For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நான் எப்போதுமே இயக்குநரின் நடிகன்தான்! - 25 படங்களை முடித்த ஷாம் பேட்டி

  By Shankar
  |

  நேற்றுத்தான் பார்த்தது போலிருக்கிறது... '12பி' படத்தில் மீசை அரும்புகிற வயதுப் பையனாக இளமைத் துள்ளலுடன் 2002ல் அறிமுகமான ஷாம், இன்று 25வது படத்தை முடித்திருக்கிறார்.

  ஷாமின் 25வது படம் 'புறம்போக்கு'. இந்த 13 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என வளர்ந்து பரந்து பட்ட அனுபவங்களுடன் இன்று பக்குவப் பட்ட நடிகராக நிமிர்ந்து நிற்கிறார். காலம் அவருக்குப் பல அனுபவங்களையும் முதிர்ச்சியையும் வழங்கியிருக்கிறது.

  Shaam always wants to be a director's artist

  இனி ஷாமுடன் பேசுவோம்...

  உங்களின் 25வது படம் வரை வந்து விட்டீர்கள். எப்படி உணர்கிறீர்கள் இப்போது?

  என்னால் நம்பக் கூட முடியவில்லை. 'புறம்போக்கு' என் 25வது படம். காலம் வேகமாக ஓடுகிறது. 13 ஆண்டுகள் ஓடி விட்டன.. எவ்வளவு அனுபவங்கள்.. எவ்வளவு ரகசியங்கள்.. எவ்வளவு பரவசங்கள்.. எல்லாமும் காலம் கொடுத்தவை.

  '12பி' படத்தில் சிறு பையனாக நுழைந்தேன். இந்த சினிமாவால் நான் கற்றுக் கொண்டவை ஏராளம். பெற்றுக் கொண்டவை அதிகம்.

  என் சினிமா வாழ்க்கையில் ஜீவா சாரின் அறிமுகம் முக்கியமான கட்டம். அதே போல எஸ்.பி.ஜனநாதன் சாரின் 'இயற்கை எனக்கு முக்கியமான படம். தேசியவிருது பெற்ற படம். அதே ஜனா சாரின் இயக்கத்தில் 25 வது படம் 'புறம்போக்கு' அமைந்துள்ளது. இது மகிழ்ச்சியும் பெருமையும் தரும் அனுபவம்தான்.

  Shaam always wants to be a director's artist

  இதுவரை நடித்த 25 படங்களில் ஜீவா, வஸந்த், ஜனநாதன், பிரியதர்ஷன், எம்.ராஜா போன்ற எத்தனை இயக்குநர்கள். எத்தனை அனுபவங்கள். '6' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் ஆனேன். அந்தப் படம் பார்த்து விட்டு விளையாட்டுப் பிள்ளை போல இருந்த ஷாம் அர்ப்பணிப்புள்ள நடிகராகியிருக்கிறார் என்று ஊடகங்கள் பாராட்டியது பெரிய லாபம். இந்த நேரத்தில் என் வளர்ச்சியைப் பார்க்க ஜீவா சார் இல்லையே என்கிற வருத்தம். ஏக்கம் எல்லாம் இருக்கிறது. அவரை நான் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். இப்போது அவர் இருந்தால் சந்தோஷப்படுவார்.

  'புறம்போக்கு' அனுபவங்களைச் சொல்லுங்க...

  ஜீவா சாருக்குப்பின் மீண்டும் 2 வது பட வாய்ப்பு ஜனா சார் இயக்கியதில் மகிழ்ச்சி. மக்களின் நாடித் துடிப்பு தெரிந்தவர் அவர். பலதுறை ஞானம் உள்ளவர். அவர் இயக்கத்தில் மீண்டும் நடித்தது நிச்சயமாக எனக்கு மறக்க முடியாதது. ஒரு கதாநாயகன் என்றால் 10 பேரை அடித்துதான் உருவாக்க வேண்டும் என்பதில்லை. ஜனாசார் அவ்வளவு அழகாகச் செதுக்குவார். ஒரு கேரக்டரை எப்படி வடிவமைப்பது என்பது அவருக்கு கை வந்த கலை. அவர் பேசினால் மணிக்கணக்கில் கேட்டுக் கொண்டே இருக்கலாம். நான் பிகாம் படித்தது பற்றி எனக்கே சந்தேகம் வரும். அந்த அளவுக்கு அவரிடம் தெரிந்து கொண்டு இருக்கிறேன்.

  'புறம்போக்கு' படத்தைப் பொறுத்தவரை நான். ஆர்யா, விஜய்சேதுபதி மூன்று பேரும் இணைந்து நடித்திருக்கிறோம்.

  Shaam always wants to be a director's artist

  உங்கள் கேரக்டர் எப்படி?

  என் கேரக்டரின் பெயர் மெக்காலே. எனக்கு சட்டம்தான் முக்கியம். சட்டத்தின் ஆட்சிதான் என் கொள்கை. சட்டத்தை யாருக்காகவும் எந்தக் கருத்துக்காகவும் வளைக்காதவன். அப்படித்தான் என் கேரக்டர் இருக்கும்.

  மூன்று பேரில் யாருக்கு எப்படிப்பட்ட வாய்ப்பு?

  மூன்றும் மூன்றுவித தனிப்பட்ட குணங்கள் கொண்ட பாத்திரங்கள். அவரவர் பார்வையில் அவரவர் செய்வது சரி. யாரும் கெட்டவர் இல்லை. இது தான் வியப்பூட்டும் விஷயம். நாங்கள் 3 பேரும் இயக்குநரின் மூன்று பாத்திரங்களை ஆளுக்கொன்றாக சுமந்திருக்கிறோம். மூன்று பேரும் சம வாய்ப்பாக பங்கிட்டுக் கொண்டோம். படப்பிடிப்பில் 60 நாட்கள் இணைந்து பணியாற்றியது மகிழ்வான நாட்கள்.

  ஆர்யா ,விஜய் சேதுபதியுடன் உங்கள் நட்பு எப்படி?

  ஆர்யா என்னுடன் 'உள்ளம் கேட்குமே' படத்தில் அறிமுகமானவர். அவர் என் தம்பி போன்றவர். என்னை அண்ணன் என்றே அழைப்பவர். என்னுடன் அறிமுகமான ஆர்யா இன்று வளர்ந்து இருப்பதில் ஒரு சகோதரன் போல எனக்குள் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு. அன்று முதல் அதே அன்பையும் மதிப்பையும் அளிப்பவர். அவருடன் நடித்தது மகிழ்ச்சி.

  தன் தனிப்பட்ட பாணி நடிப்பின் மூலம் விஜய் சேதுபதி இன்று வளர்ந்திருக்கிறார். அவரது 'பீட்சா' , 'சூதுகவ்வும்' நான் ரசித்த படங்கள். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. அவருடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. எங்கள் வீட்டுக்கு பலமுறை வந்திருக்கிறார். பிரியாணி சாப்பிட்டிருக்கிறார்.

  Shaam always wants to be a director's artist

  படப்பிடிப்பு நாட்களில் நாங்கள் 3 பேரும் ஒரே கேரவனில்தான் இருந்தோம். லஞ்ச், டின்னர் எல்லாம் ஒன்றாகவே சாப்பிட்டிருக்கிறோம்.

  அந்த அளவுக்கு எங்களுக்குள் நல்ல அன்பும் நட்பும் புரிதலும் இருந்தன. படப்பிடிப்பு முடிந்ததும் ஒருவரை ஒருவர் தவறவிட்ட ஏக்கம் வருத்தம் வந்துவிட்டது எங்களுக்கு.

  '12பி' அனுபவம், 'புறம்போக்கு'அனுபவம் ஒப்பிட முடியுமா?

  '12பி' பட அனுபவம், அடடா அது ஒரு மறக்க முடியாத அனுபவம். அதை எப்படி விளக்குவது? கனவு போன்ற ஒரு அனுபவம். கனவு கையில வந்து அமர்வது போன்ற பரவசம் அது. அப்போது அனுபவமில்லாத பையன் நான். இப்போது காலம் நிறையவே கற்றுக் கொடுத்து இருக்கிறது. 'புறம்போக்கு'அனுபவம் வளர்ந்து முதிர்ச்சிக்குப் பின் கிடைத்துள்ளது. இதுவரை 12பி ஷாம் என்றவர்கள் இனி 'புறம்போக்கு' ஷாம் என்பார்கள்.

  'புறம்போக்கு' என்பது தரக்குறைவான வார்த்தை அல்லவா... ?

  தரக் குறைவாகப் பேசப்படும் வார்த்தையாக இருக்கலாம். ஆனால் உண்மையில் 'புறம்போக்கு' என்பது தரக்குறைவான வார்த்தை அல்ல. படத்தில் அதற்கு இயக்குநர் சரியான விளக்கத்தை சொல்லியிருக்கிறார். படம் வெளியான பிறகு அந்த வார்த்தை குறித்த எல்லாருடைய பார்வையும் கருத்தும் மாறும்.

  பிற மொழிகளில் நடித்த அனுபவம் எப்படி?

  தெலுங்கில் இயக்குநர் சுரேந்தர் ரெட்டியின் 'கிக்' என்கிற படத்தில் அறிமுகமாகி எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அங்கு எனக்கு 'கிக் ஷாம்' என்றே பெயர் வந்துவிட்டது. சுரேந்தர் ரெட்டியின் படங்களில் தொடர்ந்து நடிக்கிறேன். அவரது . 'ரேஸ் குர்ரம்' எனக்கு நல்ல பெயர் தந்தது.

  தெலுங்கில் இதுவரை 5 படங்கள் முடித்து விட்டேன். கன்னடத்தில் அண்மையில் வந்துள்ள 'தனனம் தனனம்' பெயர் சொல்லும் படமாக அமைந்தது. கவிதா லங்கேஷ் இயக்கியிருந்தார். ரம்யா, ரக்ஷிதா நடித்திருக்கின்றனர்.

  2015ல் உங்கள் திட்டம்?

  நல்ல தொடக்கமாக 2015ல் 'புறம்போக்கு' வரவிருக்கிறது. அடுத்து 'குப்பி' இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் தமிழ், கன்னடத்தில் தயாராகும் ஒரு படம் நடிக்கிறேன். இதில் அர்ஜுனுடன் நடிக்கிறேன். நாகராஜ் என்கிற புதியவர் இயக்கத்தில் மதுரை பின்னணிக் கதை கொண்ட ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன். இப்படி 4 படங்கள் வரிசையாக உள்ளன.

  நீங்கள் எப்படிப்பட்ட நடிகராக வளர ஆசை?

  சினிமா என்பது இயக்குநரின் மீடியம்தான். நான் என்றைக்கும் இயக்குநரின் நடிகராக இருக்கவே விரும்புகிறேன். என்றுமே இயக்குநர் கையில் என்னை ஒப்படைக்க தயாராக இருப்பவன் நான்.

  English summary
  Actor Shaam, who is completed 25 movies in 13 years says that he always wanted to be a director's artist.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X