»   »  ஸ்ரீகாந்த்தை மணப்பேன் - வந்தனா உறுதி

ஸ்ரீகாந்த்தை மணப்பேன் - வந்தனா உறுதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

என் மீதும், எனது குடும்பத்தார் மீதும் எழுந்துள்ள புகார்கள் பொய்யானவை என்பதை நிரூபித்து நடிகர் ஸ்ரீகாந்த்தை மணப்பது நிச்சயம் என்று வந்தனா உறுதிபட தெரிவித்துள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்த்துக்கும், துபாயில் வசித்து வரும் சாரங்கபாணியின் மகள் வந்தனாவுக்கும் திருமணம் நிச்சயமானது. இந்த செய்தி வெளியான அடுத்த சிலநாட்களிலையே பெரும் அதிர்ச்சி குண்டு வெடித்தது.

மணமகள் வந்தனா, அவரது தந்தை சாரங்கபாணி, அண்ணன் ஹர்ஷவர்த்ன் ஆகியோர் மீது பல கோடி பணத்தையும், சொத்துக்களையும் மோசடி செய்ததாக வழக்கு உள்ளதாக வெளியான அந்த செய்தியால் ஸ்ரீகாந்த் குடும்பம் நிலைகுலைந்தது.

கல்யாணப் பத்திரிக்கை அச்சிடும் பணியை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார் ஸ்ரீகாந்த்தின் தந்தை கிருஷ்ணமாச்சாரி. கல்யாணம் நடைபெறாது எனவும் அவர் அறிவித்தார்.

இது வந்தனாவுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் வந்தனா பேசுகையில், என் மீதும், எனது பெற்றோர் மீதும் மோசடி வழக்கு இருப்பதாக கூறப்படுவதில் அடிப்படை இல்லை.

இந்த தவறான செய்தியால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். என் மீதோ அல்லது எனது பெற்றோர் மீதோ எந்த வழக்கும் இல்லை. இதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க நான் தயார்.

எனது சகோதரர் ஹர்ஷவர்த்தன் 5 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்திலிருந்து பிரிந்து போய் விட்டார். அவருக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை.

அவர் மீது வழக்குகள் இருக்கலாம். ஆனால் அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும். எந்த வங்கியிலிருந்தும் நான் கடன் பெற கையெழுத்து எதுவும் போடவில்லை. எங்களது கல்யாணத்தைத் தடுத்து நிறுத்த சிலர் செய்யும் சதி வேலையே இந்த பொய் செய்தி.

அனைத்துத் தடைகளையும் கடந்து, என் மீதான புகார் பொய்யானது என்பதை நிரூபித்து ஸ்ரீகாந்த்தை மணப்பது நிச்சயம் என்றார் வந்தனா.

அவரிடம், இந்தப் பிரச்சினை குறித்து ஏன் ஸ்ரீகாந்த் குடும்பத்திடம் முன் கூட்டியே தெரிவிக்கவில்லை என்று நிருபர்கள் கேட்டபோது, எனது சகோதரர் எங்களுடன் இல்லை, அவர் பிரிந்து சென்று விட்டார். எனவே அதுகுறித்து தெரிவிக்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை.

ஸ்ரீகாந்த் இதுதொடர்பாக விவாதிக்க முன்வர வேண்டும். கல்யாணத்தை அவர் ரத்து செய்ய மாட்டார் என நான் உறுதியாக நம்புகிறேன். புத்திசாலித்தனமான முடிவை அவர் எடுக்க வேண்டும் என்றார் வந்தனா.

கல்யாணம் குறித்து ஸ்ரீகாந்த் இதுவரை எந்தப் பதிலையும் சொல்லாமல் மெளனம் காத்து வருகிறார். ஆனால் கல்யாணத்திற்கான வாய்ப்பே இல்லை என்று அவரது தந்தை தொடர்ந்து கூறி வருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil