»   »  கல்யாணம் நடந்தது..ஆனா கணவன் மனைவியாக வாழலை-ஸ்ரீகாந்த்

கல்யாணம் நடந்தது..ஆனா கணவன் மனைவியாக வாழலை-ஸ்ரீகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை:வந்தானாவை திருமணம் செய்து கொண்டது உண்மை. ஆனால் அவருடன் கணவன் மனைவியாக வாழ்ந்தது இல்லை என நடிகர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,

எனக்கும் வந்தனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்புதான் அவர்களுடைய குடும்பம் பற்றி தெரிய வந்தது.

பிப்ரவரி 7ம் தேதி நாங்கள் பதிவு திருமணம் செய்துக் கொண்டோம். ஆனால் அன்று முதல் இன்று வரை கணவன் மனைவியாக வாழ்ந்தது கிடையாது. திருமணத்திற்கு முன்பு அவர் குடும்பத்தை பற்றி விவரம் தெரியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.

என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் காவல் நிலையத்திற்கு சென்றதே கிடையாது. அப்படிப்பட்ட என் குடும்பத்தை பற்றி அவர்கள் அடுக்கடுக்காய் குற்றம் சுமத்துகின்றனர்.

சினிமாவில் எனக்கு நல்ல பெயர் உள்ளது. அதை கெடுக்கும் வகையில் வந்தனா குற்றச்சாட்டுகள் இருக்கிறது. வந்தனா குடும்பத்தை பற்றிய மோசடி புகார் வர ஆரம்பித்ததும் அவருக்கு, இப்போது திருமணம் வேண்டாம். பிரச்சனையை சரி செய்து கொண்டு வாருங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என இமெயில் அனுப்பியிருந்தேன். ஆனால் அதற்கு பதில் அனுப்பவில்லை.

இப்போது இத்தனை மோசடிகளை மறைப்பவர்கள் நாளை எத்தனை விஷயங்களை மறைப்பார்கள். வந்தனா குடும்பத்தார் மீது மோசடி புகார்கள் வந்திருப்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. அவர்கள் குடும்பம் பற்றி தெரிந்த பிறகும் அவர்களை பற்றி எந்த பேட்டியிலும் கூறியது கிடையாது.

எங்கள் திருமணத்தின்போது அழைப்பிதழில் வந்தனாவின் பெற்றோர் பெயரை வெளியிட முயற்சித்த போது, அவர்கள் பெயர் எதற்கு, என்னுடைய தாத்தா, பாட்டி பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள் என வந்தனா கூறிய போதே எனக்கு சந்தேகம் எழுந்தது.

நேற்று முன்தினம் வந்தனா வீட்டிற்கு வந்து கலாட்டா செய்தார். இரவு நேரத்தில் ஒரு பெண்ணை விரட்டக் கூடாது என வீட்டில் தங்க அனுமதித்தோம். உணவு வழங்கினோம். வந்தனாவின் உறவினர்கள் சில ரவுடிகளோடு வந்து வீட்டை வட்டமிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் வேறு வழியில்லாமல் நாங்கள் காலையில் வீட்டை காலி செய்தோம்.

இதுகுறிது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்தோம். அதில் எங்க வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வெளியேற மறுக்கின்றனர். அடியாட்கள் நடமாட்டமும் இருக்கிறது என குறிப்பிட்டிருந்தோம். கமிஷ்னர் அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

எங்கள் வீட்டில் அமர்ந்துக் கொண்டு எங்களுக்கு எதிராக பேட்டி கொடுப்பதை என்னவென்று சொல்வது. நான் ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டேன் என்பதெல்லாம் பொய். நான் எத்தனை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் எப்படி ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்ட முடியும்.

அவர்கள் குற்றம் சாட்டும் கீதா என்பவர் தயாரிப்பாளர் இல்லை. என் சினிமா வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என நோக்கத்தில் அவர்கள் கீதா மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

பதிவு திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக நாங்கள் சம்பிரதாயத்திற்காக போட்டோ எடுத்துக் கொண்டோம். ஆனால் அங்கு ஹோமம் வளர்க்கப்பட்டது என்பதெல்லாம் உண்மையில்லை.

முடிவாக நான் சொல்வது இந்த பிரச்சனையை நான் சட்டப்படி சந்திப்பேன். என் வழக்கறிஞர் மூலம் நான் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறேன்.

வந்தனாவோடு வந்திருக்கும் ரவுடிகள் என்னை கடத்த முயற்சி செய்கின்றனர். அதனால் நான் வீட்டிற்கு போகாமல் இருக்கிறேன். எனது பாட்டி தான் வீட்டிலுள்ளார். எங்கள் தெருவில் ரவுடிகள் நடமாட்டம் காணப்படுகிறது. வீட்டின் மேல் கல்வீச்சும் நடத்தியுள்ளனர். இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்ற பின்னரே வீட்டிற்கு செல்லவிருக்கிறேன். வந்தனா வீட்டார் இந்த பிரச்சனையை சட்டப்படி சந்திக்கட்டும் என்றார் ஸ்ரீகாந்த்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil