Exclusive: விஜய் சார் ரொம்ப பிடிக்கும்.. பிரபாஸ் சார் ஹனுமான் மாதிரி.. ‘மிராய்’ தேஜா சஜ்ஜா பேட்டி!
சென்னை: தளபதி விஜய் சார் ரொம்ப பிடிக்கும் என்று பேசிய தேஜா சஜ்ஜா, பிரபாஸ் சாருக்கு தன்னோட பலம் என்னன்னு தெரியாது. அவர் ஹனுமான் மாதிரி!" நடிகர் தேஜா சஜ்ஜா சமீபத்திய பேட்டியில் இவ்வாறு கூறியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஹனுமான் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, தேஜா சஜ்ஜா தற்போது 'மிராய்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அடுத்த வாரம் அவரது படம் வெளியாகவுள்ள நிலையில், தனது மிராய் குறித்து அவர் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
தேஜா சஜ்ஜா தனது திரைப்பயணம் குறித்து கூறுகையில், "நான் சினிமாவுக்கு வந்தது கடவுள் செயல். எனக்கு சீக்கிரமே இந்த வாய்ப்பு கிடைத்ததுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும். காதல் படங்கள் பண்ண எனக்கு விருப்பம்தான். ஆனா, ஒரு படத்துல நடிக்கறதுக்கு, தியேட்டருக்கு ஏன் வரணும்னு ரசிகர்களுக்கு ஒரு காரணம் இருக்கணும்னு நான் நினைக்கிறேன்" என்றார்.

மிராய் திரைப்படத்துக்காக தாய்லாந்தில் பயிற்சி எடுத்த அனுபவத்தை தேஜா பகிர்ந்து கொண்டார். "இந்த படத்துல சூப்பர் ஹீரோ மாதிரி வேகமான ஆக்ஷன் காட்சிகள் இருக்கும். அதற்காக 15-20 நாள் பயிற்சி எடுத்தேன். வழக்கமான கமர்ஷியல் ஆக்ஷன் இல்லாம ரொம்ப வேகமா இருக்கும்" என்றார். மேலும், தான் ஒரு 'ஸ்பான்டேனியஸ் ஆக்டர்' என்றும், இயக்குநரின் ஆலோசனையின்படி நடிக்க முயற்சிப்பதாகவும் கூறினார்.
பிரபாஸ் உடனான சந்திப்பு குறித்து தேஜா கூறுகையில், "பிரபாஸ் சார் 'மிராய்' ட்ரெய்லர் பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். அவர் ஒரு பெரிய ஸ்டார், ஆனா ரொம்ப பணிவானவர். அடுத்தவங்களுடைய வெற்றியைப் பார்த்து சந்தோஷப்படுவார். என்னுடைய ஸ்கிரிப்ட் செலக்ஷனைப் பாராட்டி, படத்தின் கதையையும், ட்விஸ்ட்களையும் கேட்டார்" என்றார்.
மிராய் திரைப்படத்தின் படப்பிடிப்பு அனுபவம் குறித்து தேஜா பேசுகையில், "படத்துல கிரீன் மேட்ல எதுவும் எடுக்கல. எல்லாமே உண்மையான லொகேஷன்ல எடுத்தோம். ஹிமாலயாஸ், நேபால், இலங்கை, மும்பைன்னு பல இடங்களுக்குப் போயிருக்கோம். குறைவான வசதிகள் இருந்தும், ஒரு சர்வதேச படம் மாதிரி இருக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டோம்" எனக் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், "ஜெயராம், ஜெகபதி பாபு, ஸ்ரேயான்னு பெரிய நடிகர்கள்லாம் கதைக்காக இந்த படத்துல நடிச்சிருக்காங்க. சின்ன பசங்க ஏதாவது பண்ணுவாங்கன்னு நம்பி வந்து சப்போர்ட் பண்ணாங்க. அவங்களுக்கு நான் ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன்" என்றார். மேலும், இயக்குநர் விஷன் இருந்ததால்தான் இவ்வளவு நல்லா எடுக்க முடிஞ்சது என்றும் குறிப்பிட்டார்.
சினிமாவில் தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று தேஜா கூறினார். "யாருமே எனக்கு எதுவும் சொல்லிக் கொடுக்கல. நான் பார்த்து கத்துக்கிட்டேன். பெரிய நடிகர்கள் அவங்க வேலையை எவ்வளவு சீரியஸா பண்றாங்கன்னு பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்" என்றார். இது கடவுள் கொடுத்த வரம் என்று அவர் குறிப்பிட்டார். திறமை இருந்தும் சரியான நேரம், இடம், ஆட்கள் இருந்தா தான் வெற்றி கிடைக்கும் என்றார்.
தமிழ் சினிமா குறித்து தேஜா கூறுகையில், "எனக்கு தமிழ் படங்கள் ரொம்ப பிடிக்கும். 'கஜினி', 'அந்நியன்' படங்கள் என்னை ரொம்ப இன்ஸ்பைர் பண்ணுச்சு. ஜெயிலர், லியோ படங்கள்லாம் தியேட்டர்ல பார்த்தேன். விஜய் சார் படங்கள்னா ரொம்ப பிடிக்கும்" என்றார். மேலும், தான் பான் இந்தியா ஸ்டார் ஆக ஆசைப்படவில்லை என்றும், நல்ல கதைகளைச் சொல்லவே விரும்புவதாகவும் தேஜா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











