»   »  பிரஷாந்த்துக்கா இப்படி?:தியாகராஜன் வேதனை பேட்டி

பிரஷாந்த்துக்கா இப்படி?:தியாகராஜன் வேதனை பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

-ஷங்கர்

கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்ற உண்மை, என் மகன் பிரஷாந்த்துக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும், சமூகத்தில் எங்கள் குடும்பத்திற்கு கெட்ட பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக அமைதியாக இருந்தோம். ஆனால் வக்கீல் ஒருவரின் பேச்சைக் கேட்டு கிரகலட்சுமி பொய் புகார் கொடுத்ததால்தான் இப்போது இதை வெளியே சொல்கிறோம் என்று பிரஷாந்த்தின் தந்தை தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கிரகலட்சுமியிடமிருந்து விவாகரத்து கோரி புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார் பிரஷாந்த். ஏற்கனவே தனக்குத் திருமணமான உண்மையை மறைத்து மோசடி செய்து, கிரகலட்சுமி தன்னைத் திருமணம் செய்ததை ஒரு புகாராக போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.

இதையடுத்து விசாரணையில் இறங்கிய மாநகர காவல்துறை, பிரஷாந்த் கொடுத்த புகாரில் உண்மை இருப்பதைக் கண்டறிந்தனர். சார்பதிவாளர் அலுவலக சான்றிதழ்கள் மற்றும் பதிவேடுகள், கிரகலட்சுமியின் முதல் திருமணத்திற்கு கையெழுத்து போட்ட சாட்சிகள் என அனைத்துமே உண்மைதான் என தெரிந்து விட்ட நிலையில், முதல் கணவரான வேணு கோபால் பிரசாத்தை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக உள்ளனர்.

இந் நிலையில், இதுவரை நடந்த விஷயங்கள் குறித்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வந்த பிரஷாந்த்தின் தந்தை தியாகராஜன் முதல் முறையாக தட்ஸ்தமிழ் செய்தியாளரிடம் மனம் விட்டுப் பேசினார்.

தியாகராஜன் நம்மிடம் பகிர்ந்து கொண்டது ...

நடந்த சம்பவங்களை நினைத்து நாங்கள் ஒவ்வாரு நாளும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இத்தனை நாள் என் மகன் காத்திருந்தது, இப்படி ஒரு கல்யாணம் செய்து கொள்வதற்காகவா என்று நான் வருத்தப்படாத நாளே இல்லை.

திரையுலகில், இதுவரை எந்தப் பெண்ணோடும், நான் கிசுகிசுக்கப்பட்டது கிடையாது. ஒரு வேளை அப்படி ஏதும் வந்திருந்தாலும், அது எனக்குத் தெரியவில்லை. ஆனால், என் மகன் பிரஷாந்த்தைப் பற்றி பத்திரிக்கையாளர்களாகிய உங்களுக்கே நன்கு தெரியும். அவன் ஒரு வெள்ளை சுவர் மாதிரி, தூய்மையானவன்.

எந்த நடிகையோடும் தவறாக பழகியதில்லை. வேறு எந்தப் பெண்ணோடும் எப்போதும் நட்பு வைத்துக் கொண்டதில்லை. ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கிற மாதிரி தான் உண்டு, தனது வேலை உண்டு என்று போய் வந்து கொண்டிருப்பவன் பிரஷாந்த்.

ஒரு நல்ல குடும்பத்தில் நல்ல பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காகத்தான், ஆறேழு வருடங்களாக காத்திருந்து, கிரகலட்சுமி வீட்டில் சம்பந்தம் செய்தோம்.

அந்தப் பெண்ணின் குடும்பம் பெரிய குடும்பம் என, நல்ல குடும்பம் என பேசப்பட்டதால் வேறு எதைப் பற்றியும் நாங்கள் விசாரிக்கவில்லை. அப்படி விசாரிப்பதை அவமானம் என்று கருதினோம்.

திருமணத்திற்குப் பிறகுதான், அந்தப் பெண்ணைப் பற்றிய பல்வேறு அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வந்தன. அதை கோர்ட்டிலேயே கூட ஒருமுறை சொல்ல வேண்டி வந்தது. அந்தப் பெண்ணுக்கு குடிப்பழக்கம் கூட இருந்திருக்கிறது.

என்னைப் பொருத்தவரை ஒரு குடும்பம் என்பது கட்டுக்கோப்பாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும். என் மகள், மகன் இருவரையும் அப்படித்தான் வளர்த்து வைத்திருக்கிறேன். தாய், தந்தையை பெரிதாக மதிக்கிறவன் என் மகன்.

ஆனால் அதையே என் மகனுக்கு எதிராக திருப்பி ஏதோ எங்கள் பேச்சை கேட்டுக் கொண்டு மனைவியை துன்புறுத்துவது போல ஒரு நாடகம் ஆடினார்கள். அதற்குப் பிறகும் கூட அந்தப் பெண்ணின் வாழ்க்கை கெட்டுப் போய் விடக் கூடாது என்றும், குடும்ப மானம் வெளியில் சிரிப்பாய் சிரித்து விடுமே என்பதற்காகவும் பொறுமையாக இருந்தோம்.

பிரிந்து போன பெண்ணை திரும்ப அழைத்து வந்து, குடித்தனம் நடத்தவும் பிரஷாந்த் தயாராக இருந்தான். ஆனால், ஒரு வக்கீலின் பேச்சைக் கேட்டுக் கொண்டு எப்போது அந்தப் பெண் எங்கள் குடும்பத்தின் மீது பொயயாக, வரதட்சணை, கொலை மிரட்டல் வழக்கு தொடர்ந்தாரோ, அப்போதே, இனி இப்டி ஒரு பெண், நமது குடும்பத்துக்குத் தேவையில்லை என்று முடிவு செய்து விட்டோம்.

கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட உண்மை, பிரஷாந்த்துக்கு சில மாதங்களுக்கு முன்பே தெரியும். ஆனால் அப்போதும் கூட அவர் இதை வெளியில் சொல்லி அப்பெண்ணை அவமானப்படுத்த வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் இப்போது எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று மனம் வெதும்பிப் போய் சொன்னார் தியாகராஜன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil