»   »  ரஜினிக்கு நன்றி.. ஷிரியா

ரஜினிக்கு நன்றி.. ஷிரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

அனாதை இல்லத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளை நடிகை ஷ்ரியா தத்தெடுத்துள்ளாராம். அவர்களின் படிப்பு உள்ளிட்ட முழுச்செலவுகளையும் ஷ்ரியாவே ஏற்றுள்ளாராம்.

ஓவர் நைட்டில் புகழின் உச்சாணிக்குச் சென்று விட்டார் ஷ்ரியா. எல்லாம் சிவாஜியால் வந்த புண்ணியம். தெற்கில் சிவாஜியும், இந்தியில் நடித்த ஆவாராபன் என்ற படமும் ஒரே நேரத்தில் வெளியாகி ஷ்ரியாவுக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.

சிவாஜியைப் போலவே ஆவாராபன் படமும் சூப்பர் ஹிட்டாம். இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார் ஷ்ரியா. ஆரம்பத்தில், மெச்சூரிட்டி இல்லாத நடிகையாக பார்க்கப்பட்டவர் ஷ்ரியா.

எனக்கு 20 உனக்கு 18, தோடா தம் பட்லோ தோடா ஹம், சுக்ரியா ஆகிய படங்கள் ஷ்ரியாவை ஏமாற்றியவை. ஆனால் மழை வந்துதான் ஷ்ரியாவின் அழகை எடுத்துக் காட்டி அத்தனை பேரையும் மலைக்க வைத்தது. ஆனால் ரஜினியுடன் சேர்ந்த பிறகுதான் ஷ்ரியாவின் மார்க்கெட், ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது.

இந்திய சினிமாவில் அதிகம் விரும்பப்படும், நாடப்படும் நடிகையாக மாறியுள்ளார் ஷ்ரியா. மொழி எல்லையைத் தாண்டி பல மொழிப் படங்களிலும் நடிக்க ஷ்ரியாவுக்கு அழைப்பு வருகிறதாம்.

ஷ்ரியாவை சந்திக்க நேர்ந்தபோது சின்னதாக ஒரு பேட்டி எடுத்தோம். அதிலிருந்து சில துளிகள் ..

சிவாஜிக்குப் பிறகு எப்படி உணர்கிறீர்கள்?

வாவ், அமேஸிங். என்னைப் போன்ற ஒரு நடிகைக்கு இப்படி ஒரு உலகளவிலான அங்கீகாரம் கிடைக்கும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. உண்மையில் நான் ஐஸ்வர்யா ராய்க்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் (ரொம்பத்தான் குசும்பு)

மிகப் பெரிய சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்துடன் நடிப்பது ஒவ்வொரு நடிகையின் கனவு. அது எனக்குக் கைகூடியது எனது அதிர்ஷ்டம்தான். ரஜினி சார் எவ்வளவு செல்வாக்கு படைத்தவர், பெரியவர் என்பதை அத்தனை பேரும் இப்போது உணர்ந்திருப்பார்கள்.

ரஜினி சார் ஜென்டில்மேன். படத்தில் எனக்கு நிறைய சீன்கள் வைக்க பெருந்தன்மையாக உதவினார். சிவாஜி பட ஷூட்டிங் நாட்களை என்னால் மறக்கவே முடியாது.

உண்மையிலேயே இந்திய சினிமாவின் பாஸ் ரஜினி சார்.

ஆவாராபன் படம் குறித்து ..?

இந்தியில் நல்ல படத்தில் நடிக்கலாம் என்று வாய்ப்பு தேடியபோதுதான் கிடைத்தது ஆவாராபன். அந்த சமயத்தில் மகேஷ்பட் மற்றும் இயக்குநர் மோஹித் சூரி ஆகியோர் என்னை அணுகினர்.

கதையைக் கேட்டவுடன், கண்டிப்பாக இப்படி ஒரு ரொமாண்டிக்கான படத்தை வருடத்திற்கு ஒன்றாவது பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இந்த கேரக்டருக்காகத்தான் நான் காத்திருந்தேன்.

வடக்கிலும் தெற்கிலும் வெற்றிக் கொடி நாட்டி விட்டீர்கள். எப்படி இருக்கிறது அந்த உணர்வு?

முதலில் ஒரு விஷயம். சிவாஜியின் பிரமாண்ட வெற்றிக்கு நான் காரணம் இல்லை. அது முழுக்க முழுக்க ரஜினி படம். ரஜினி சார்தான் இந்த இமாலாய வெற்றிக்குச் சொந்தக்காரர். அப்படிப்பட்ட வெற்றிப் படத்தில் நானும் இருந்துள்ளேன் என்பதுதான் எனது பெருமை.

ஆவாராபன் படத்தைப் பொருத்தவரை இயக்குநர் சொன்னதைச் செய்தேன். இருப்பினும் இரு படங்களும் பெற்றுள்ள வெற்றி எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. படு ஜாலியாக உணர்கிறேன்.

அப்புறம் ...?

தமிழில் விஜய்யுடன், அழகிய தமிழ் மகன் படத்தில் நடிக்கிறேன். விக்ரமுடன் கந்தசாமியில் நடிக்கவுள்ளேன். இன்னும் இரண்டு படங்கள் குறித்து பேச்சு நடக்கிறது.

இந்தியில், சங்கீத் சிவன் இயக்கும் ஏக்-தி பவர் ஆப் ஒன் என்ற படத்தில் பாபி தியோலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளேன் என்றார் ஷ்ரியா.

அப்புறம் ஷ்ரியா ஒரு சூப்பர் மேட்டரைச் செய்துள்ளார். அதாவது அனாதை இல்லத்தைச் சேர்ந்த 2 குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளாராம்.

அவர்களுக்கு உணவு, கல்வி, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்தையும் ஷ்ரியாவே தரப் போகிறாராம். அவர்களுக்கான முழுச் செலவுகளையும் ஷ்ரியாவே ஏற்றுக் கொண்டுள்ளாராம்.

இரு குழந்தைகளும் அனாதை இல்லத்திலேயேதான் வளரும், ஆனால் வளர்ப்புக்கான செலவுகள் அனைத்தும் ஷ்ரியாவுடையதாம்.

கைவிடப்பட்ட குழந்தைகளின் மேம்பாட்டுக்காக பாடுபட்டு வரும் வேர்ல்டு விஷன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் ஷ்ரியா, போதனையோடு நில்லாமல் தானே முன்வந்து இரு குழந்தைகளைத் தத்தெடுத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்தானே.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil