேரக்டரில் ஜீவா நடித்துள்ளார். மண்டபம் முகாமில் தங்கியிருக்கிறார் ஜீவா. அதே முகாமில் பாவனாவை சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே காதல் முகிழ்க்கிறது.

படத்தின் பாடல் காட்சிகளுக்காக நாங்கள் கம்போடியா போய் வந்தோம். ரொம்ப வித்தியாசான லொகேஷன்களில் படம் பிடித்துள்ளோம்.

மண்டபம் அகதிகள் முகாமிலேயே படப்பிடிப்பை நடத்த நினைத்தோம். ஆனால் அரசு அதிகாரிகள் அனுமதி கொடுக்கவி்ல்லை. இதையடுத்து அகதிகள் முகாம் போல பிரமாண்ட செட் போட்டு படப்பிடிப்பை நடத்தினோம் என்றார் செல்வம்.

உடன் இரு்நத ஜீவா பேசுகையில், இப்படிப்பட்ட நல்ல படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்காக பெருமைப்படுகிறேன். இந்தப் படம் உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே எனக்கு நல்ல அங்கீகாரத்தை வாங்கித் தரும் என்று நம்புகிறேன் என்றார்.

இயற்கை, ஈ படங்களில் கேமராமேனாக பணியாற்றிய ஏகாம்பரம்தான் இப்படத்துக்கும் கேமராவை முடு்கியுள்ளார்.

அகதிகளின் கதையாக இருந்தாலும் சோகம் அதிகம் இல்லாத அழகிய கதையாக இருக்கும் என நம்புவோம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil