»   »  புயல் நீங்கி விட்டது: வந்தனாவுடன் வாழ்வேன்- ஸ்ரீகாந்த்

புயல் நீங்கி விட்டது: வந்தனாவுடன் வாழ்வேன்- ஸ்ரீகாந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

எனது மண வாழ்வில் வீசிய புயல் நீங்கி விட்டது. வந்தனாவுடன் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளேன். ஒரு நல்ல நாளில் எங்களது திருமண வரவேற்பு நடக்கும். எனது வீட்டுக்கு வந்தனாவை முறைப்படி கூட்டி வருவேன் என்று நடிகர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

சமீபத்தில் தமிழ்த் திரையுலகைக் கலக்கிய ஒரு பரபரப்பு சம்பவம் ஸ்ரீகாந்த் - வந்தனா விவகாரம்தான். சினிமாவை மிஞ்சும் வகையில் அடுத்தடுத்து அதிரடித் திருப்பங்களுடன் அமர்க்களப்படுத்திய இந்த விவகாரம் தற்போது தமிழ் சினிமாவைப் போலவே சுபமான கிளைமேக்ஸை நெருங்கியுள்ளது.

முதலில் இருவரது திருமண அறிவிப்பு வெளியானது. இதையடுத்து வந்தனாவையும், ஸ்ரீகாந்த்தையும் அத்தனை பத்திரிக்கைகளும் அணுகி ஸ்பெஷல் பேட்டிகளை வாங்கிப் போட்டன.

ஸ்ரீகாந்த்தை கணவராக அடைய கொடுத்து வைத்திருக்கிறேன் என்று புளகாங்கிதமடைந்து பேசினார் வந்தனா. ஆனால் சில நாட்களிலேயே வந்தனாவின் சகோதரர் மீது ஏகப்பட்ட கிரிமினல் வழக்குகள் இருப்பதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் வந்தனா மீதும் வழக்குகள் இருப்பதாக செய்திகள் கூறின.

இதனால் ஸ்ரீகாந்த் - வந்தனா திருமண ஏற்பாடுகள் நின்றன. திருமணம் நடக்காது என்றும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து வந்தனா தரப்பிலிருந்து ஸ்ரீகாந்த் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில்தான் அதிரடியாக ஸ்ரீகாந்த் வீட்டில் குடியேறினார் வந்தனா. அவரது திடீர் பிரவேசத்தால் குழம்பிப் போன ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். உறவினர் வீடுளிலும், ஹோட்டல்களிலுமாக மாறி மாறித் தங்கினர்.

வீட்டுக்குள் புகுந்த வந்தனா, அடுத்த அதிரடியாக எனக்கும், ஸ்ரீகாந்த்துக்கும் ஏற்கனவே கல்யாணமாகி விட்டது, இதோ பாருங்கள் கல்யாண ஆல்பம் என்று புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பைக் கூட்டினார்.

இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே சட்டப் போராட்டம் தொடங்கியது. அத்துமீறி நுழைந்து விட்டார் என்று ஸ்ரீகாந்த் தரப்பு வழக்கு தொடர்ந்தது. ஆனால் நான் ஸ்ரீகாந்த்தின் சட்டப்பூர்வமான மனைவி, எனக்கு அவரது வீட்டில் தங்கியிருக்க உரிமை உள்ளது என்று வந்தனா வழக்கு போட்டார்.

இரு தரப்பினரும் மாறி மாறி வழக்குகள் போட்டு முன்ஜாமீனும் வாங்கினர். இந்த நிலையில் இரு தரப்பிலும் சமரசப் பேச்சுவார்த்தைக்கு முயற்சிக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே, வந்தனாவை தனது மனைவியாக ஏற்றுக் கொள்ள ஸ்ரீகாந்த் சம்மதித்தார்.

வந்தனாவை தனது வக்கீலுடன் சென்று ஸ்ரீகாந்த் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு கண்டார். இந்த செய்தியை தட்ஸ்தமிழ் தான் முதன் முதலில் வெளியிட்டது என்பது நினைவிருக்கலாம்.

மேலும், வந்தனா மீது ஸ்ரீகாந்த் கொடுத்த புகாரை விசாரித்த போலீஸார், வந்தனா மீது தவறு இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். இதுதொடர்பான அறிக்கையையும் அவர்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யவுள்ளனர்.

இந்த நிலையில், வந்தனாவுடன் சேர்ந்து வாழப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஸ்ரீகாந்த் கூறுகையில், எனது மண வாழ்க்கையில் வீசிய புயல் நீங்கி விட்டது. எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரச்சினைகள் உள்ளன.

சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக எனது குடும்பத்திலும் பிரச்சினைகள் ஏற்பட்டது. நான் நடிகன் என்பதால் பிரச்சினை பெரிதாக காட்டப்பட்டு விட்டது.

இதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் செயல்பட்டு வந்தேன். மனசாட்சிப்படி, நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன்.

வந்தனா குடும்பமும், எனது குடும்பமும் சந்தித்துப் பேசினர். அதில் சுமூக முடிவு எட்டப்பட்டது. இதையடுத்து இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளோம்.

ஒரு நல்ல நாளில் எனது வீட்டிற்கு வந்தனாவை அழைத்து வருவேன். அவருடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவேன். விரைவில் எங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும்.

வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து சட்டரீதியாக ஆலோசித்து வருகிறோம். எங்களது வக்கீல்களுடன் எங்களது இரு குடும்பத்தினரும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர் என்றார் ஸ்ரீகாந்த்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil