»   »  சினிமா ரொம்ப கஷ்டமப்பா.. திருமா

சினிமா ரொம்ப கஷ்டமப்பா.. திருமா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹீரோவாக நடிப்பதும், சினிமா தயாரிப்பதும் ரொம்பக் கஷ்டமான வேலை என்று பிரமிக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், அன்புத்தோழி படத்தின் புரட்சி நாயகனுமான தொல்.திருமாவளவன்.

தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரி ஒரு காலத்தில் தீவிரமாகப் போராடியவர் திருமா. திரையுலகினருக்கு திருமாவும், ராமதாஸும் சிம்ம சொப்பனமாக விளங்கினார்கள்.

அதே சினிமாவில் திருமா நடிகராக களம் புகுந்தபோது அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டார்கள். அன்புத்தோழி படத்தில் புரட்சி வீரனாக நடித்துள்ளார் திருமா.

நண்பர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று நடிக்க வந்திருப்பதாகவும், இதுவே முதலும், கடைசியும் என்று அப்போது விளக்கினார் திருமா. நீண்ட இழுபறிக்குப் பின்னர் அன்புத்தோழி ஒரு வழியாக முடிந்து விட்டது.

படத்தின் டிரைலர் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. அப்போது திருமா பேசுகையில், இது வழக்கமான சினமாப் படம் அல்ல. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் சோகத்தையும், அவலத்தையும் வெளிக்காட்டும் படம்.

ஈழப் போரை பின்புலமாகக் கொண்டுதான் இதன் கதைைய அமைத்துள்ளனர். சுய நலவாதிகளைத் தவிர்த்து விட்டு பிற தமிழர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் கண்ணில் உதிரத்தை உதிர வைக்கும்.

ஈழத்தில் வாடிக் கொண்டிருக்கும் நமது சகோதரர்களுக்கு தமிழர்கள் அனைவரும் இணைந்து ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும். சோகம் துடைக்க தோள் கொடுக்க வேண்டும்.

இந்தப் படத்தில் நான் புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக போராடும், குரல் கொடுக்கும் புரட்சி வீரனாக நடித்துள்ளேன். இந்தப் படத்தில் நடிக்க எனக்கு சிரமமாக இல்லை. இயல்பிலும் கூட நான் புரட்சிக்காரன்தான். எனவே இந்த வேடத்தில் நடிக்க அதிக சிரமப்படவில்லை.

படத்தின் டிரைலரைப் பார்த்த பின்னர் கவிஞற் அறிவுமதி என்னிடம் பேசுகையில், சில காட்சிகளில் எனது முகத்தில் வெட்கம் தெரிவதாக கூறினார். இருக்கலாம், முதல் படமாச்சே, வெட்கம் இருக்கத்தானே செய்யும்.

இருப்பினும் நடிக்கும்போது எனக்கு எந்தப் பயமும் வரவில்லை. வெட்கத்திற்கும், பயத்திற்கும் வித்தியாசம் உண்டு. தமிழ்க் கலாச்சாரத்தில் வெட்கத்திற்கு அனுமதி உண்டு, அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.

ஆனால் சவால்களை சந்திக்க பயப்படுபவர்களை தமிழ்க் கலாச்சாரம் விரும்பாது. எந்தவிதமான போர்க்களத்திலும் கூட பயப்படாதவன் என்ற தற்பெருமை எனக்கு உண்டு. அதற்காக நான் பெருமிதப்படுகிறேன்.

ஷூட்டிங் தொடங்கிய ஆரம்ப நாட்களில திரையுலகின் மொழி, பழக்க வழக்கம் புரியாமல் அவதிப்பட்டேன். ஆனால் இப்போது நிறையக் கற்றுக் கொண்டு விட்டேன். நாயகர்கள் சந்திக்கும் அவதிகளை என்னால் உணர முடிகிறது.

ஜாலியாக நடித்துக் கொடுத்து விட்டு நிறைய சம்பாதிக்கிறார்கள் என்றுதான் நான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது நடிப்பின் சிரமம், நடிகர்களின் வலியை உணர முடிந்துள்ளது. சினிமா குறித்து நான் நினைத்த பல விஷயங்கள் தவறு என்பதை புரிந்து கொண்டுள்ளேன்.

நான் எங்கு சென்றாலும் எனது தோழர்கள் அன்புத்தோழி படம் குறித்துத்தான் விசாரித்தனர். இந்த எதிர்பார்ப்பை வெளிநாடுகளில் ஏற்படுத்திய பத்திரிக்கையாளர்களுக்கு குறிப்பாக இணைய தள பத்திரிக்கையாளர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

அப்புறம் படத்திற்கு கிடைத்த இன்னொரு விளம்பரம் ப்ரீத்தி வர்மா. அவர் பற்றிய செய்திள் சமீப காலமாக செய்தித்தாள்களை ஆக்கிரமித்துக் கிடக்கின்றன. ப்ரீத்தி வர்மா குறித்த செய்தியைப் படிக்காமல், கேட்காமல் வேறு செய்தியைப் படிக்க முடியாது. அந்த அளவுக்கு ப்ரீத்தி வர்மா குறித்த செய்திகள் அதிகம் இருந்தன. இதுவும் அன்புத்தோழி படத்துக்கு இலவச விளம்பரமாக அமைந்து விட்டது.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் சொல்லிக் கொள்கிறேன். இந்தப் படம் வெற்றி அடைந்தால்,தொடர்ந்து நான் ஹீரோவாக, அதாவது தொழில் முறை ஹீரோவாக நடிப்பேன் என்றார் திருமா. தொடர்ந்து நடிப்பேன் என்று திருமா சொன்னபோது அரங்கத்தில் எழுந்த கைத்தட்டல் அடங்க நெடு நேரமாயிற்று.

முன்னதாக திருமா, படத்தின் டிரைலரை வெளியிட, நாக்ரவி அதை பெற்றுக் கொண்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil