6 வயதில் தந்தையை இழந்து.. போராடி ஜெயித்தான்.. கடைசியா பேசி அந்த வார்த்தை.. கதறி அண்ணன்!
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். ரோபோ சங்கரின் மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவருடைய உடலுக்கு பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரோபோ சங்கரின் மறைவால் துவண்டு போன உடன் பிறந்த அண்ணன் சிவகாசி சிவா, அவர் பேசிய கடைசி வார்த்தையை நினைத்து கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
அதில், ரோபோ சங்கருக்கு ஆறு வயது இருக்கும் போதே அப்பா இறந்து விட்டார். அப்பாவின் முகமே பார்க்காமல் தான் அவன் வளர்ந்தான். அப்பா இடத்தில் அண்ணனாக நான்தான் இருந்தேன். சங்கருக்கு அண்ணனாக, அப்பாவாக, நெருங்கிய நண்பராக நான் தான் இருந்தேன். அவனுடைய வாழ்க்கை பயணத்தில் நான் இல்லாமல் இருந்ததே இல்லை. அவன் முதன் முதலில் மேடை ஏறியதில் இருந்து. அவர் காதல் திருமணம் செய்தது, அவனின் வளர்ச்சி என அனைத்திலும் ஒரு நண்பனாக நான் அவனுடன் பயணம் செய்து இருக்கிறேன்.

ரத்த வாந்தி: ரோபோ சங்கர் செவ்வாய்க்கிழமை கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்தின் பூஜையில் கலந்து கொண்டு, அதன் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு இருக்கும்போதே லேசான மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று டிப்ஸ் போட்டுக் கொண்டு, மீண்டும் நடித்துக்கொண்டிருந்த போது தான், அவர் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த வாந்தி எடுத்ததால், எண்டோஸ்கோப்பி செய்வதிலேயே பிரச்சனை இருந்தது. தொடர்ந்து அனைத்து டெஸ்ட்களும் எடுத்த பிறகுதான், உடல் உறுப்புகள் செயல் இழந்து இருப்பது தெரியவந்தது.
கடைசியா பேசிய அந்த வார்த்தை: மருத்துவமனையில் மருத்துவர்கள் கடைசி நேரம் வரை போராடினார்கள். எப்படியாவது ரோபோ சங்கரை மீட்டு விட வேண்டும் என நினைத்தார்கள். அதேபோல குடும்பத்தினரும் எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை, அவர் உயிருடன் வந்தால் போதும் என மன்றாடினார்கள். ஆனால் கடைசியில் எப்படி ஆகிவிட்டது. எப்பொழுதுமே தூக்கம் வரவில்லை என்று தான் ரோபோ சங்கர் சொல்வான். ஆனால், கடைசியில் அவன் சொன்ன ஒரே ஒரு வார்த்தை அண்ணா தூக்கம் வருகிறது என்றான். கடந்த ஒரு வாரத்தில சிங்கப்பூருக்கு சென்றான், இசைஞானி இளையராஜாவின் பாராட்டு விழாவிற்கு சென்று ரஜினி, கமல்,இளையராஜா என அனைவரின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான். அவனுக்கு ஏதோ முன்கூடியே தெரிந்திருக்கிறது என கண்கலங்கி பேசினார் ரோபோ சங்கரின் அண்ணன்.


Click it and Unblock the Notifications











