'பொய்யான வசூல் கணக்குகளால் நடிகர்களைக் கெடுத்தது நாம்தான்' - மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஓபன்!
சென்னை: தமிழ் சினிமாவில் பொய்யான வசூல் கணக்குகளைக் கூறி நடிகர்களைக் கெடுத்தது நாம்தான் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளிப்படையாக பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
2025ஆம் ஆண்டில் ஜூலை மாதம் வரை 153 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதில் எத்தனை படங்கள் வெற்றி பெற்றன என்று பார்த்தால் தமிழ் சினிமா பரிதாபகரமான நிலையை நோக்கிச் செல்கிறதோ என்ற அச்சம் எழுகிறது என்கிறார் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்.

சினிமா எப்படி இயங்குகிறது, விமர்சனங்களால் சினிமா பாதிக்கப்படுகிறதா, நட்சத்திரங்களின் சம்பளத்தை கட்டுக்குள் கொண்டு வந்தால்தான் சினிமா சரியாகுமா என்பது போன்ற கேள்விகளை முன்வைத்து சினிமா துறையைச் சேர்ந்த பலரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
படத்தின் தயாரிப்புச் செலவில் பெரும்பாலான தொகை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கே சென்றுவிடுவதால், நல்ல படங்கள் கொடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்கிறார் திருப்பூர் சுப்ரமணியம். ஒரு படத்தின் பட்ஜெட் 300 கோடி என்றால் 250 கோடி ரூபாய் நடிகர்களுக்கும் டெக்னீஷியன்களுக்கும் சம்பளமாக கொடுக்க வேண்டி இருக்கிறது. மீதமுள்ள 50 கோடியில் படமெடுத்தால் எப்படி நல்ல படம் வரும் என ஓபனாக போட்டு உடைத்து விட்டார்.
ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமங்களை நம்பி சம்பளம் அதிகமாகிவிட்டது. தயாரிப்பாளர்கள் பொய்யான வசூல் கணக்குகளை கூறுவதால் நடிகர்களுக்கு உண்மை தெரிவதில்லை என்கிறார் திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இதனால் நடிகர்கள் அதிக சம்பளம் கேட்கிறார்கள்.
சினிமாவில் ஒரு படம் ஆரம்பித்துவிட்டால், அதிகபட்சம் 40 -50 நாட்களில் முடிப்பார்கள். ஆனால், இப்போது சாதாரண குடும்பக் கதையை எடுக்கவே ஒரு வருடம் ஆகிறது. இதனால் முதலீடு அதிகமாகிறது. அதிக தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட காலக்கட்டத்தில் இயக்குநர்களுக்கு போதுமான திட்டமிடல் இல்லாததே படப்பிடிப்பு நாட்கள் அதிகரிக்க காரணம் என்கிறார்.
தற்போது ஓடிடி, சாட்டிலைட், விநியோகஸ்தர்கள் என யாரிடமிருந்தும் பணம் வருவதில்லை. தயாரிப்பாளர் சொந்த பணத்தில் 20% போட்டு, 80% கடன் வாங்கி படம் எடுக்கிறார். இந்த கடனுக்கு வட்டியே 30 கோடி ஆகிவிடுகிறது என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.
நடிகர்கள் இப்போது வெளிப்படையாக தெரியாமல் சம்பள சதவீதத்தில் படம் பண்ணுகிறார்கள். 2026-க்குப் பிறகு சினிமா விட்டு ஒதுங்கியவர்கள் கூட படம் பண்ண வரலாம். அந்த அளவுக்குச் நிலைமை மாறும் என திருப்பூர் சுப்பிரமணியம் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
சினிமாவில் பைனான்சியர்ஸ் ரொம்ப முக்கியம். படம் முடிந்து ரிலீஸுக்கு வந்தால்தான் பைனான்சியர்ஸ்க்கு பணம் போகும். ஆனால் ஓடிடி கன்பர்மேஷனுக்கு டைம் எடுப்பதால் பைனான்சியர்ஸ் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார் சினிமா விமர்சகர் கேபிள் சங்கர்.

தியேட்டருக்கு மட்டுமே என்ன பட்ஜெட் வருமோ அதை வைத்து படம் எடுக்க வேண்டும். ஓடிடி மற்றும் சாட்டிலைட் மூலம் வந்தால் அதை பிறகு பிரித்துக்கொள்ளலாம். ஓடிடியை நம்பி படம் எடுக்கும் நிலைமை மாறிவிட்டது என்கிறார் கேபிள் சங்கர்.
இது ஒரு சில பைனான்சியர்ஸோ, தயாரிப்பாளர்களோ, நடிகர்களோ பாதிக்கப்படும் விஷயம் இல்லை. இது 10,000 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே, பதற்றப்படாமல் ஒருவருக்கொருவர் தோல் கொடுத்து மூவ் பண்ணினால் இந்த பிரச்சனையை கடந்து போகலாம் என்பது என்னுடைய ஃபீலிங் என்கிறார் தனஞ்சயன்.
தயாரிப்பாளர்கள் வாங்கிய கடனுக்கு டிஜிட்டல் உரிமை மூலம் பணம் வரும் என நினைத்து சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால், டிஜிட்டல், சாட்டிலைட் உரிமை இல்லை என்றால் தியேட்டருக்கு கொண்டு போகும்போது படம் ஓடாவிட்டால் பைனான்சியர்ஸ்க்கு எப்படி பணம் கொடுப்பது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி எழுப்புகிறார்.
வசூல் விவரங்களை வெளிப்படையாக சொன்னால் நடிகர்கள் புரிந்து கொள்வார்கள். அப்போது தான் உண்மை நிலையை உணர்ந்து சம்பளம் கேட்பார்கள். சின்ன படங்களுக்கு பைனான்ஸ் கிடைப்பதில்லை என்கிறார் சுரேஷ் காமாட்சி.
இது தனிப்பட்ட பிரச்சனை கிடையாது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என அனைவரும் சேர்ந்து பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும். அப்போதுதான் சினிமா தொழில் நல்லா இருக்கும் என சுரேஷ் காமாட்சி கூறுகிறார்.
திரைத்துறையில் முன்பு இந்தி ரைட்ஸ் ஒரு சப்போர்ட்டாக இருந்தது. இப்போது இந்தி ரைட்ஸ் வாங்குவது 80% குறைந்துவிட்டது. தற்போது இருப்பது டிஜிட்டல் மற்றும் தியேட்டரிக்கல் மட்டுமே என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.
பெரிய பட்ஜெட் படங்களுக்கு 60% எப்படியாவது வசூல் ஆகிவிடும். ஆனால், 5 கோடி, 6 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் வெற்றி பெறும்போது தான் சினிமா ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.
இன்றைக்கு இருக்கும் கதாநாயகர்களுக்கும், இயக்குநர்களுக்கும் இதெல்லாம் தெரியாது என்று நினைக்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு பதில் அளித்தவர்கள் அது, தெரிந்ததால்தான் அவர்கள் சம்பள விஷயத்தில் பர்சன்டேஜ்க்குள்ளே வருகிறார்கள் என்றனர். தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா உலகமே இந்த பிரச்சனையில் சிக்கித் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் இந்த கலந்துரையாடல் வீடியோ உள்ளது.


Click it and Unblock the Notifications











