»   »  ஷங்கரால் போச்சே - சதா சோகம்!

ஷங்கரால் போச்சே - சதா சோகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அந்நியனில் சிக்கிக் கொண்டதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணையும் வாய்ப்பை இருமுறை இழந்தேன் என்று சதா புலம்பியுள்ளார்.

ஒரு நேரத்தில் சதாவைப் பற்றித்தான் சதா பேச்சாக இருந்தது. அந்த அளவுக்கு ஜெயம் என்ற ஒரே படத்தில் அத்தனை பேரையும் ஈர்த்தவர் சதா. ஆனால் என்ன நடந்ததோ, எப்படி நடந்ததோ தெரியவில்லை. சதா மீதான ஈர்ப்பு அப்படியே குறைந்து அடியோடு காணாமல் போய் விட்டது. தேங்க்ஸ் டூ அந்நியன்!

அந்நியன் படத்திற்குப் பிறகுதான் காணாமல் போனார் சதா. தற்போது மாதவனுடன் லீலை படத்தில் நடித்து வருகிறார் சதா. ஏற்கனவே பிரியசகியிலும் இவர்கள் இணைந்து கலக்கியிருந்தனர். அப்படத்தில் கூடுதல் கிளாமர் காட்டி கலங்கடித்திருந்தார் சதா.

லீலை படப்பிடிப்பு ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின்போது கிடைத்த கேப்பில் சதாவை சந்தித்தபோது அவர் பேசியதை விட சோகத்தில் புலம்பியதே அதிகமாக இருந்தது.

சதா கூறுகையில், லீலை படம் ஆரம்பித்தபோது, நான் அதில் புக் ஆனேன். அப்போது படத்தின் நாயகனும், எனது நல்ல நண்பருமான மாதவன் என்னை அணுகி, படத்தில் எனக்கு நான்கு வயதுக் குழந்தையின் தாயாக நடிக்கும் கேரக்டர் இது. எனவே நன்றாக யோசித்துப் பின்னர் நடி என்று அட்வைஸ் செய்தார்.

யோசித்துப் பார்த்த நான் படத்திலிருந்து விலகி விட்டேன். பின்னர் வேறு நடிகை அதில் ஒப்பந்தமானார். ஆனால் என்ன காரணத்தாலோ அந்த நடிகை படத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டார். இதையடுத்து இயக்குநர் என்னை மீண்டும் அணுகினார். இப்போது சிறு மாற்றம் செய்து நானே ஹீரோயினாகி விட்டேன். இப்போது கதைப்படி 4 வயதாகும், தத்துப் பையனின் தத்துத் தாயாக நான் நடிக்கிறேன் என்றார் புன்னகையுடன்.

கொஞ்ச காலமா தமிழ் சினிமாவில் உங்களை அடிக்கடி பார்க்க முடியவில்லையே. ஏன் இந்த தலைமறைவு என்று கேட்டபோது, ஷங்கர் சாரின் அந்நியன் படத்தில் நடித்தபோது எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், சந்திரமுகி படத்தில் நடிக்கும் அருமையான வாய்ப்பு வந்தது.

ஆனால் அந்நியனில் நடித்துக் கொண்டிருந்ததால் சந்திரமுகியில் நடிக்க முடியாமல் போய் விட்டது. அந்நியன் படத்துக்காக நான் 120 நாட்கள் மொத்தமாக கால்ஷீட் கொடுத்திருந்ததுதான் அதற்குக் காரணம்.

பின்னர் சிம்ரன் அதில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அவரும் விலகிய பிறகு மீண்டும் சந்திரமுகி தரப்பிலிருந்து என்னை அணுகினர். அப்போதும் கூட என்னால் அதில் நடிக்க முடியவில்லை. காரணம், அந்நியன்.

சூப்பர் ஸ்டாருடன் இணையும வாய்ப்பை இப்படி இரு முறை கோட்டை விட்டு விட்டேன்.

சமீபத்தில் கூட பரத்துடன் நேபாளி படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் இந்தியிலும், மலையாளத்திலும் புக் ஆகியிருந்ததால் அந்தப் படத்திலும் நடிக்க முடியவில்லை.

இப்படி தமிழில் நான் இடையில் காணாமல் போனதற்கு பல காரணங்களைச் சொல்லலாம் என்று சோகமாக கூறினார்.

தமிழில் உங்களுக்குப் பிடித்த ஹீரோ பாய் யார் என்று சிக்கலான கேள்வியைக் கேட்டபோது, அதை எப்படி குறிப்பிட்டுச் சொல்வது, எல்லோருடனும் நல்ல நட்புடன் உள்ளேனே என்று இழுத்த சதா, எனக்கு மேடி(மாதவன்), அஜீத், விக்ரம் ஆகியோரைப் பிடிக்கும்.

அதிலும் விக்ரமுடனான நட்பில் ஒரு சென்டிமென்ட்டும் உள்ளது. அந்நியன் படப்பிடிப்பின்போது, விக்ரமை நான் அண்ணா என்றுதான் அழைப்பேன். அவரும் பாசத்தோடு தங்கச்சி என்றுதான் கூறுவார்.

எங்களைப் பார்த்த ஷங்கர் ஒரு நாள், இந்த அண்ணனையும், தங்கச்சியையும் வைத்து எப்படிப்பா டூயட் பாட்டை படமாக்குவேன் என்று கிண்டலடித்தார்.

விக்ரம் மீது எனக்கு ரொம்ப மரியாதை உள்ளது. ரொம்பவும் சின்சியரான நபர் அவர். கடுமையான உழைப்பாளி. அந்நியனுக்காக அவர் எவ்வளவு சிரமப்பட்டார் என்று எனக்குத் தெரியும் என்று ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார்.

கூல் படுத்தி விட்டு அடுத்த கேள்விக்குப் பறந்தோம். கிளாமர் ரோல்கள் என்று ஆரம்பித்தவுடனேயே, அதில் எனக்கு நம்பிக்கையே கிடையாது. அதற்கு நான் ஆளும் அல்ல. எனது உடல் வாகு கிளாமருக்குப் பொருந்தாது. கிளாமரான பாடல்களுக்கு நான் ஆடியதும் இல்லை. ஆடவும் மாட்டேன்.

சரி, கல்யாணம் ...

எனது கல்யாணத்தைப் பற்றி பத்திரிகைககள் நிறையவே எழுதி விட்டன. எனது தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் எழுதித் தள்ளி விட்டார்கள். அதுகுறித்து என்னிடம் விளக்கம் கூட கேட்கவில்லை அவர்கள். எனக்கு கல்யாணத்திற்கு முந்தைய காதலில் நம்பிக்கை இல்லை என்றார் சதா.

பேட்டியை முடிக்கும்போது, நடிகைகளுக்கான ரசிகர் மன்றங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, அதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையே கிடையாது என்று நச்சென்று பதில் அளித்து விட்டு கிளம்பிச் சென்றார் சதா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil