»   »  நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பேட்டி கண்ட ஜெயலலிதா... ஒரு ஃப்ளாஷ்பேக்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பேட்டி கண்ட ஜெயலலிதா... ஒரு ஃப்ளாஷ்பேக்

By Shankar
Subscribe to Oneindia Tamil

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை 1967 ம் ஆண்டு பொம்மை சினிமா இதழுக்காக இன்றைய முதல்வர், அன்றைய முன்னணி நாயகி ஜெயலலிதா ஒரு நேர்காணல் செய்துள்ளார். ஒரு தேர்ந்த பத்திரிகையாளரைப் போல ஜெயலலிதா எழுப்பிய கேள்விகளுக்கு, தனக்கே உரிய பாணியில் பதிலளித்துள்ளார் நடிகர் திலகம்.

சுவாரஸ்யமான அந்தப் பேட்டி...

ஜெயலலிதா: உங்க பெயருக்கு முன்னாலே சிவா‌ஜின்னு ஒரு பட்டம் சேர்ந்திருக்கிறதே, அது எப்படி வந்தது?

சிவா‌ஜி: அதுதான் ஊர் அறிஞ்சதாச்சே.

ஜெயலலிதா: எனக்குத் தெ‌ரியாதே. அதனாலே...

சிவா‌ஜி: அப்போ ச‌ரி. சொல்லிட வேண்டியதுதான். ஏழாவது சுயம‌ரியாதை மகாநாட்லே சத்ரபதி சிவா‌ஜி நாடகம் நடந்தது. பெ‌ரியார் அவர்கள் மகாநாட்டுக்கு தலைமை வகிச்சாங்க. நாடகத்திலே சிவா‌ஜியாக நடிச்ச என்னைப் பார்த்து பாராட்டிவிட்டு, சிவா‌ஜிங்கிற பட்டத்தையும் கொடுத்தாங்க. அன்னேலேர்ந்து சிவா‌ஜி கணேசனாயிட்டேன்.

Sivaji Ganesan's 90th birthday special: Sivaji - Jayalalithaa interview

ஜெயலலிதா: லைலா - ம‌ஜ்னு, ரோமியோ - ஜுலியட் போன்ற இலக்கியங்கள்ளே வரும் காதலர்களைப் பற்றி படிச்சிருப்பீங்க. அந்த மாதியான காதலருங்க இருந்திருப்பாங்கன்னு நீங்க நினைக்கறீங்களா?

சிவா‌ஜி: காதலிச்சா அந்த மாதி‌ரி காதலிக்கணும் என்கிறதுக்காகத்தான் எழுதியிருக்காங்க. கொஞ்ச நாள் காதலிச்சிட்டு, கைவிட்டுட்டுப் போகக் கூடாது. காதல் என்பது கடைசிவரைக்கும், உயிர் போனா கூட இருக்கணும்னு சொல்றதுக்காகதான் இது. நாடகமும், சினிமாவும், இந்த மாதி‌ரி கதைகளும் வெறுமே படிச்சிட்டு விடறதுக்காக இல்லே.

ஜெயலலிதா: அம்மாதி‌ரியான காதலர்களை இப்போதுள்ள உலகத்திலே காண முடியும்னு நம்பறீங்களா?

Sivaji Ganesan's 90th birthday special: Sivaji - Jayalalithaa interview

சிவா‌ஜி: நான் காதலிச்சது கிடையாது. இப்போ நீ தனி ஆள். இனிமேதான் நீ காதலிக்கப் போறே. நீதான் சொல்லணும்.

ஜெயலலிதா: வேறு வழியே கிடையாது என்ற நிலைக்கு வரும்போது, தற்கொலையைத் தவிர, வேறு நிலை இல்லை என்ற சூழ்நிலைக்கு வரும் போது ஒருவர் தற்கொலை செய்து கொள்றது பற்றி என்ன சொல்லுறீங்க?

சிவா‌ஜி: தற்கொலை கோழைத்தனம் மட்டும் இல்லே, அது பெ‌ரிய தவறும்பேன்.

ஜெயலலிதா: நான்தான் வேறு வழியே இல்லேன்னு சொல்லிட்டேனே. உதாரணமா ஒரு பெண் இருக்கா. அவ கணவனால் கைவிடப்பட்டு விடறா... அவளுக்கு படிப்பும் கிடையாது, என்ன செய்வாள்?

சிவா‌ஜி: பாத்திரம் தேய்க்கிறது, மூட்டைத் தூக்கறது, ஏதாவது நாணயமா வேலை செஞ்சு பிழைக்கிறது. வேலை இல்லாதவங்க, படிக்காதவங்க எல்லாரும் செத்தாப் போயிட்டாங்க?

ஜெயலலிதா: சின்ன வயசிலே நீங்க நாடக மேடையில் நடிக்க ஆரம்பிச்சீங்க-இல்லையா?அப்போ ஏதாவது நினைச்சதுண்டா.அதாவது எதிர்காலத்தை பற்றி.இப்படி ஒரு நடிகரா வருவோம்னு நினைச்சதுண்டா?

Sivaji Ganesan's 90th birthday special: Sivaji - Jayalalithaa interview

சிவாஜி: இப்படி ஒரு நடிகனாகிவிடுவேன்னு கனவுகூட கண்டதில்லை. நடிக்க வேண்டும்கிற ஒரே ஆர்வம் தான் என்னை மேடைக்கு துரத்திச்சு. தவிர, வருங்காலத்தைப் பற்றியோ,எதிர்காலத்தைப் பற்றியோ நினைக்க முடியாத நிலை. அப்போது அடுத்தவேளை சோத்துக்கே என்ன செய்யறது? எங்கே போறது என்ற நிலையில் எதிர்காலத்தைப் பற்றி நான் நினைக்கலே. அதுக்கு நேரமே கிடைக்கலேன்னு சொல்வேன்.

ஜெயலலிதா: நடிகர்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளவேணும்னு நீங்க நினைக்கிறீங்களா?அப்படி நடந்தால் தங்களது தொழிலுக்கும் அரசியலுக்கும் சமமான வகையில் பணியாற்ற முடியும்னு நினைக்கிறீங்களா?

சிவாஜி: அரசியல் வேறு, நடிப்பு வேறு. நடிகனாக இருப்பவன் நடிப்புக்குத்தான் முதலிடம் தரவேணும். நான் ஒரு அரசியல் கட்சியில் இருப்பதால் நான் முழுக்க முழுக்க அரசியலிலேயே இருக்க வேண்டும்னு அந்த கட்சியும் விரும்பாது. ஆனால் கட்சியில் இருப்பதாலே சில கடமைகள் அவனுக்கு உண்டு. சில கடமைகளை அவனிடமிருந்து எதிர்பார்க்கவும் கட்சிக்கு உரிமை உண்டு. உதாரணமா எனக்கு இரண்டு மாசம் ஓய்வு கிடைக்குதுன்னு வச்சுக்குவோம். ஒரு மாசம் நான் ஓய்வு எடுத்துக்கலாம். ஒரு மாசம் கட்சிக்காக உழைக்கலாம். ஆனா கட்சி வற்புறுத்தாது. எப்பவும் வரலாம், போகலாம். அதனால கட்சி, நடிப்பு இரண்டுக்கும் முடிச்சுப் போடக்கூடாது. அது வேறு, இது வேறு.

Sivaji Ganesan's 90th birthday special: Sivaji - Jayalalithaa interview

ஜெயலலிதா: தமிழ் படங்கள் இப்போ முன்னேறியிருப்பதா நினைக்கிறீங்களா?அல்லது தரம் குறைந்து விட்டதாக எண்ணுகிறீர்களா?

சிவாஜி: எல்லாத் துறையிலும் நிச்சயமாக முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. அதேசமயம் சில படங்கள் மக்களது ரசனையை குறைச்சிடும் போலிருக்கு. இந்த மாதிரிப் படங்கள் நூற்றுக்கு இருபத்தஞ்சு இருக்கும்.ஆக நாம் மேலே ஏறினால்,இந்தப் படங்கள் கொஞ்சம் நம்மை கிழே இழுத்து விட்டுடுது.

ஜெயலலிதா: எப்படி?

சிவா‌ஜி: இப்ப நீங்கள்ளாம் கால் சராய் போட்டு நடிக்க வந்துட்டதனாலேதான்.

ஜெயலலிதா: தயா‌ரிப்பாளர்கள் அப்படி போடச் சொல்றாங்களே.

சிவா‌ஜி: ஜனங்களோட வீக்னஸை தயா‌ரிப்பாளர்கள் பயன்படுத்திக்கிறாங்க. நீங்க இன்னும் கொஞ்சம் பிகு வாக இருக்கலாம்.

ஜெயலலிதா: பிகுவாக இருந்தால், நீங்க வேண்டாம்னு சொல்லிவிடுவீங்களே. புதுசா வரும் நடிகைங்க என்ன செய்வாங்க? எதிர்க்க முடியுமா?

சிவா‌ஜி: தப்பு. கால்சராய் போட மாட்டோம்னு சொன்னோம். வேண்டாம்னு தயா‌ரிப்பாளர் சொல்லிட்டாருன்னு வெளியே தெ‌ரிஞ்சா, தயா‌ரிப்பாளரைத்தான் திட்டுவாங்க.

ஜெயலலிதா: மிகுந்த திறமைசாலிகளுக்கும் சிலசமயம் அவங்க மேற்கொண்டு இருக்கும் தொழிலிலேயே சவாலாக சில விசயங்கள் முளைச்சிடும். அதுபோல சிறந்த நடிகரான உங்களுக்கே,சவாலா இருந்த வேஷம் எது?

சிவாஜி: நல்ல கேள்வி. கப்பலோட்டிய தமிழனாக நடிச்சேனே, அதுதான் உண்மையிலேயே எனக்கு சவாலாக இருந்த வேடம். ஏன்னா கப்பலோட்டிய அந்த பெருமகனாரை நேரில் பார்த்த பலர் இன்னைக்கும் நம்மோடயே இருந்துக்கிட்டிருக் காங்க. கதைக்குள்ள வரும் பாத்திரங்களை ஏற்று நடிப்பது சுலபமான காரியம். ஆனால் நமது வாழ்க்கையில் சந்தித்த, அதுவும் சமீப காலம் வரைக்கும் இருந்த ஒரு பெரிய மனிதரைப் போல நடிக்கிறோம் என்று சொல்றபோது, அந்த நடிப்பை எல்லோரும் ஏத்துக்கணும். அதிலே மாறுபாடு எழக்கூடாது. பெரியார் அவங்களைப் போல நடிக்கிறோம் என்றால், பாக்கிறவங்க 'பெரியாரைப் பார்ப்பதுபோலவே இருந்ததுன்னு சொல்லணும். அப்போதான் நடிப்பு பூரணத்துவம் பெறும். அந்த மாதிரியான ஒண்ணுதான் இந்தக் கப்பலோட்டிய தமிழன் வேஷம். இதில் நான் நடிச்சதைப் பார்த்துட்டு, அந்தப் பெரியவர் வ.உ.சி.யின் மகன் 'என் அப்பாவை நேரில் பார்த்ததுபோல இருந்தது' என்று சொன்னார். ஒரு வெற்றியாகத்தான் நான் இதைக் கருதுகிறேன்.

ஜெயலலிதா: சில நாவல்கள் படிக்கிறோம், கதைகளைக் கேட்கிறோம். ஆஹா!அந்த மாதிரி வேஷம் நமக்கு வரக் கூடாதா? கிடைக்காதா? என்று நினைக்கிறோம். அந்த மாதிரி நீங்க எதிர்பார்த்து நடிச்ச வேஷம் ஏதேனும் இருக்கா?

Sivaji Ganesan's 90th birthday special: Sivaji - Jayalalithaa interview

சிவாஜி: கட்டபொம்மன் வேஷம் அப்படிப்பட்டது. கட்டபொம்மன் கதையை தெருக்கூத்தா நான் பார்த்தேன். நான் வீட்டை விட்டு நாடகத்தில் போய்ச்சேர தூண்டுதலாக இருந்ததே இந்த கட்டபொம்மன் கதைதான்.

ஜெயலலிதா: இப்போ புதுசா ஒரு பிரச்சினை தலை தூக்கியிருக்கு.முத்தக் காட்சிகளை அனுமதிப்பதா இல்லையான்னு? நீங்க என்ன சொல்றீங்க?

சிவாஜி: சே..சே..வெட்கக்கேடு. முத்தம் கொடுக்கிறதை காட்டவே கூடாது. முத்தம் கொடுக்கிறது மாதிரி நடிக்கணும். மூடிக்காட்டுவதுதான் கலை. பச்சையா உள்ளதை அப்படியே காட்டினா அது கலையாகாது. அதனால் முத்தம் கொடுப்பதையெல்லாம் திரையிலே காட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

ஜெயலலிதா: உங்களுக்கு எவ்வளவோ விசிறிகள் இருக்காங்க.நீங்க யாருக்காவது விசிறியாக இருந்ததுண்டா?

சிவாஜி: ஓ!இப்பவும் நான் விசிறியாக இருக்கேன். பி.ஆர்.பந்துலு மேடையில் நடிச்சு வந்தபோது, நான் அவருடைய விசிறிகளில் ஒருவன். ஹிந்தி நடிகை நர்கீஸின் விசிறி நான். சார்லஸ் போயர் (Charles Boyer) ரசிகன் நான்.

ஜெயலலிதா: உங்களுக்கு லதாவின் பாட்டு என்றால் ரொம்பவும் பிடிக்கும் போலிருக்கே?

சிவாஜி: என் தங்கையாச்சே.. பிடிக்காம இருக்குமா. அது மட்டுமா? சமீபத்திலே நான் ஒரு நியூஸ் கேள்விபட்டேன். இண்டர்நேஷனல் லெவல்லே உலகம் பூராவும் ஒலிபரப்பப்படட பாடகர்களின் வரிசையில், லதாவின் பாட்டுக்கள் நாள் ஒன்றுக்கு இருபது மணிக்கும் மேலே ஒலிபரப்பாகுதுன்னு சொன்னாங்க. உலகிலேயே எந்தப் பாடகிக்கும் இல்லாத தனி கவுரவம் என் தங்கச்சிக்கு இருக்கு.

Sivaji Ganesan's 90th birthday special: Sivaji - Jayalalithaa interview

ஜெயலலிதா: நீங்க நாடகங்களிலே நடித்து வந்த காலத்தில் சினிமாவுக்கு அடிக்கடி போவதுண்டா?

சிவாஜி: அப்ப மட்டும் என்ன?இப்பவும்ந்தான். மெட்ராஸ் சிட்டியிலே நான் பார்க்காம படமே ஓடாது. நேத்து ராத்திரிகூட ஒரு குப்பை படத்துக்கு நான் போயிட்டு வந்தேன்.

ஜெயலலிதா: அந்த மாதிரியான நாளிலே நீங்க ரொம்ப விரும்பி பலமுறை பார்த்த படம் எது?

சிவாஜி: ருடால்ப் வாலண்டினோ நடித்த 'தி ஷீக்' என்ற படம்.

ஜெயலலிதா: ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில சம்பவங்கள் மறக்கமுடியாததாக அமைந்துவிடும். அந்த மாதிரி உங்க வாழ்க்கையிலே ஏதாவது நடந்திருக்கா?

சிவாஜி: எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் ஆசிய ஆப்பிரிக்க படவிழாவின் போது நடந்தது. அன்னிக்கு விழாவுக்கு வந்த படங்களின் ரிசல்ட் சொல்றாங்க. நான் பின்னாலே உட்கார்ந்திருந்தேன். அங்கிருந்தவங்க எல்லாம் என்னை ஏதோ டெக்னீசியனு நினைச்சிருந்தாங்க. அங்கே வந்திருந்தவங்களெல்லாம் பெரியவங்க, உயரத்திலும் ஏழடி. அங்கே பல பெரிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் கூடியிருந்தாங்க. நீதிபதிகள் எல்லோரும் வந்தாங்க. கட்டபொம்மன்தான் சிறந்த படம். கட்டபொம்மனா நடிச்ச நான்தான் சிறந்த நடிகன்னு சொன்னாங்க. என் பேரைச் சொல்லி கூப்பிட்டாங்க. நான் எழுந்து நின்னேன். வாழ்க்கையில் நான் எதற்கும் சாதாரணமா மசிஞ்சு கொடுக்காதவன். நடுக்காட்டில் புலி துரத்தி வந்தபோதுகூட அசையாமல் இருந்தவன். ஆனா அன்னிக்கு கெய்ரோவில் நடந்த அந்த சம்பவம் என்னை அசத்திட்டது. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பத்மினி என்னை தாங்கிப் பிடிச்சிட்டாங்க. இல்லாட்டி நான் நிச்சயம் விழுந்திருப்பேன். நான் என்னையே மறந்து உணர்ச்சி வசப்பட்டது அந்த ஒரு நாள்தான்.

-இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்த தினம்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Here is an interview of late legend actor Sivaji Ganesan taken by Jayalalithaa in 1967. Oneindia present this interesting flashback on his 90th birth anniversary.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more