twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஷோலேயில் ஒரு அம்ஜத்கான்.... அவன் இவனில் ஒரு ஆர்கே'!!

    By Shankar
    |

    RK Avan Ivan Movie
    திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாலாவின் அவன் இவன் வெளியாகப் போகிறது.

    இந்தப் படத்தில் விஷால் - ஆர்யா என இரண்டு ஹீரோக்கள். ஆனால் இவர்களையும் மீறிப் பேச வைத்திருக்கிற இன்னொரு ஹீரோ ஆர்கே.

    இமேஜுக்காக நடிக்காமல், சினிமாவுக்காக நடிக்கும் இன்னொரு அரிய கலைஞர் ஆர்கே. அதனால்தான் எல்லாம் அவன் செயல், அழகர் மலை என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த பின்னும், இன்னொரு படத்தில் எதிர்மறை நாயகனாகவும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

    சமீபத்தில் அவரைச் சந்தித்த போது, பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் நடித்தது, திரையுலகில் அவரது இலக்கு, நடிக்கவிருக்கும் பிற படங்கள் என பலவற்றை விரிவாகப் பேசினோம்.

    கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பட்டுக் கத்தரித்தது போல பளிச்சென்று வந்து விழுகின்றன அவரிடமிருந்து பதில்கள்... அத்தனை தன்னம்பிக்கை!

    இனி ஆர்கே பேட்டியிலிருந்து....

    பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் உங்கள் அனுபவம்?

    பாலாவிடம் நடிப்பது, ஒரு பல்கலைக் கழகத்தில் படித்துவிட்டு வருவது போன்றது. அவர் சினிமாவை செதுக்க வேண்டும் என நினைக்கிறார். அவர் என்றைக்கு விடுவாரோ அதுவரை நடிக்க வேண்டும் என்ற கமிட்மென்டோடு அவரிடம் போக வேண்டும். அவர் என்ன நினைக்கிறார் என்றால், உனக்கு என்றைக்கு நடிக்க வருகிறதோ அதுவரை விடமாட்டேன் என்பது அவர் பாலிசி. உண்மையில் சினிமாவில் சாதனைப் படைக்க விரும்பும் யாராக இருந்தாலும் பாலாவின் படத்தில் நடிக்க வேண்டும். அவரிடம் நடித்து விட்டு வருவது ஒரு கல்லூரியில் படித்து பிஎச்டி பண்ணுவதற்கு சமம்.

    அவன் இவனில் நடித்த பிறகு, சினிமாவில் நடிக்க வந்ததற்கான அர்த்தம் கிடைத்துவிட்டதாக உணர்கிறீர்களா?

    நான் ஒவ்வொரு படத்தையும் அர்த்தத்தோடுதான் செய்துகிட்டிருக்கேன். எல்லாம் அவன் செயல் படம் செய்த போது, அந்தப் படத்தின் இயக்குநர், 'இந்தப் படம் சுரேஷ் கோபி செய்தது. பெரிய வெற்றிப் படம். அதே இயக்குநர் வேறு. அந்த அளவுக்கு வரலேன்னா... வரலேன்னா..." என்று சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு போராடும் குணம் உண்டு. போராடி ஜெயிப்பது என் சுபாவம், விட்டுவிட்டுப் போகும் ரகமில்லை.

    எல்லாம் அவன் செயல், அதன் ஒரிஜினல் படத்தை விட பெரிய அளவில் பேசப்பட்டது. மலையாளப் படத்தை விட சிறப்பாக செய்திருந்தேன் என இயக்குநர் பாராட்டினார். மக்களிடமும் பேசப்பட்டது.

    எனது இரண்டாவது படம் அழகர் மலை. இந்தப் படத்தில் பெரிய ஆர்டிஸ்ட் யாருமே இல்லை. ஆனால் எனக்கு முன்னால் இருந்தவர் வடிவேலுதான். இதற்கு முன் பார்த்திபன் - வடிவேலு என்ற காம்பினேஷன் பெரிதாக பேசப்பட்டது. அடுத்து ரஜினி சாரும் வடிவேலுவும் பெரிய ட்ரெண்ட் உருவாக்கி வைத்திருந்தனர். மாம்ஸ் மாப்பிள்ளை என்று அவர்கள் காம்பினேஷன் செம ஹிட். எனவே வடிவேலுவுடன் எப்படி இந்தப் படத்தில் ட்ராவல் பண்ணுவது என்பது சவாலாக இருந்தது. ஆனால், படம் ஆரம்பித்ததும், வருங்காலத்தில் ஆர்கே - வடிவேலு காம்பினேஷன் பெரிதாகப் பேசப்படும் என்று எல்லோருமே சொல்லும் அளவுக்கு அமைந்தது. படமும் மக்களிடம் சிறப்பாக பேசப்பட்டது.

    அவன் இவனைப் பொறுத்தவரை, அதில் விஷால் - ஆர்யா என இரண்டு ஹீரோ. பாலா சார் எப்போ ஆரம்பித்து எப்போது அனுப்புவார் என்று தெரியாது. இன்னொரு பக்கம் பாலா பற்றி பலரும் பயமுறுத்தினர். நான் வெள்ளைச் சட்டையுடன் சுற்றுகிற ஆள். 'வெள்ளைச் சட்டை கசங்காம சுத்தறியா.. மாட்ன மவனே.." என்று பலரும் கிண்டலாக சொன்னார்கள். ஆனால் அதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. அவர் சொன்னபடி செய்தேன்.

    சேற்றில் புரண்டோம், மாடியிலிருந்து குதித்தேன், அவர் நடிக்க கூப்பிடும் வரை காத்திருந்தேன். படம் பார்த்த பிறகு, ஷோலேவில் ஒரு அம்ஜத்கான் என்றால், அவன் இவனில் ஒரு ஆர்கே எனும் அளவுக்கு மிரட்டலாக நடித்துள்ளீர்கள் என்று அனைவரும் பாராட்டினார்கள்.

    இந்தப் படத்தின் டப்பிங்கின்போது தமிழுக்கு நான் பேசினேன். 15 நாட்கள் ஆனது. அடுத்து தெலுங்கு டப்பிங். இதற்கும் நானே பேசினேன். ஆரம்பத்தில் 'தெலுங்கா' என்னை ஏற இறங்கப் பார்த்தார் பாலா. ஆனால் நான் அரை நாளில் பேசி முடித்துவிட்டேன். பாலாவே நம்ப முடியாமல் பாராட்டினார். என் டப்பிங்கை கேட்டவர்கள், தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் பேசுவதை விட பக்காவாக நான் பேசியதாக கூறினார்கள்.

    எனவே எதையும் நான் ஒரு சவாலாகத்தான் இந்த திரையுலகில் எடுத்துக் கொள்கிறேன்.

    உங்கள் அடுத்த படங்கள்?

    அவன் இவனுக்குப் பிறகு புலிவேஷம் வருகிறது. இந்தப் படத்தில் நான் அப்பாவி இளைஞனாக வருகிறேன். சின்னத் தம்பியில் பார்த்த பிரபு மாதிரி. ஆனால் இது வேறு டைப். அவன் இவனுக்குப் பின் இப்படி ஒரு வித்யாசமா என கேட்கும் வகையில் இந்தப் படம் அமையும்.

    அடுத்து கடமை கண்ணியம் கட்டுப்பாடு. இந்தத் தலைப்பை கமல் சாரிடமிருந்து வாங்கினோம். நானா படேகர் நடித்த இந்திப் படக் கதை இது. இந்தப் படம் காவல் துறையின் உன்னதத்தைப் பறைசாற்றுவதாக அமையும். போலீஸை பொறுக்கியாகக் காட்டாமல், போலீஸை போலீசாகவே காட்டியுள்ளோம்.

    நாட்டின் ராணுவத்துக்கு இருக்கும் மரியாதை, போலீசுக்கு இல்லை. இத்தனைக்கும் ராணுவத்தை விட போலீஸ்தான் எப்போதும் 24 மணி நேரம் விழிப்புடன் இருந்து நாட்டைக் காக்க வேண்டிய பெரும்பணியில் உள்ளது. ஆனால் ராணுவத்துக்கு மரியாதையுடன் சல்யூட் அடிக்கும் மக்கள், போலீசை கீழ்த்தரமாக விமர்சிக்கிறார்கள். ஏன் இந்த நிலை... இதை எப்படி களைவது? போலீஸ் இழந்த மரியாதையை எப்படி மீட்பது? என்பதைத்தான் இந்தப் படம் சொல்கிறது. தமிழில் வரும் நிஜமான போலீஸ் கதை இதுவாகத்தான் இருக்கும்.

    இரண்டு வெற்றிப் படங்கள் கொடுத்தும், அடுத்தடுத்து படம் பண்ணாமல் இடைவெளி விடுவது ஏன்?

    போதிய இடைவெளி கொடுத்து பதப்படுத்திய பின் பயிர் செய்தால்தான் நல்ல விளைச்சல் கிடைக்கும். நிலத்துக்குப் பொருந்தும் இந்த விதி என்னைப் போன்ற கலைஞனுக்கும் பொருந்தும். குறுகிய காலத்தில் அவசரப்பட்டு சாகுபடிக்கு இறங்கினால் விளைச்சல் கிடைக்காதல்லவா...

    ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நல்ல தேடலுடன் இதைத்தான் செய்ய வேண்டும் என்றால் கொஞ்சம் இடைவெளி, பொறுமை, காத்திருப்பு முக்கியம். தேர்ந்தெடுத்துதான் எதையும் செய்ய வேண்டும்.

    எனக்கு இந்த மாதிரி ரோல்தான் வேண்டும் என்று கேட்காமல், எதில் சிறப்பாக மனதுக்கு நிறைவாக செய்ய முடியும் என்று தோன்றுகிறதோ அதை செய்கிறீர்கள் என்று கூறலாமா?

    நிச்சயமாக. நகைக்கடைக்குப் போகிறோம். எல்லா நகைகளையும் வேடிக்கைப் பார்த்துவிட்டு, நமக்குப் பிடித்த ஒன்றை தேர்வு செய்வது போலத்தான், எனக்குப் பிடித்த வேடங்களில் நடிக்கிறேன்.

    நீங்கள் வெற்றிகரமான தொழிலதிபராகவும் இருக்கிறீர்கள்... நடிக்கவும் செய்கிறீர்கள். இரண்டிலும் தொடர காரணம் என்ன?

    அது ஒரு சவால். என்னால் இரண்டையும் வெற்றிகரமாக செய்ய முடியும் எனும்போது, ஏன் அதை செய்யக்கூடாது? எல்லாருமே இன்றைக்கு இரண்டு வேலைகளைச் செய்கிறார்கள்.

    சினிமா என்பது உங்களது ஆதர்சமா... தொழிலா?

    சினிமா என்பதை நான் நேசிக்கிறேன். அதனால் அதை தொழில்ரீதியாக அணுகுகிறேன். நேசிப்புடன் ஒரு தொழிலைச் செய்தால்தான் வெற்றி கிடைக்கும்.

    சினிமா மாதிரி மக்களிடம் எளிதில் போய்ச்சேரும் சாதனம் எதுவும் கிடையாது. காதலுக்குப் பிறகு மக்கள் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வது சினிமாவைத்தான். அப்படியொரு பிரமாதமான துறையை முறையாக, தொழில்ரீதியாகப் பயன்படுத்தவே விரும்புகிறேன்.

    எந்த மாதிரி படங்கள் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்?

    மக்கள் விரும்புகிற, ரசிக்கிற மாதிரியான படங்களை செய்ய வேண்டும். அது இந்த வேடம்தான் என்றில்லை.

    இன்றைக்கு ஒரு படத்தைத் தீர்மானிக்கிற அளவுக்கு நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல காட்சி அமைக்க இயக்குநர்கள் இருக்கிறார்கள் அல்லவா?

    நிச்சயமாக. ஆனால் நான் வித்தியாசமான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். ரத்தக் கண்ணீரில் எம்ஆர் ராதா வேடத்தைப் பார்த்தபோது, நாமும் இப்படி நடிக்கணுமே என்று எல்லாருக்குமே தோன்றும். காரணம், அந்த வித்தியாசம்தான். சந்திரமுகியில் ரஜினி சார் அந்த தலையை எட்டி உதைப்பாரே... அந்தக் காட்சி மக்கள் எதிர்ப்பார்க்காத ஒன்று. அதனால் பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த மாதிரி எதிர்ப்பார்க்க முடியாத, புதிய சவாலான வேடங்கள் எனக்கு வேண்டும்.

    இந்த இயக்குநரின் படத்தில் நடிக்க வேண்டுமே என்ற ஆசை இருக்கிறதா..?

    இல்லை. இந்த வேடத்துக்கு இவர் சரியாக இருப்பார் என இயக்குநர்கள் என்னைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதைத்தான் நான் விரும்புகிறேன்.

    அவன் இவனுக்கு கூட, பாலாவிடம் நான் போகவில்லை. அவர் அந்த வேடத்துக்கு நான் சரியாக இருப்பேன் என்று தேர்வு செய்தார். அதற்கு முன்பே நான் கடவுளில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த வேடம் எனக்கு சரியாக இருக்காது என்பதால், என்னை வேண்டாம் என்று அப்போது சொன்ன பாலா, அவன் இவனுக்கு என்னை தேர்ந்தெடுத்தார்.

    English summary
    RK, an industrialist turned successful hero talks about his experience in Bala's forthcoming film Avan Ivan and his future plans in film industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X